Wednesday, August 8, 2012

Vethith thanimangal- Chemistry

வேதித் தனிமங்கள் - சிலிகான் -கண்டுபிடிப்பு ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக பூமியில் அதிகமாகச் செழுமையுற்றிருக்கும் தனிமம் சிலிகான் ஆகும். பூமியின் புறவோட்டுப் பகுதியில் 28 % .இருப்பினும் இது காலங்கடந்தே கண்டறியப்பட்டது. இதற்குக் காரணம் அதன் ஆக்சைடிலிருந்து ஆக்சிஜநீக்கம் செய்து சிலிகானைத் தனித்துப் பிரிப்பதில் உள்ள இடர்பாடுகளே ஆகும்.சிலிகானை ஒரு வேதித் தனிமமாக அறிவதற்கு முன்பே அதன் சேர்மங்களைப் பற்றி பழங்காலத்திலிருந்தே தெரிந்து வைத்திருந்தார்கள்.கண்ணாடி என்பது சிலிகேட்டாகும்.இதை வெகு காலமாக மக்கள் கண்ணாடியாலான பொருட்கள் செய்வதற்கும்,கட்டடங்களின் அழகை மேம்படுத்துவதற்கான கட்டுமானப் பொருளாக்கப் பயன்படுத்துவதற்கும் அறிந்திருந்தார்கள் 18 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 'சிலிக்கா'வில் ஒரு வேதித் தனிமமம் இருக்கக் கூடும் என்று நம்பினார்கள் டேவி,மின்சாரத்தின் மூலம் சிலிகாவைப் பகுக்க முயற்சி செய்தார்.இந்த வழிமுறையால் பல கார உலோகங்கள் இனமறியப்பட்டன என்றாலும் சிலிகாவில் இது பயன் தரவில்லை. சிலிகான் ஆக்சைடை பழுக்கக் காய்ச்சி ,அதன் மீது உலோகப் பொட்டாசிய ஆவியை பீச்சிச் செய்த முயற்சியும் பலிக்கவில்லை.1811 -ல் கே.லூசாக் (L.J.Gay Lussac) மற்றும் தென்னார்டு (L.Thenard)சிலிகான் டெட்ரா புளுரைடு மற்றும் உலோகப் பொட்டாசியம் இவற்றிற்கிடையே தீவிரமான வேதி வினையை ஏற்படுத்தி செம்பழுப்பு நிறத்தில் ஒரு விளை பொருளைப் பெற்றனர். அதில் படிக உருவற்ற சிலிகான் இருப்பதாகத் தெரிவித்தனர். 1823 ல் சுவீடன் நாட்டு வேதியியலாரான பெர்சிலியஸ் (J.Berzelius) சிலிகான் ஆக்சைடு (மண்),இரும்பு மற்றும் கரித்தூள் இவற்றைக் கலந்து உயர் வெப்பநிலைக்குச் சூடுபடுத்தி ,இரும்பும் சிலிகானும் சேர்ந்த ஒரு கலப்பு உலோகத்தைப் பெற்றார் .பின்னர் கே லூசாக் மற்றும் தென்னார்டின் வழிமுறையைப் பின்பற்றி பழுப்புநிறப் பொருளைப் பெற்றார். நீரோடு செயல்படச் செய்து ஹைட்ரஜன் குமிழ்களை வெளியேற்றி ,படிக உருவற்ற சிலிகானை கரும்பழுப்பு நிறத்தில் நீரில் கரையாத ஒரு விளை பொருளைப் பெற்றார். இதில் பொட்டாசியம் சிலிகோ புளுரைடு வேற்றுப் பொருளாக இருந்தது. இதை மீண்டும் மீண்டும் நீரில் கழுவித் தூய்மைப்படுத்தி தூய சிலிகானைப் பெற்றார்.டிவில்லி (de Villi),1854 ல் படிக உருவ சிலிகானை உருவாக்கிக் காட்டினார். சிலிகான் இயற்கையில் தனித்துக் காணப்படவில்லை.ஆக்சைடாகவும், சிலிகேட்டாகவும் உள்ளது.மணல்,குவார்ட்ஸ் (Quartz ) பாறைப் படிகங்கள் ,அகேட்மற்றும் சில வகையான இரத்தினக் கற்களில்ஆக்சைடாகவும்,கிரானைட்,அஸ்பெஸ்டோஸ்,களிமண்,மைக்கா போன்றவற்றில் சிலிகேட்டாகவும் சிலிகான் உள்ளது.வர்த்தக ரீதியில் சிலிகாவையும் கார்பனையும் மின்னுலையில்,கார்பன் மின் வாய்களின் துணை கொண்டு சூடுபடுத்தி உற்பத்தி செய்கின்றார்கள். சிலிகான் என்ற பெயரின் மூலம் இலத்தீன் மொழிச் சொல்லான சிலிசியமாகும் (Silicium).இது கடினமிக்க கல் என்ற பொருள்படும் சிலக்ஸ் (Silex) என்ற சொல்லிலிருந்து உருவானது.

No comments:

Post a Comment