Saturday, December 22, 2012

Eluthatha Kaditham


எழுதாத கடிதம்

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் கொடுமைகள் இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதில்     ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. பாலியல் குற்றங்கள் மட்டுமா அதிகரிக்கின்றது கொலை,கொள்ளை,ஊழல்,லஞ்சம்,மோசடி,கந்து வட்டிக்கொடுமை .ஏமாற்றுதல்,சிறுவர்களிடம் வேலை வாங்குதல்,வாழ்நாள் அடிமைப்படுத்துதல், நில அபகரிப்பு,கள்ளத் தொடர்புகள்,கள்ளக் கடத்தல்,கலப்படப் பொருட்கள்,போதைப் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை என எல்லாவிதமான குற்றங்களும் தான். இதில் எதைச் சொல்ல எதை விட.. ஒரு பெண் வெளி நாட்டில் பெயர் தெரியாத ஊரில் கூட பாதுகாப்பாக நடமாட முடியும் ஆனால் இந்தியாவில் தன் தாய் நாட்டில் குறைந்தபட்ச பாதுகாப்புக் கூடக் கிடைப்பதில்லை .மக்கட் தொகை மிகுந்த இந்தியாவில் அங்குமிங்கும் ஒரு சில குற்றங்கள் நடப்பதைத் தவிர்க்க முடியாது ,இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று இன்னும் சொல்வது மக்களை ஏமாற்றுவதேயாகும்.பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு என்று சொன்ன பாரதியைப் போல என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.பெருகிவரும் அதன் நிரந்தரமான அவலங்களும், குறுகிவரும் நிரந்தரமில்லாத சிறப்புக்களும் மனதை அச்சப்படுத்தி அப்படி எண்ணவே தூண்டுகின்றது. தன் நண்பனிடம் உள்ள குறைகளை மறைக்காமல் எடுத்துச் சொல்லி திருத்த நினைப்பவன்தான் அவனுக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்கமுடியும் என்று கூறுவார்கள் .அது போல நாட்டிலுள்ள குறைகளை அது எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் தயங்காமல் எடுத்துக் கூறுபவன்தான் நற்குடிமகனாக இருக்கமுடியும்.நம் தேசம் உருப்படாது என்பதற்கு ஒருவர் அடுக்கடுக்காய் பல காரணங்களைக் குறிப்பிட முடியும்.

 

1.நாட்டு முன்னேற்றத்தின் மீது அக்கறை கொண்ட நேர்மையான ,பற்றற்ற, தொண்டுள்ளமிக்க அரசியல்வாதிகளும்,தலைவர்களும் இல்லை திறமையான அரசியல் தலைவர்கள் என்று சொல்லத்தகுந்த அளவிற்கு இந்தியாவில் இப்பொழுது யாருமில்லை . அரசியல் தலைவர்களுடைய திறமைகள் எல்லாம் தொடக்க காலத்தில் மக்களின் நன்மதிப்பைப் பெறுவதோடு ஒடுங்கி விடுகின்றன .தப்பித் தவறி எஞ்சி ஏதுமிருந்தால் அது அரசியலில் நுழைந்த ஓரிரு ஆண்டுகளுக்குள் நலிவடைந்து போய் விடுகின்றன.அரசியல்வாதிகள் எல்லோரும் வெற்றுப் பேச்சாளர்களாக இருக்கின்றார்களே ஒழிய செயல் வீரர்களாக இல்லை.

2.அரசியல்வாதிகள் அதிகாரிகளையும் ,அதிகாரிகள் அலுவலர்களையும் குறைந்தபட்ச அளவுகூடக் கண்காணித்து நெறிப்படுத்துவதில்லை .ஆளுமையின்மையால் ,பணி செய்யாமை,நேர்மை தவறுதல் மிகுந்து வருகின்றது .நாட்டின் பயனுறுதிறன் சரிவதற்கு இது முழுமுதல் காரணமாக இருக்கிறது .

 3.குற்றங்களின் எண்ணிக்கையும்,அளவும் தொடந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. முன்பு அரிதாக நடந்த குற்றங்கள் இப்பொழுது அடிக்கடி நடக்கின்றன .முன்பு இரவில் மட்டும் நடந்த குற்றங்கள் இப்போது நண்பகலிலும் நடக்கின்றன ,முன்பு மறைவாய் நடந்த குற்றங்கள் இப்பொழுது நடுரோட்டிலும் நடக்கின்றன .பதிவு செய்யப்பட்டு வெளியே தெரியவரும் குற்றங்களின் எண்ணிக்கையே நம்மைத் திகைக்க வைக்கிறது.ஆனால் பதிவு செய்யாமல் விடப்படும் குற்றங்களும் வெளியே தெரியாமல் மறைக்கப்படும் குற்றங்களும் எண்ணிக்கையில் இதைப்போல பல மடங்கு அதிகம் என்பதை மிகச் சரியாக சமுதாயத்தை மதிப்பீடு செய்பவர்கள் மட்டுமே உணர்வர் . தவறுகள் திரும்பத் திரும்ப புதிய அணுகுமுறையோடு நடைபெறுகின்றன .ஒரு தவறு கூட முழுமையாகத் திருத்தப் பட்டதாகத் தெரியவில்லை .

4.நல்ல பணிக்காக ஊதியம் பெறுவதை விட தீய செயலுக்காகக் கூலி பெறுவதை இரகசியமாக மனப்பூர்வமாக விரும்புகின்றார்கள் .வாழ்க்கை முழுதும் ஒரே அளவாகக் கிடைக்கும் ஊதியத்தை விட எப்பொழுதாவது கிடைக்கும் ஒரு பெரிய கூலிக்காக ஏங்குகின்றார்கள் .மக்களின் அக மனமும் புறமனமும் மாறுபட்டிருப்பதால் சொல்லும் செயலும் வேறுபடுகின்றன. வேலியே பயிரை மேய்ந்தார் போல ,காவலர்களே கள்வனாய் இருப்பதும்,ஆசிரியர்களே காமுகர்களாய் இருப்பதும்,முற்றும் துறந்த துறவிகளே பற்றுக்கொண்டு அலைவதும்,தலைவர்கள் தன் வீட்டைத் தாங்களே கொள்ளையடிப்பதும் இந்தியா ஒரு தவறான பாதையில் நெடுந்தொலைவு கடந்து வந்துவிட்டது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது .இதனால் புள்ளி விவரங்கள் எல்லாம் பொய்யானவைகளாக மாறிவருகின்றன.

5.பொதுத் துறைகளின் நிர்வாகக் குறைபாட்டால் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் கூடப் பூர்த்தி செய்யப் படுவதில்லை .பொது விநியோகத்தில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ,குடிநீர் ,மின்சாரம், சமையல் எரிவாயு ,மண்ணெண்ணை,பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு போன்றவற்றால் இயல் வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது .

6.மனித வளத்தை தாய்நாட்டிற்காக சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.வேலை கேட்டு மக்கள் நம்மைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்பது போல. மனித வளம் என்பது ஒரு நாட்டின் முதன்மை வளம் .அதைப் பயன் படுத்திக் கொள்ளாது விடுவது என்பது நாட்டு நலன் மீது இருக்கும்  அக்கறையின்மையே .இந்தியாவின் மனித வளத்தை மேலை நாடுகளே பயன்படுத்திக் கொள்கின்றன.

 7.வீதிகள் ,பொதுவிடங்கள் என எங்கு நோக்கினாலும் குப்பைகளும் கழிவுநீர் ஓடைகளும் .முறையான துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை .கொசுக்கள் ,ஈக்களின் பெருக்கத்தால் மக்கள் பலவிதமான தொற்று நோய்களுக்கு ஆளாகின்றார்கள் .அவர்களுக்கு சரியான முறையான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதில்லை. மக்கள் பொதுவொழுக்கத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துவது அரசின் கடமையாகும்.நெடுங்காலமாக பின்பற்றி வந்ததால் கடிய முயற்சியின்றி மாற்றம் செய்ய இயலாது என்பதால் அப்படியே விட்டுவிடுவதும் அமைப்பைச் சீர்குலைக்கும் . இந்தியா ஒரு திறந்த வெளிக் வெளிக் கழிப்பிடம் என்று ஓர் அந்நியன் சொன்னபோதே நாம் அதைச் சரி செய்திருக்க வேண்டாமா ?

 8. கல்வி அறிவின்மை இன்னும் இருந்து வருகிறது. இதனால் மக்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே ஏமாற்றப்படுகின்றார்கள் .வாழ்வாதாரத்திற்கு வழி தெரியாதவர்கள் ஏமாற்றும் தொழிலை பின்பற்றி விடுகின்றார்கள்.கணிசமான மக்கள் நாட்டிற்கு பாரமாகவே இருந்து வருகின்றார்கள் பிச்சை எடுத்தல் ,குழந்தைகள் ,சாமி சிலைகளைக் கடத்துதல்  போன்ற அவலங்கள் இந்தியாவில் மட்டுமே அதிகம்.

9. தனி மனிதர்களைத் துதிபாடும் போக்கு மக்களிடம் இன்னும் மாறவே யில்லை .இதை அரசியல்வாதிகள் அவர்களுக்கு அனுகூலமாக்கிக் கொண்டு மக்களை ஆயுதங்களாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்

10. இந்தியாவில் தரமான பல்கலைக் கழகங்கள் இல்லை.வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அதிகம் ,பொதுவாக பாதுகாப்பு குறைவு ,சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் குறைவு ,சுற்றுப் புறத்தை       தூய்மையாக வைத்திருக்கும் மனப்போக்கு இல்லை,போக்கு வரத்து வசதிகளின் தரம் குறைவு - உலக நாடுகளின் மதிப்பீட்டில் இந்தியா எப்போதும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும்.நாம் நம்மை எப்படி மதிப்பிடுகின்றோம் என்பதை விட உலக நாடுகள் நம்மை எப்படி மதிப்பிடுகின்றன என்பதே முக்கியம்.

11.இந்தியாவில் எல்லோரிடமும் பணியில் அர்ப்பணிப்பு ,நேர்மைத் தனம் இல்லை.இதனால் ஒவ்வொருவரும் மற்றவரிடம் நம்பிக்கை இழந்து வருகின்றார்கள். அரசியல்வாதிகளிடம் தொலைநோக்குப் பார்வையும் ,பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வும் ,முறையான ,நடுவு நிலையான அணுகுமுறைகளும் இல்லை.அப்போதைக்கப்போது எதையாவது சொல்லி மக்களைத் தற்காலியமாக திருப்பதி படுத்துகின்றார்கள்.தள்ளிப் போடுவதால் பிரச்சனைகள் தீர்வாவதில்லை. பிரச்சனைகள் மேலும் மேலும் சிக்கலாகிப் போவதற்கு இது காரணமாகி விடுகிறது.

No comments:

Post a Comment