Thursday, December 13, 2012

creative thoughts


அறிவு

*எது பயன்படுத்தப் படாமல் இருக்கிறதோ அதைக் காலப் போக்கில் நாம் நிரந்தரமாக இழக்க நேரிடும். இது நம் உடமைகளுக்கு மட்டுமின்றி அறிவுக்கும் திறமைக்கும் கூடப் பொருந்தும் .

*பயன்பாட்டில் எந்த வேறுபாட்டையும் காண முடியாததால், முற்றும் கற்றுத் தேர்ந்து அதைப் பயன்படுத்தாமல் இருக்கும் அறிஞனும்,ஒன்றும் கல்லாத மூடனும் ஒன்றுதான்..

*தொடந்து புத்தியைத் தீட்ட வில்லை யென்றால் புத்தியை வேறு எங்கோ பரி கொடுத்து விட்டாய் என்று அர்த்தம்.

*என்ன தெரியும் என்பதை விட என்ன தெரியாது என்பதைத் தெரிந்து வைத்திருப்பது புத்திசாலிகளுக்கு அழகு.

*இப்போது இருக்கின்ற அறிவையும் திறமையையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விட்டால் பயன்படுத்திக் கொள்ளப்படாத அந்த அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் தூண்டப்படுவதில்லை

*சில பழைய கருத்துக்களை நாம் முற்றுமாக மறந்துவிடலாகாது .அவற்றை மீண்டும் அசைபோட்டு ச் சிந்தித்துப் பாத்தால் ,நாம் எவ்வளவு நல்ல பல விசயங்களை இழந்துவிட்டோம் என்பது தெரிய வரும்.

*என்றைக்காவது பயன்படும் என்று அறிவைத் தேக்கி வைத்திருப்பவனுக்கு எப்பொழுது அறிவு பயன்பட வேண்டும் என்று முயல்கின்றானோ ,அந்த இக்கட்டான கட்டத்தில்  பயன்படாமலேயே போய் விடும்

*அறிவுரை கூறுகின்றோம் என்றால் கெட்டுப்போனவன் திருந்துவதர்க் காக இல்லை நல்லவன் கெட்டுப் போய்விடாமல் பாதுகாக்கவே .கெட்டுப் போனவன் வெறும் அறிவுரை மூலம் திருந்தும் வாய்ப்பு குறைவு அவனுடைய அனுபவங்களே அவனுக்குப் பாடம் புகட்டினால் தான் அவன் திருந்த  முடியும்.  .  

*சுய எண்ணங்களில் பிடித்தம் அதிகமாகிவிட்டால் பிறருடைய கருத்துக்களில் கவனம் செலுத்துவதில்லை .அதனால் அறிவுரைகளைச் செவிமடுக்கும் பழக்கம் இன்றிக்கு எல்லோரிடமும் நலிவடைந்து கொண்டே வருகிறது .

*அறிவு,செல்வத்தை விட மேலானது. ஏனெனில் செல்வத்தை நாம் கவனிக்க வேண்டும். அறிவு நம்மைக் கவனித்துக் கொள்ளும்

*ஒருவர் தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் அறிவுரைகள் மட்டுமே முழுமையாகக் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்த அறிவுரைகள் எப்போதும் காலங் கடந்தே சொல்லப்படுகின்றன.

*நாம் கற்றதையெல்லாம் வாழ்கையில் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பதையும் கூடவே தெரிந்து கொள்வதுதான் முழுமையான அறிவு..பயன்பாடு தெரியாத கல்வியால் யாதொரு பயனும் யாருக்குமில்லை .

*பெரும்பாலானோர் தெரிந்து கொள்வதற்காக அறிந்து கொள்கின்றார்களே ஒழிய புரிந்து கொள்வதற்கா இல்லை

*அறிவு வளர்ந்த போது மனதில் தைரியமும் கூட வந்தது.ஆசை வந்த போது அது காணாமல் போனது. அங்கே பயம் வந்து தொற்றிக் கொண்டது   

செயல்

*ஒரு நல்ல பழக்கத்தைத் தெரிந்து கொள்வது எளிது .ஆனால் பின்பற்றுவது கடினம். தீய பழக்கத்தைப் பின்பற்றுவது எளிது.அதிலிருந்து தப்பிப்பதுதான் கடினம்.

*நாம் வளர்ச்சித் திட்டப் பணிகளில் ஈடுபடுவதை விட அதிகம் பாதிப்பு வந்த பிறகு அதன் நிவாரணப் பணிகளில் தாம் அக்கறை காட்டுகின்றோம். முன் திட்டமிடுவதில் நாம் காட்டும் மெத்தனப் போக்கே இந்நிலைக்குக் காரணம்.  

*செய்யும் தொழிலில் தொடர்ந்து ஈடுபடுகின்றவன் செயல் மீது காதல் கொள்வான்.தீய செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டான்..அப்படிப்பட்ட சிந்தனை எண்ணத்தில் மலருவதற்கு வாய்ப்பும் நேரமும் கிடைப்பதில்லை..பெரும்பாலும் வேலை ஏதும் இல்லாமல் இருப்பர்களுக்கே தீய செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களை ஆராய நேரம் கிடைக்கிறது.

*ஒளியும் ஒலியும் ஓடத் தொடங்கி விட்டால் ஓரிடத்தில் கூட ஓய்வெடுத்துக் கொள்வதில்லை . நாமும் ஒரு செயலைச் செய்யத் தொடங்கி விட்டால் அதை முடிக்கும் வரை ஓயக் கூடாது .

*எந்த நிலையாமையும் நிலையானவற்றிலிருந்து தான் தோன்றவும் நிலைத்திருக்கவும் முடியும் நிலையான ஒன்று நிலையற்ற நிலையிலிருந்து கொண்டு நீடித்திருக்க முடியாது

. *செய்யும் வேலையில் உண்மையிலேயே விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கவனத்தை இழப்பதில்லை ,இழக்கப்படுமாறு அனுமதிப்பதும் இல்லை.

*ஓர் உதவி பெறுவது தவறில்லை .ஆனால் அதே உதவியை த் திரும்பத் திரும்பப் பெறுவது தவறு .இது ஏமாற்றுவதற்கு ஒப்பான செயல் .அதைப் போல உதவி செய்வது தவறில்லை .ஆனால் ஒரே உதவியை ஒருவர்க்குத் தொடர்ந்து செய்வது தவறு..அது அவருடைய உழைப்பை மறக்கச் செய்துவிடும் .

*பெரும்பாலானான மனிதர்கள் காலத்தை வீணாக்கி விடுகின்றோம் என்று தெரியாமலேயே வீணடித்து விடுகின்றார்கள் .இது அவர்களே செய்யும் பிழை என்பதால் பின்னாளில் தெரிய வரும்போது நொந்து கொள்வதுமில்லை திருந்திக் கொள்வதுமில்லை.

* நீ உன்னுடைய ஒவ்வொரு நிமிடத்தையும் செலவிடுவதில் கவனமாக இருந்தால் எதிர்காலம் தானாகவே நல்ல விதமாக அமைந்து விடும் .அதைப் பற்றி கவலைப் படுவதற்கு ஏதொன்றும் மில்லை

*நீச்சலடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் நீரில் குதித்துதான் ஆகவேண்டும் .சளிப் பிடிக்கும் என்றோ நீரில் மூழ்கி விடுவோம் என்றோ நினைத்துப் பயந்தால் நீச்சலை ஒருபோது ம் கற்றுக் கொள்ள முடியாது .

*நெடிய காலமானாலும் எவரொருவர் சோதனைகளையும் வேதனைகளையும் சுமக்கத் தயாராக இருகின்றாரோ அவரே பிற்பாடு சாதனைகளைச் சமைக்க முடியும் திறன்மிக்கவராக விளங்குகி ன்றார் .

*உழைப்பில் நம்பிக்கை கொள்ளாதவர்கள் ட்டுமே ஒழுக்கமின்மையை அதிகம் நேசிக்கின்றார்கள் .

*வெறும் ஒப்புதல் மட்டும் பணியை நிறை வேற்றி விடாது .உழைப்பும் ஒத்துழைப்பும் தேவை .

No comments:

Post a Comment