விண்வெளி உலா -2
புராணங்களில் பால்வழி மண்டலம்
மின் விளக்கு, நிலவு இவற்றின் ஒளி ஏதுமில்லாத இரவில் ஆகாயத்தை உற்று நோக்கினால் மூடுபனி போன்று ஒரு சீரற்ற வெண்ணிறப்
படுக்கை வானத்தில் ஓர் ஆறு போலக் காட்சியளிக்கும் .
இதையே பால்வழி மண்டலம் என்பர் . பால்வழி மண்டலம் என்பது ஓர் அண்டம் .ஓர் அண்டம் என்பது பத்தாயிரம் கோடிக் கோடி விண்மீன்கள் அடங்கிய ஒரு மாபெரும் விண்ணுருப்பு.பொதுவாக வெறும்
கண்ணால் மட்டும் பார்க்கக் கூடிய எல்லா விண்ணுருப்புகளும்
பால்வழி மண்டலத்தைச் சேர்ந்தன .நமது சூரியன் பால்வழி
மண்டலத்தில் இருக்கும் ஒரு விண்மீன் என்பதால், இது நமது
அண்டம் என்ற பெருமை கொண்டது.
பால் என்று பொருள் தரும் கிரேக்க மொழிச் சொல்லான 'gala ' என்ற வார்த்தையிலிருந்து அண்டத்திற்கான கலைச்சொல் உருவானது.
ஹீரா (Hera ) என்ற வன தேவதை ஹீராக்லஸ் (Heracles ) என்ற தன் குழந்தைக்குப் பாலூட்டும் போது சிந்திய பாலே பால்வழி
மண்டலமானது என்று கூறுவது கிரேக்க புராணங்கள் .
ரோமர்கள் ரோமாபுரியைத் தங்கள் உயிரினும் மேலாக மதித்தார்கள் . ரோமாபுரியை நோக்கிப் புனிதப் பயணத்தைஇரவுப் பொழுதில்
விண்ணில் தெரியும் பால்வழி மண்டலத்தின் பகுதியை ஒரு வழிகாட்டியாகக் கொண்டு மேற்கொண்டனர் என்பதால்,பால்வழி மண்டலத்தை இவர்கள் 'ரோமாபுரிச் சாலை ' என்றழைத்தனர் .
ஆசியாவின் மையப் பகுதியில் உள்ள நாடுகளிலும், ஆப்ரிக்க
நாடுகளிலும் பால்வழி மண்டலத்தை வைக்கோல் பிரி என்ற
சொல்லோடு தொடர்புபடுத்தப்பட்டு வர்ணிக்கப்பட்டது .
துருக்கி மற்றும் பால்டிக் கடலோர நாடுகள், யூரல் மலைச்
சாரலில் உள்ள நாடுகளில் இது பறவைகளின் பாதை என்று வர்ணிக்கப்பட்டது . பருவ மாற்றங்களுக்கு ஏற்ப புலம் பெயர்ந்து
நெடுந்தொலைவு பறந்து செல்லும் பறவைகள் பால்வழி
மண்டலத்தை இயற்கை வழிகாட்டியாகக் கொண்டு வழி தவறாது
கடந்து செல்கிறது என்பது இவர்களின் கருத்துக்கு அடிப்படையாகும் .
வடமொழியில் இது ஆகாய கங்கை என அழைக்கப்படுகிறது .
கங்கை என்றாலே சொர்க்கம் . பூமியில் ஓடும் கங்கை ஆறும்,
வானத்தில் தெரியும் பால்வழி மண்டலமும் ஒத்த மண் மற்றும்
விண் உறுப்புகளாக ஒப்பிடப்பட்டுள்ளன .
காகம் மற்றும் புறா வகையைச் சேர்ந்த மாக்பி (magpie ) போன்ற
பறவைகள் பருவ காலப் பாலத்தை பால்வழி மண்டலத்திற்குக்
குறுக்காக உண்டாக்கிக் காட்டுகின்றன என்ற ஒரு நம்பிக்கை
ஆசியாவில் உண்டு .சீனர்கள் ,பால்வழி மண்டலத்தை வெள்ளி
ஆறு (Silver river ) என்பர் . ஜப்பானியர்கள் இதைசொர்க்கத்தின் ஆறு
என்று குறிப்பிடுவர் .விண் படுகையிலுள்ள விண்மீன்களின் ஒப்பு நிலைகளைக்கொண்டு எப்பொழுது குளிர் காலம் தொடங்கும் என்று முன்கூட்டியே திட்டமிட்டதால் ,ஸ்வீடன் நாட்டினார் இதை குளிர்கால மரம்பயில் சாலை (winter avenue ) என்று விவரித்தனர் .
இன்றைக்கு வானத் தொலை நோக்கிகள் வந்த பிறகு விண்வெளிக் காட்சிகள் பெரிதும் மாறிப்போயிருக்கின்றன.. பால் வெளி மண்டலமே
பல அதிசயங்களையும் .விநோதங்களையும் வெளிக்காட்டியுள்ளது .
பேரண்டத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம் . இந்த விண்வெளி ஒரு திறந்த வெளி ஆய்வுக் கூடம் . விஞ்ஞானிகளுக்கு இது இயற்பியல் விளக்கம் கூறும் ,ஆன்மீக வாதிகளுக்கு மன அமைதியைக் கற்பிக்கும் .கவிஞர்களுக்கு கற்பனா சக்தியைவளப்படுத்தும் .
காதலர்களைக் கிளர்ச்சியூட்டும் ,குழந்தைகளை மகிழ்வூட்டும் .
No comments:
Post a Comment