Saturday, February 2, 2013


விண்வெளியில் உலா -விர்கோ கொத்து விண்மீன் கூட்டங்கள்

விர்கோ வட்டாரத்தின் மற்றொரு சிறப்பு அங்கு எங்கும் நிறைந்திருக்கும் கொத்து விண்மீன் கூட்டங்களாகும்.இவற்றை விர்கோ கொத்து விண்மீன் கூட்டம் என்றே அழைக்கின்றார்கள் .விர்கோ வட்டாரத்தில் எப்சிலான் ,டெல்ட்டா ,காமா,ஈட்டா ,பீட்டா மற்றும் உமிகிரான் வெர்ஜினியஸ் விண்மீன்கள் அமைந்த மேற்புறப் பகுதியில் 2500 க்கும் மேற்பட்ட அண்டங்கள் உள்ளன .இவற்றின் மையம் நம்மிடமிருந்து 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது .செம்பெயர்ச்சியை அளவிட்டு இந்த அமைப்பு முழுவதும் நம்மிடமிருந்து 1200 கிமீ /வி என்ற வேகத்தில் விலகிச் செல்வதாகக் கண்டறிந்துள்ளனர் இவற்றிலுள்ள மிகப்  பிரகாசமான அண்டம் கூட தோற்ற ஒளிப் பொலிவெண் 10 கொண்டதாக இருப்பதால் இவற்றைச் சாதாரணமான தொலை நோக்கியால் பார்க்க இயலாது .2500 அண்டங்களில் குறைந்தது 150 மிகப் பெரியவை .

விர்கோ கொத்து விண்மீன் கூட்டங்கள் பேரண்டத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டு மேலாதிக்கம் செலுத்தி வருகின்றன .பொருண்மை ஒரு பக்கம் அதிகமாகச் செரிவுற்றிருப்பதால் நமது அண்டத்திலுள்ள துணை அண்டங்கள் யாவும் இதன் வலிமையான ஈர்ப்பினால் கவரப்படுகின்றன. இதை' விர்கோவின் உறிஞ்சுதல்' என்பர்

விர்கோ கொத்து விண்மீன் கூட்டங்களின் மையத்தில் M .84 (NGC 4374),M .86 (NGC 4406),M .87 (NGC 4486) என்று பதிவு செய்யப்பட்ட,நீள் கோள் வடிவ மாபெரும் அண்டங்கள் உள்ளன .இவை சிறு சிறு அண்டங்களின் சேர்க்கையினால் உருவாகியிருக்கலாம் என்று கூறுகின்றார்கள் .

M.49 (NGC 4472),M.59 (NGC 4621),M.60 (NGC 4649), போன்றவை நீள் கோள் வடிவ அண்டங்களாகும்.M.58 (NGC 4579) M.61 (NGC 4303),M.90 (NGC 4569) போன்றவை சுருள் புய அண்டங்களாகும் .M.104 (NGC 4594) Sc வகை சுருள் புய அண்டம், மையத்தில் மிகப் பெரிய அளவில் பருத்த பகுதியைக் கொண்டுள்ளது. இதில் பல நூற்றுக் கணக்கில் கோளக் கொத்து விண்மீன் கூட்டங்கள் உள்ளன.50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சோம்ரிரோ (Sombrero) அண்டம் என அழைக்கப்படுகின்ற இதன் மையத்தில் குறுக்காக இருண்ட வரித் தடம் காணப்படுகின்றது .வெளியேறும் ஒளி தூசிகளினால் எதிரொளிக்கப் படுவதால் அப்பகுதி இருண்டு உள்ளது.இதனால் இவ்வண்டம் மெக்சிகன் தொப்பி போலக் காட்சி தருகின்றது .இவ்வண்டம் 1781 ல் பியரி மெக் கெயின் என்பாரால் கண்டுபிடிக்கப்பட்டது .1912 ல் வெஸ்டோ ஸ்லிப்கெர் (Vesto Slipker ) என்பாரால் இதற்கு மிக அதிகமான செம்பெயர்ச்சி இருப்பதும் ,அதிகமான தற்சுழற்சி இயக்கம்

இருப்பதும் அறியப்பட்டது.விரிவான ஆராய்ச்சிகள் ,இந்த அண்டம் மங்கலான மிகவும் விரிந்த அண்ட வட்டத்தையும் (halo),மையத்தில் மிகவும் நிறைமிக்க கருந்துளை விண்மீன்களையும் கொண்டிருப்பதை தெரிவித்துள்ளன .இது உண்மையில் விர்கோ கொத்து விண்மீன் கூட்டத்தில் ஒன்றாக இல்லை.பிற கொத்து விண்மீன் கூட் டங்கள் எல்லாம் விர்கோ வட்டாரத்திலுள்ள அகன்ற கோப்பை போன்ற பகுதிக்குள் செறிவுற்றிருக்க M.104 மட்டும் அதற்கு வெளியே விர்கோ மற்றும் கோர்வஸ் வட்டாரங்களுக்கு ஓரளவு இடையில் அமைந்திருக்கின்றது

நீள் வட்ட வடிவ பெரிய அண்டமான M .87 ன் விட்டம் சுமார் 120,000 ஒளி ஆண்டுகள் .இது நமது பால் வழி மண்டலத்தை விடவும் அதிகம்.ஹபுளின் வகைப் படி இது E 0 அல்லது E 1 வகை அண்டமாகும்.அதாவது M.87 சற்றேறக் குறைய கோள வடிவமானது எனலாம் .இதன் நிறை ,சூரியன் நிறை அலகில் 2-3 x 10 12 ஆகும்.அண்மைக் கால ஆய்வுகள் M.87 ஏற்கனவே அறியப்பட்ட கோள வடிவப் பகுதியை விடவும் விரிந்து தட்டையான கோளமாக உள்ளதைக் காட்டியுள்ளன.இதன் எல்லையுள்ள புற மண்டல ப் பகுதி சீர்குலைந்துள்ளது.அருகாமையிலுள்ள விர்கோ கொத்து அண்டங்களின் ஈர்ப்பும், புற வெளியிலிருந்தும் ,அருகிலுள்ள விண்மீன்களிலிருந்தும் வளிமங்களையும்,தூசிகளையும் உட்கவர்ந்து விழுங்குவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றார்கள் .M.87,10000 க்கும் அதிகமான கோளக் கொத்து விண்மீன் கூட்டங்களைப் பெற்றுள்ளன .M.87 நமது பால் வழி மண்டலத்தைப் போல 150-200 மடங்கு பெரியது .கண்ணைக் கவர்வது போல ஒரு பீற்று வளியை இதன் மையத்திலிருந்து 5000 ஒளி ஆண்டுகள் தொலைவு வரை விரிந்திருக்குமாறு உமிழ்கின்றது .மற்றொரு மிதமான பீற்றுவழி இதற்கு எதிர் பக்கத்தில் காணப்படுகின்றது .ஹபுள் தொலை நோக்கி இதன் செறிவு மிக்க உள்ளகம் 60 ஒளி ஆண்டுகள் வரை என்றும் வளிமத்தாலான ஒரு சேர்மானத் தட்டு (accretion disk) இதைச் சுற்றி அமைந்துள்ளது என்றும்,இது மிக விரைவாகச் சுற்றி வருகின்றது என்றும் தெரிவித்துள்ளது.

இது மிக விரைவாகச் சுற்றி வருகின்றது என்றும் தெரிவித்துள்ளன ,M .87 உள்ளகத்தில் நிறைமிக்க கருந்துளை விண்மீன் இருக்கலாம் என்று நம்புகின்றார்கள் ..1954 ல் வால்டர் பாடே (Baade )மற்றும் ருடோல்ப் மின்கோ விஸ்கி ,இது ஒரு வலிமையான ரேடியோ மற்றும் எக்ஸ் கதிர் மூலமாக இருப்பதைக் கண்டுபிடித்தனர் இது அதன் உள்ளகத்தில் ஒரு கருந்துளை

விண்மீன் இருக்க வேண்டும் என்று உறுதிப் படுத்தியுள்ளது ..

இந்த வட்டாரத்தில் 70 வெர்ஜினியஸ் என்றொரு விண்மீனை அறிந்துள்ளனர் .80 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள இது நமது சூரியனைப் போல கோள்களைப் பெற்றிருக்கலாம் எனக் கூறுகின்றார்கள் .இதன் அருகாமையிலுள்ள ஒரு கோள் நமது வியாழனைப் போல் 6.5 மடங்கு நிறையுடன் 73 மில்லியன் கிமீ ஆரமுடைய வட்டப் பாதையில் இயங்கி வருவதாகவும் அறிந்துள்ளனர்.

No comments:

Post a Comment