Thursday, August 30, 2012

Vethith thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் -ஆர்கான் (Argon )-கண்டுபிடிப்பு வளி மண்டலத்தில் உள்ள காற்று பல வளிமங்களின் கலவையாலானது. பரும அளவில் அதில் நைட்ரஜன் 78.09 % ஆக்சிஜன் 20.95 % உள்ளன. இதையடுத்து மந்த வளிமங்களுள் ஒன்றான ஆர்கான் ௦.93 % உள்ளது. கார்பன் டை ஆக்சைடு வெறும் ௦.03 % தான் உள்ளது இதைத் தொடர்ந்து நியான்,ஹீலியம்,கிரெப்பிடான் போன்ற மந்த வளிமங்கள் உள்ளன. மந்த வளிமங்களின் அணுக்களில் எலெக்ட்ரான் கூடுகள், எலெக்ட்ரான்களால் முழுமை பெற்றிருப்பதால் முழுமை பெறவேண்டி, பிற தனிமங்களை நாடி வேதி வினையாற்றுவதில்லை.அதனால் மந்த வளிமங்களின் அணுச் சேர்க்கையினால் வேதிச் சேர்மங்கள் இயல்பான சூழல்களில் இருப்பதில்லை.மந்த வளிமங்களுக்கு வளிமண்டலக் காற்றே மூலமாக இருப்பதால் அதைப் பண்டுவப்படுத்தியே மந்த வளிமங்களைப் பிரித்தெடுக்க வேண்டியதாக இருக்கிறது. 1766 ல் ஹைட்ரஜன் தனிமத்தைக் கண்டுபிடித்த ஆங்கிலேயரான ஹென்றி காவெண்டிஸ் வளிமங்களின் ஊடே மின்னிறக்கம் செய்து அதில் ஆர்கான் இருப்பதை ஒருவாறு ஊகித்தார். எனினும் அது அறிவியல் பூர்வமாக 1894 ல் இங்கிலாந்து நாட்டு இயற்பியல் வல்லுனரான லார்டு ரலே என்பாரால் கண்டுபிடிக்கப்பட்டது.ஸ்காட்லாந்து நாட்டு வேதியியலாரான வில்லியம் ராம்சே ,ஆர்கானை நிறமாலை மூலம் இனமறிந்து வெளிப்படுத்தினார். ஆர்கான் நிறமாலையில் சிவப்பு முனைப் பகுதியில் சிறப்பு வரிகளைப் பெற்றிருக்கிறது கிரேக்க மொழியில் அர்கோஸ் (அர்கோஸ்) என்றால் சோம்பேறி என்றும் மந்தம் என்றும் பொருள். அப்போது புதிதாக இனமறியப்பட்ட ஆர்கான் ,பிற தனிமங்களைப் போல வேதி வினைகளில் ஈடுபடாமல் தனித்திருந்ததால் அதற்கு அப்பெயரிட்டனர். பண்புகள் ஆர்கானின் அணுவெண் 18 அணு நிறை 39.948.இதன் உறை நிலை - 189.2 டிகிரி C ,கொதி நிலை -185.7 டிகிரி C .ஆற்கானின் கொதி நிலை நைட்ரஜனுக்கும் ஆக்சிஜனுக்கும் இடைப்பட்டதாக இருக்கிறது. வர்த்தக அடிப்படையில் காற்றை நீர்மமாக்கி,காய்ச்சி வடித்தல் மூலம் ஆர்கானைப் பிரித்தெடுக்கின்றார்கள்.இதன் அடர்த்தி ௦.166 கிகி/கமீ.ஆர்கான் நீரில் நைட்ரஜனை விட 2.5 மடங்கு கூடுதலாகக் கரைகின்றது .ஏறக்குறைய ஆக்சிஜனின் கரைதிறனுக்குச் சமமாக இருக்கிறது. ஆர்கான் வளிம, நீர்ம நிலைகளில் நிறமற்றதாகவும்,மணமற்றதாகவும் இருக்கிறது. மந்தத் தன்மை காரணமாக இது வேதிச் சேர்மங்களை ஏற்படுத்துவதில்லை என்று நீண்டகாலமாக நம்பப் பட்டது.ஆனால் 2000 ஆண்டில் பின்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வேதிச் சேர்மங்களை உருவாக்கிக் காட்டினார்கள்.புளூரின்,ஹைட்ரஜனுடன் சேர்ந்த ஆர்கான் கூட்டுப் பொருள் ஆர்கான் புளுரோ ஹைட் ரைடு (HArF) ஆகும் . இது தீவிரமாக உடைந்து நொருங்கக் கூடியதாகவும் -265 டிகிரி C தாழ்ந்த வெப்ப நிலையில் மட்டுமே நிலைத்திருக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.(ArKr)+,(ArXe)+,(NeAr)+ போன்ற அயனிகளை நிறமாலை மூலம் இனமறிந்துள்ளனர். ஆர்கான்,பீட்டா ஹைட்ரோ குயினோன் உடன் இணைந்து கிளாத் ரேட்டுகளை (Clathrate) உண்டாக்குகின்றன.இவை ஓரளவு கூடுதல் நேரம் நிலைத்திருக்கின்றன.எனினும் ஆர்கான் சேர்மங்களில் உண்மையான வேதிப் பிணைப்புகள் இருப்பதில்லை.வான் டெர் வால் விசை மூலம் அவ்வணுக்கள் ஒன்றிணைந்திருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். பயன்கள் புவி வளிமண்டலத்தில் செழுமை வரிசையில் மூன்றாவதாக அதிக அளவில் கிடைப்பதால்,பிற மந்த வளிமங்களை விட ஆர்கான் உற்பத்தித் துறைகளில் பயன்படுகிறது. இழை விளக்குகளில் பல்புக்குள் உள்ள காற்றை நீக்கா விட்டால்,இழை ஆக்சிஜனுடன் சேர்ந்து எரிந்து விடும் வாய்ப்பைப் பெறும்.இதனால் காற்றை நீக்கி,அதற்குப் பதிலாக ஆர்கானை இட்டு நிரப்புவார்கள்.இதனால் டங்ஸ்டன் இழை அரிமானத்திற்கு உட்படுவது பெரிதும் தவிர்க்கப் படுகிறது.ஆவியாக்கப் படுவதால் பல்பின் உட்சுவர் கருமை பூசப்படுவதும் இதனால் தடுக்கப் படுகிறது.குழல் விளக்குகளிலும் சிறிதளவு ஆர்கானைப் பயன் படுத்துகின்றார்கள் . உலோகங்களைப் பற்ற வைக்கும் வழிமுறையில் மந்த வெளிச் சூழலை ஏற்படுத்திக் கொள்ள ஆர்கான் வளிமம் பயன்படுத்தப் படுகின்றது. டைடானியம் போன்ற வீரிய மிக்க தனிமங்களின் உற்பத்தி முறையில் ஆர்கானைக் காப்புத் திரையாகப் பயன்படுத்தி தூய தனிமத்தைப் பெறுகின்றார்கள். இதே காரணத்தினால் குறைக் கடத்திக்காக உற்பத்தி செய்யப்படும் சிலிகான்,ஜெர்மானியத்தை 100 சதவீதம் தூய நிலையில் பெறமுடிகின்றது. கெய்கர்-முல்லர் எண்ணி (GM Counter) யில் ஆர்கானை இட்டு நிரப்பி ,அதன் வழியாக அயனிக்கும் ஆற்றல் படைத்த கதிர்களைச் செலுத்தும் போது ,சிறிய அளவில் ஏற்படும் மின்னிறக்கத்தை அளவிட்டு கதிர் வீச்சின் வலிமையை அறிகின்றார்கள். பழம் பாறைகளின் வயதை மதிப்பிடும் வழிமுறையில் சிதைவாக்க விளை பொருளாக ஆர்கானின் சம அணு எண்மம் (isotope)உள்ளது .பாறைகளில் 1.25 பில்லியன் ஆண்டுகள் என நீண்ட அரைவாழ்வுக் காலம் கொண்ட பொட்டாசியம்-40 என்ற அணு எண்மம் உள்ளது .இதன் சிதைவினால் ஆர்கான் விளைகிறது பொட்டாசியம் மற்றும் ஆர்கானின் செழுமையை அளவிட்டறிந்து பாறையின் வயதை மதிப்பிட முடியும் .

No comments:

Post a Comment