Wednesday, February 27, 2013

Sonnathum Sollathathum-15


சொன்னதும் சொல்லாததும் -15


வேதியியல் துறையில் இரு முறை நோபெல் பரிசு பெற்ற ஒரேயொருவர் பெடரிக் சேனர் (Frederick Sanger) என்ற இங்கிலாந்து நாட்டு உயிர் வேதியியல் விஞ்ஞானியாவார்.1918 ல் பிறந்த இவர் 1956 ல் புரோட்டீன்,குறிப்பாக இன்சுலினின் கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புக்காக ஒரு முறை தனித்தும் 1980 ல் நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடர் தொடர்பான உண்மைகளைக் கண்டுபிடித்ததற்காக மறு முறை இருவரில் ஒருவராகவும் நோபெல் பரிசு பெற்றார் .

இவருடைய தந்தையார் மருத்துவத் துறையில் இருந்தார்.அதனால் பெடரிக் சேனருக்கு ஆரம்பத்தில் தந்தையாரைப் போல மருத்துவராக வரவேண்டும் என்ற விருப்பம் இருந்தது .ஆனால் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து கற்கத் தொடங்கியபின் அவர் அவருக்கு உண்மையிலேயே எத் துறையில் விருப்பம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார். தன்னுடைய விருப்பத்திலும் ,செயல்பாடுகளிலும் சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் வாய்ப்பு நிச்சியமாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை மட்டுமே கொண்டு வாழ்க்கை முழுதும் செயல்படும் தந்தையாரின் மருத்துவத் துறை தராது என்பதைப் புரிந்து கொண்டார்.அதன் பின்னர் உயிரி வேதியியல் துறையில் அவரது ஆர்வம் வெளிப்பட்டது .

“புகழ் ஈட்டவேண்டும் ,பொருள் குவிக்கவேண்டும் என்பதற்காக நாங்கள் ஆராச்சியில் ஈடுபடவில்லை.ஆர்வமும்,மன மகிழ்ச்சியும் கொண்டிருப்பதாலும் ,மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று முழுமையாக நம்புவதாலும்,இப் பணியில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம் என்றே நான் நம்புகின்றேன்” என்றும்நானும் என் தோழர்களும் மெய்யறிவைப் பெறுவதில் நாட்டம் கொண்டு செயல்படுகிறோம்” என்றும் அடிக்கடி கூறுவார்

அறிவியல் ஆராய்ச்சி என்பது மிகவும் பிரமிப்பூட்டுவது,உறுதியான வெகுமதி தரக்கூடிய ஒரு அற்புதமான பணி .அதில் உண்மையாக ஈடுபடுபவர்கள் மட்டுமே இந்த ஆனந்தத்தை அளவில்லாமல் பெறுவார்கள் என்று அறிவியல் ஆராய்ச்சி பற்றி பெருமைபடப் பேசுவார்.

இந்தியாவில் ஆராய்ச்சிகள் எல்லாம் இரண்டாம் தரமாக இருக்கின்றன.ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் தரத்தால் மிகவும் பின்தங்கியுள்ளன. உயர் ஆராய்ச்சிகளுக்கான கட்டமைப்புகள் விரிவாகவும்,உண்மையான நோக்கத்தின் அடிப்படையிலும் ஏற்படுத்தப் படுவதோடு ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தலும் வேண்டும் .

சுயமாக தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்ட ஒரு சில விஞ் ஞானிகளும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள் .காலங் கடந்து உணர்ந்து கொண்ட இந்திய அரசு அவர்களை எல்லாம் இந்தியாவிற்கு அழைத்து வர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது .அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட உண்மையான செயலாக வும் ,விஞ்ஞானிகள் தன்னிச்சையாகச் செயல்பட வாய்ப்பும் கொடுக்கப்பட்டால் முன்னேற்றப் பாதையில் நாம் ஓரடி முன்னுக்குச் செல்லலாம்.

No comments:

Post a Comment