Sunday, December 30, 2012

Eluthaatha Kaditham


எழுதாத கடிதம்

இந்தியாவில் அரசியல்வாதிகள் மிகவும் தன்னிச்சையாகச் செயல்படுகின்றார்கள் .பொதுப் பணிகளில் வெளிப்படைத் தன்மை சிறிதும் இருப்பதில்லை.இந்தியாவைத் தன் வீடாகவும் ,இந்தியர்களைத் தன் உறவினர்களாகவும் நினைக்கத் தவறி விடுகின்றார்கள்.எதிர்க் கட்சியினரை எதிரிகளாகப் பார்க்கும் இவர்களால் இந்தியர்கள் எல்லோருக்கும் எப்படி ஒரேமாதியாக நல்லது செய்யமுடியும் ? மக்களுக்குத் தொண்டு செய்வதற்கே பதவி என்பதை மாற்றி அளவுக்கு மீறி வருமானமும் சொத்துக்களும் சேர்க்கப் பயன்படுத்திக் கொள்வதால் அரசியல்வாதிகள் இறக்கும் நாள் வரை பதவியை விடுவதில்லை. இதனால் மற்றவர்களுக்குத் தன் வாழ்நாளில் வாய்ப்புக் கிடைப்பதில்லை.அதற்காக அவர்கள் புதிய புதிய கட்சிகளை ஏற்படுத்திக் கொண்டு பதவி பெற முயலுகின்றார்கள்.  

மக்களை மக்கள் ஏமாற்றி விடுவார்கள் என்று இருவர் அனுமதியோடு இடையில் நுழைந்தவர் தான் அரசியல்வாதி .நாட்டின் வளமும் வசதியும் எல்லோருக்கும் சமமாகப் பங்கீடு செய்யப்படுவதற்காக மக்களுக்காக மக்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே அரசியல்.ஆனால் அப்படி செய்யப் படாமல் தொடர்ந்து மக்கள் ஏமாற்றப்படும் போது மக்கள் அரசின் மீது நம்பிக்கையை இழந்து விடுகின்றார்கள்.புதிய ஆட்சியாளர்களால் புதிய ஆட்சியை மக்களால் ஏற்படுத்த முடிந்தாலும் ஆட்சியாளர்களின் மனநிலையை மாற்ற முடிவதில்லை அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றப் படுகின்றோம் என்று தெரியாமலேயே மக்களை ஏமாற்றுவதை வழக்கமாகக் கொள்வதால் அவநம்பிக்கையால் தூண்டப்பட்டு மக்களும் அரசியல்வாதிகளைப் போல                 அனுகூலம் அடைய முற்படுகின்றார்கள்.ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது எல்லை மீறி இனி திருத்தவே முடியாது என்ற நிலை வரை விரிவடைந்துள்ளது.  

 பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு பொறியியல் கல்லூரி,கல்வியியல் கல்லூரி எனப் பல கல்விக் கூடங்கள்,சொகுசான பங்களாக்கள்,வெளி நாட்டுக் கார்கள்,எஸ்டேட்டுகள்,பண்ணைத் தோட்டங்கள்,ஏக்கர் கணக்கில் வீட்டு மனைகள்,அரசு செலவில் வசதிகள்,வங்கிகளில் நம்பமுடியாத அளவு இருப்பு,பினாமி பெயரில் சொத்துக்கள் ,இன்னும் எனக்குத் தெரியாத எவ்வளவோ.இவ்வளவும் பதவிக்கு வந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்.இவர்களா மக்களுக்குத் தொண்டு செய்யும் சேவகர்கள் ?

இரண்டு அப்பாவி மனிதர்கள் ஒரு ஆப்பத்திற்காகச் சண்டை போட்டனர்.அப்போது அங்கு ஒரு குரங்கு வந்தது..சண்டை போட்டவர்கள் குரங்கிடம் முறையிட்டனர் .குரங்கு ஆப்பத்தை வாங்கி இரண்டாகப் பிய்க்கும் போது வேண்டுமென்றே ஒன்றைப் பெரிதாகவும் மற்றொன்றைச் சிறிதாகவும் பிரித்தது. அதை அவர்களிடம் காட்டி இது பெரிதாக இருப்பதால் இதிலிருந்து கொஞ்சம் குறைத்து விடுவோம் என்று சொல்லி அதைப் பிய்த்து தன் வாயில் போட்டுக் கொண்டது.அதன் பிறகு சிறிய துண்டு பெரியதாக இருந்ததால் அதையும் அப்படிச் செய்து அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டது .இறுதியில் அப்பாவி மனிதர்களுக்கு ஆப்பத்திலிருந்து ஒரு சிறு துண்டு கூடக் கிடைக்கவில்லை .இந்திய அரசியல்வாதிகளை பார்க்கும் போது இந்தக் கதைதான் நினைவுக்கு வருகிறது.

No comments:

Post a Comment