Monday, February 18, 2013


விண்வெளியில் உலா -கானெஸ் வெனாடிசி

தோலாலான வாரினால் கட்டப்பட்டு,மந்தைக்குரியவரான பூட்டெஸ்ஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இரு வேட்டைநாய்களாக இவ்வட்டாரம் கற்பனை செய்யப்பட்டுள்ளது .1687 ல் ஜோகன்ஸ் ஹெவிலியஸ் என்பாரால் இது உருவாக்கப்பட்டது .இதற்கு முன்னர் இது அர்சா மேஜர் வட்டாரத்தில் ஒரு பகுதியாக இருந்தது .

ஒரு காலத்தில் ஆல்பா காணும் வெனாடிகோரம்,கோர் கரோலி (Cor caroli) என்று அழைக்கப்பட்டது .இதன் அர்த்தம் 'சார்லஸ்ஸின் இதயம் ' என்பதாகும் .தன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிக்குப் பழி வாங்க இங்கிலாந்தை ஆண்ட இரண்டாம் சார்லஸ் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார் .பழிவாங்கிய இதயத்தை எட்மண்ட் ஹாலி என்ற வானவியலார் வானத்தில் பெரிய கரடியின் வால் பகுதிக்குக் கீழே கீரிடத்துடன் கூடிய இதயமாகப் பதித்து விட்டார் என்று சிலர் கூறுவார்கள் .ஆனால் இக்கதை நெடுநாள் நீடிக்கவில்லை .

இவ்வட்டாரத்தில் 30 விண்மீன்களை இனமறிந்துள்ளனர் .82 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஆல்பா காணும் வெனாடிகோரம் ஓர் அழகான இரட்டை விண்மீனாகும் .இதன் முதன்மை விண்மீன் 2.9 ஒளிப்பொலிவெண் கொண்ட வெண்மீனாகும்.20 வினாடிகள் கோண விலக்கத்திலுள்ள இதன் துணை விண்மீன் 5.6 ஒளிப்பொலி வெண் கொண்ட வெண்மை கலந்த மஞ்சள் நிற விண்மீனாகும் .இவை ஒவ்வொன்றும் நிறமாலை இரட்டை விண்மீன்களாகும்.மிக நெருக்கமாக இருப்பதால் தொலை நோக்கியால் பகுத்து உணரமுடிவதில்லை.நிறமாலை மூலமே அறிந்து கொள்ள முடிகின்றது. மற்றொரு விந்தை என்ன வென்றால் ஆல்பா காணும் வெனாடிகோரம் ஒரு மாறொளிர் விண்மீனாக உள்ளது .மேலும் இந்த விண்மீன் மிக வலுவான காந்தப்புலத்தைப் பெற்றுள்ளது .இது நமது சூரியனின் காந்தப் புலச் செறிவை விட 80-100 மடங்கு அதிகமானது.இக் காந்தப்புலமும் 25 சதவீதம் ஏற்றத்தாழ்வுடன் தொடர் மாறுதலுக்கு உட்பட்டிருக்கின்றது.

இவ்வட்டாரத்தில் M 51(NGC 5272) என்று பதிவு செய்யப்பட்ட ஓர் அண்டமுள்ளது .1773 ல் மெர்சியரால் இனமறியப்பட்ட இதை நீர்ச்சுழல் (Whirlpool) அண்டம் என்று அழைக்கின்றார்கள் .இது அர்சா மேஜர் வட்டாரத்தில் அகப்பைக் கைப்பிடியின் நுனியிலுள்ள ஈட்டா அர்சா மேஜோரிஸ்சுக்கு தென் மேற்கில் உள்ளது .25 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள இதன் மேற்பரப்பு முழுவதும் முழுமையாத்        தெரிகின்றது .சுருள் புயத்தின் விளிம்பில் ஒரு பருத்த திரள்சி காணப்படுகின்றது .இச் சேர்க்கை இயல்பான சுருள் புய அண்டங்களின் கட்டமைப்பிலிருந்து பெரிதும் வேறுபட்டிருக்கின்றது..

1781 ல் பியரி மெக்கயின் என்பார் இவ்வண்டத்திற்கு அருகாமையில் ஒரு துணை அண்டமொன்று இருப்பதைக் கண்டறிந்தார் .இது NGC 5195 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் M .51 ன் சுருள் புய அமைப்பு சீர்குலைக்கப்பட்டு மாற்றம் பெற்றுள்ளது என்று கூறுகின்றார்கள் .M .51 ன் சராசரி ஒளிப் பொலி வெண் 8.9.இதன் முதன்மை அண்டம் நமது பால்வழி அண்டத்தின் விட்டத்தில் 5 ல் ஒரு பங்கு விட்டமுள்ளது .துணை அண்டம் இதிலிருந்து 14 நிமிடங்கள் கோண விலக்கத்துடன் அமைந்துள்ளது.இவ்விரு அண்டங்களும் நம்மை விட்டு 426 கிமீ /வி என்ற வேகத்தில் விலகிச் செல்வதாக,அதன் செம்பெயர்ச்சியைக் கொண்டு மதிப்பிட்டுள்ளனர் .

M .51 க்கும் தென் மேற்கில் கானஸ் வெனாடிசி வட்டாரத்தின் 20 காணும் வெனாடிகோரம் என்ற விண்மீனுக்கு அருகாமையில் M .63 ( NGC 5035) என்று பதிவு செய்யப்பட்ட சூரிய காந்திப் பூ அண்டம் உள்ளது .31000 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள இது ஒரு சுருள் புய அண்டமாகும் .

No comments:

Post a Comment