Tuesday, August 14, 2012

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் -பாஸ்பரஸ் -கண்டுபிடிப்பு ஜெர்மனியிலுள்ள ஒரு வியாபாரியான பிராண்ட் (H Brand) என்பார் உலோகங்களைத் தங்கமாக்கும் ஞானக்கல் (Philosopher's stone) இருப்பதாக நம்பினார். அந்த நம்பிக்கையில் மனிதர்களின் சிறுநீரை ஆவியாக்கி ஒரு தெவிட்டிய பாகுநிலை மிக்க நீர்மத்தைப் பெற்றார்.அதை காய்ச்சி வடித்து செந்நிறத்தில் ஒரு நீர்மத்தை உண்டாக்கினார். அதை அவர் சிறுநீர் எண்ணெய் என அழைத்தார்.அதை மீண்டும் காய்ச்சி வடிக்க ,கொள்கலனின் அடியில் கருப்பு நிற வீழ்படிவு தங்கியிருப்பதைக் கண்டார்.அதை நெடு நேரம் கால்சிய ஊட்டம் (Calcination)செய்ய,வீழ்படிவு வெண்ணிறத்தில் பிரகாசிக்கும் ஒரு பொருளாகக் கொள்கலனின் சுவரில் படிந்திருந்தன.இதை பிராண்ட் இரகசியமாகச் சில காலம் வைத்திருந்தார்.ஆனால் அதைக் கொண்டு உலோகங்களைத் தங்கமாக்க முடியாது போனதால்,அதைப் பிற்பாடு வெளியிட்டார்.1771 ல் ஷீலே,எலும்பின் சாம்பலிலிருந்து பாஸ்பரஸ்ஸை த் தனித்துப் பிரித்தெடுத்தார்.பாஸ்பரோஸ் (Phosphoros) என்ற கிரேக்கச் சொல்லுக்கு 'ஒளியைக் கொண்டிருக்கின்ற' என்று பொருள்.இச் சொல் உண்மையில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் தோன்றுகின்ற வெள்ளி என்ற கோளைக் குறிக்கின்றது.இச் சொல்லே 34 டிகிரி C வெப்ப நிலையில் காற்றில் தானாக எரியும் இத் தனிமத்திற்குப் பெயரானது . பண்புகள் பாஸ்பரஸ் இயற்கையில் சிறிதும் தனித்துக் காணப்படவில்லை.விலங்குகள் மற்றும் காய்கறிகளின் திசுக்களில் குறிப்பாக விதைகளிலும் முட்டையின் மஞ்சள் கருவிலும்,விலங்கினங்களின் எலும்புகளிலும் பாஸ்பரஸ் எதோ ஒரு வகையில் சேர்ந்திருக்கிறது.மனித எலும்புக் கூட்டில் ஏறக்குறைய 2 கிலோ பாஸ்பரஸ் இருக்கின்றது . புதிதாக உற்பத்தி செய்யப்படும் பாஸ்பரஸ் வெண்மையாகவும்,ஓரளவு ஒளி கசிந்து வெளியேறக் கூடியதாகவும்,மெழுகு போன்றதாகவும் இருக்கும்.வெள்ளைப் பூண்டின் மனம் கொண்டிருக்கும் இது ஒளிரும் போது மஞ்சள் நிறமடைவதால் அதை மஞ்சள் பாஸ்பரஸ் என்பர். மிகத் தூய்மையான பாஸ்பரஸ் நிறமற்றதாகவும் கண்ணாடி போன்று ஒளி உட்புகக் கூடியதாகவும் இருக்கும் இது நீரில் கரைவதில்லை.ஆனால் கார்பன் டை சல்பைடில் கரைகிறது.காற்றில் தானாக எரிந்து பென்டாக்சைடு வளிமத்தை உண்டாக்குகின்றது.அதனால் இதை நீரில் இட்டு வைத்திருப்பார்கள்.எரிவதற்கான தாழ்ந்த வெப்ப நிலை ஏறக்குறைய அறை வெப்ப நிலையாக இருப்பதால் இதைக் கையால் கையாளுவது ஆபத்தாகும். வெள்ளை பாஸ்பரஸ் நச்சுத் தன்மை கொண்டது. P என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய பாஸ்பரஸ்சின் அணு எண் 15.அணு எடை 30.97 அடர்த்தி 1820 கிகி/கமீ.இதன் உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 317.3,552.2 K ஆகும்.மஞ்சள் பாஸ்பரஸ்சின் மூலக்கூறு எடை 123.88 .இது மிகவும் நச்சுத் தன்மை கொண்டது.0.1 கிராம் அளவு மரணத்தை அளிக்கக் கூடியது பாஸ்பரஸ் மிகவும் தீவிரமாக வினைகளில் ஈடுபடக் கூடியது.உடனடியாக ஹாலஜன்களுடன் இணைந்து தீ சுவாலையை உண்டாக்குகின்றது.குளிர் நிலையில் ஆக்சிஜனுடன் மெதுவாக இணைகிறது.கந்தகம் மற்றும் பெரும்பாலான உலோகங்களுடன் சூடுபடுத்தும் போது இணைந்து பாஸ்பைடுகளை உண்டாகுகின்றது.இது வலுவான ஆக்சிஜன் நீக்கம் செய்யும் வேதிப் பொருளாக உள்ளது. கந்தக அமிலத்தை கந்தக டை ஆக்சைடாகவும்,நைட்ரிக் அமிலத்தை நைட்ரஜன் பெராக்சைடாகவும் சுருக்குகின்றது.சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினை புரிந்து பாஸ்பீன்(phosphine -PH3) என்ற நச்சு வளிமத்தை உண்டாக்குகின்றது .

No comments:

Post a Comment