Tuesday, February 19, 2013

Sonnathum Sollathathum-14


சொன்னதும் சொல்லாததும் -14

ரிச்சர்டு பிலிப்ஸ் பைன்மன் (Richard Phillips Feynman )

அமெரிக்க நாட்டில் 1918- 1988 ல் வாழ்ந்த ஒரு கொள்கை இயற்பியலார் ஆவர் .மிகைப் பாய்மம் (Superfluidity ),குவாண்டம் எலெக்ட்ரோ டைனாமிக்ஸ் (QED ) போன்ற கண்டுபிடிப்புகளினால் புகழ் பெற்றவர்.QED ல் இவர் கண்டறிந்த உண்மைகளுக்காக 1965 ல் இயற்பியலுக்கான நோபெல் பரிசை பகிர்ந்து கொண்டார் .இவரே நுண்துகளின் பண்புகளைக் குறிப்பிடும் கணிதத் தொடர்புகளை வரைபட வடிவில் காட்டமுடியும் என்பதை நிறுவியவர் .உலகில் மிகச் சிறந்த 10 விஞ்ஞானிகளுள் பைன்மன் ஒருவராகத் திகழ்ந்தார்.

ஒரு முறை பிரின்ஸ்டன் மாணவரான பைன்மன் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றபோது அது ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது .அதனால் அவர் அணுகுண்டு வெடிப்பு சோதனை தொடர்புடைய மன்காட்டன் புராஜெக்ட் டில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் .

கணக்கில் சிறுவயது முதற்கொண்டே ஆர்வம் கொண்டதால் அவரால் பிற்காலத்தில் கொள்கை இயற்பியலில் சிறந்து விளங்கமுடிந்தது.ஐன்ஸ்டீன் பிடிலில் ஆர்வம் கொண்டதைப்  போல இவர் டரம்மில் ஆர்வம் கொண்டிருந்தார் .இசை ஞானம் என்பது மனதை ஒருமுகப் படுத்தி சுயமாக சிந்திக்கத் தூண்டும் வலிமையான நெம்புகோல்.இசை என்பது இயற்கையின் மொழி என்பதால் அதற்கு அப்படியொரு சக்தி உண்டு என்பதை வெகு சிலரே அறிவர் .ஒரு முறை இவருடைய நண்பரும் இயற்பியலாருமான ப்ரீமன் டைசன் (Freeman Dyson ) இவரைப் பற்றிக் குறிப்பிடும் போது 'அரை அறிவாளி அரைக் கோமாளி " என்று வர்ணித்தார் .ஆனால் பின்னாளில் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு 'முழு அறிவாளி முழுக் கோமாளி ' என்று கூறினார் .

பைன்மன் கொள்கைவாதியாக இருந்தபோதிலும் சோதனைக்குப் புறம்பான கொள்கைகளை ஒப்புக் கொள்ளமாட்டார் . தன்னுடைய பேச்சுக்களில் இதுபற்றிக் கூறுவதுண்டு .'கொள்கை மிகப் பிரமாதமாக இருக்கலாம் ,அதைச் அதைச் சொல்லும் நபர் திறன் மிக்கவராக இருக்கலாம் ஆனால் சோதனையோடு ஒத்துப்போகாவிட்டால் அது தவறானது மட்டுமில்லை வேண்டாததுமாகும்’ என்று கூறுவார்.

ஒரு சிறந்த அறிஞனாக வருவதற்கு அவர் ஒரு வழி சொல்லுவார் – ‘முதலில் நீ உன்னையே முட்டாளாக்கிக் கொள்ளாதிருக்க வேண்டும். ஏனெனில் உனக்கு நீதான் மிக எளிதாக முட்டாளாகக் கூடியவன்’ என்பார்.

ஒரு விருப்பப் பணியைத் தேர்வு செய்த பின்னர், வேறு பணிகளில் ஈடுபட்டாலும் முதன்மைப் பணியில் கொண்ட ஆர்வத்தை சிறிதும் குறைத்துக் கொள்வதில்லை. இதுவே அவருடைய வெற்றிக்குக் காரணம் . 'எனக்குத் தெரியாமலே பிறந்தேன் .இங்கும்மங்கும் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்த எனக்கு கொஞ்ச காலம் மட்டுமே கிடைத்தது ' என்று இவர் கூறிய வார்த்தைகளில் அந்த உண்மை ஒளிந்திருக்கின்றது .

No comments:

Post a Comment