Sunday, September 30, 2012


வேதித் தனிமங்கள் - டைட்டானியம் (Titanium ) -கண்டுபிடிப்பு 1791 ல் இங்கிலாந்து நாட்டின் மத போதகரான கிரேகோர் (W.Gregor) என்பார் அந்நாட்டின் மெனாக்சின்(Menaccin) கணவாய்ப் பகுதியிலிருந்து கிடைத்த ஒரு வகையான கருப்பு மணலை பகுத்தாராய்ந்து அதில் ஒரு புதிய தனிமம் இருப்பதை அறிவித்தார். இப் புதிய தனிமத்திற்கு மெனாக்சின் என்றும் கனிமத்திற்கு மெனாக்கொனைட் என்றும் பெயர் சூட்டிவிட்டார். இன்றைக்கு அக் கனிமத்தை இல்மனைட் (ilmanite) என்றும் தனிமத்தை டைட்டானியம் என்றும் அழைக்கின்றார்கள் . மார்டின் கலாப்ரோத் என்ற ஜெர்மன் நாட்டு வேதியியல் அறிஞர் 1795 ல் ஹங்கேரி நாட்டிலிருந்து பெற்ற ரூட்டைல் என்ற கனிமத்திலிருந்து டைட்டானியத்தைப் பிரித்தெடுத்தார்.டைட்டான் என்பது பூமியைக் குறிப்பிடும் காயியா (Gaea) என்ற கடவுளின் மகனாகும். சில ஆண்டுகளுக்குப் பிறகே கலாப்ரோத்தும் கிரேகோரும் கண்டுபிடித்தது ஒரே தனிமம் எனத் தெரிய வந்தது. 1895 ல் பிரான்சு நாட்டின் வேதியியல் அறிஞர் ஹென்றி மோய்சன் (Hendri Moissan) மின்வில் உலை (arc furnace) மூலம் டைட்டானியம் ஆக்சைடை ஹைட்ரஜனால் ஆக்சிஜனிறக்கம் செய்து ஏறக்குறைய தூய டைட்டானியத்தைப் பெற்றார். பண்புகள் இதன் வேதியியல் குறியீடு Ti ,அணுவெண் 22 ,அணு எடை 47.9 அடர்த்தி 4540 கிகி /கமீ,உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 1953 K ,3573 K ஆகும். டைட்டானியம் மிகச் சொற்ப அளவு தூய்மையற்று இருந்தாலும் அது உடைந்து நொறுங்கிப் பட்டறைப் பயன்களுக்கு உபயோகமாய் இருப்பதில்லை. தூய டைட்டானியம் குறைந்த அடர்த்தியும் மிகுந்த வலிமையையும் கொண்ட பிரகாசமான வெண்ணிற உலோகமாகும். பூமியில் அதிக அளவில் கிடைக்கும் தனிமங்களின் வரிசையில் இது 9 வது இடத்தைப் பெறுகிறது.செம்பு ,துத்தநாகம் ,ஈயம்,தங்கம் வெள்ளி, பிளாட்டினம்,மாலிப்பிடினம்,டங்க்ஸ்டன்,நிக்கல், டின் (வெள்ளீயம் ) இவற்றை விட பூமியின் புறவோட்டில் டைட்டானியம் அதிகமாகக் கிடைக்கிறது. அதைப் பிரித்தெடுக்கும் கடிய வழிமுறைகளினால் அது இன்றைக்கும் ஓர் அரிய உலோகமாகவே கருதப் படுகிறது . டைட்டானியம் அதிக அளவில் ஆஸ்திரேலியாவிலும் அடுத்தபடியாக அமெரிக்கா,இந்தியா ,பிரேசில் போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது. நம் நாட்டில் கேரளக் கடற்கரை மணலில் இல்மனைட் என்ற கனிமமாகக் கிடைக்கிறது. பயன்கள் டைட்டானியம் டை ஆக்சைடு வெள்ளை நிறமியாகும் .இது ஈய வெள்ளையைக் காட்டிலும் சிறப்பானது. ,நச்சுத் தன்மை கொண்டதில்லை. கடல் நீரினால் ஏற்படும் உலோக அரிப்பை டைட்டானியம் பூச்சு தவிர்க்கிறது.இது தோல் மற்றும் துணிகளுக்குச் சாய மிடுதலிலும்,கண்ணாடி,பீங்கான்,செயற்கை ரத்தினங்கள் (போலி) இவற்றின் உற்பத்தி முறையிலும் பயன்படுகிறது. சிர்கோனியா மற்றும் ஸ்ட்ராண்டியம் டைட்டானேட் போலி வைரங்கள் தயாரிக்கப் பயன்தருகின்றன.ஸ்ட்ராண்டியம் டைட்டானேட் டின் ஒளி பகுப்புத் திறன் அதிகமாக இருப்பதால் பட்டை தீட்டப் பட்ட ஸ்ட்ராண்டியம் டைட்டானேட் அதிகமாகச் ஜொலிக்கிறது உயர் வெப்பநிலையிலும் டைட்டானியம் ஆக்சைடு நிலைப்புத் தன்மை மிக்கதாக இருக்கும் (உருகு நிலை 1800 C ) .மெதுவாக வேதி வினைகளில் ஈடுபடுவதற்குக் காரணம் நான்கு இணைதிறன் கொண்ட டைட்டானியம் அயனி இரண்டு இணைதிறன் கொண்ட ஆக்சிஜனுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதுதான். டைட்டானியம் ஆக்சைடு அடர் கந்தக அமிலம் ,அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலம் ,காரக் கரைசல்கள், கரிமக் கரைப்பான்களில் கரைவதில்லை.ஆனால் டைட்டானியம் மென் அரிப்பு மூலங்களை மட்டுமே எதிர்க்கிறது.அலுமினியம் போல ஒரு ஆக்சைடு படலத்தை காற்று வெளியில் ஏற்படுத்திக் கொள்வதே இதன் காரணம் பூமியை விடச் சந்திரனில் டைட்டானியம் ஆக்சைடு அதிகமாய் உள்ளது .உயர் வெப்ப நிலையில் டைட்டானியம் ,ஆக்சிஜன் ,நைட்ரஜன், குளோரின் மற்றும் பிற அலோகங்களுடன்வினையாற்றுகிறது. .நீர்த்த அமிலங்களில் கூட கரைந்து விடுகிறது

No comments:

Post a Comment