Sunday, August 19, 2012

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள்-கந்தகம்-கண்டுபிடிப்பு கந்தகம் தனித்தும்,சேர்மமாகவும் பூமியில் கிடைப்பதால் இதை வேதித் தனிமமாக அறிவதற்கு வெகு காலம் முன்பே மக்கள் இதைப் பயன்படுத்தத் தெரிந்திருந்தார்கள்.கிரேக்கர்களும்,ரோமர்களும் கந்தகத்தை புகை உண்டாக்கப் பயன்படுத்தினார்கள்.வீட்டில் தொற்று நோய்க் கிருமிகளைக் கொல்ல இப் புகையை எழுப்பினார்கள்.கார்பன் போல் வான வேடிக்கைப் பொருட்களில் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.கந்தகம்,கரித்தூள்,சால்ட்பீட்டர்(Pottasium Nitrate) இவற்றை 1 :2 :6 என்ற விகிதத்தில் கலந்து துப்பாகிகளில் வெடிமருந்தாகப் பயன்படுத்தினர்.இது இன்றைய சேர்மான விகிதத்திலிருந்து சிறிதே மாறுபட்டிருக்கிறது . கந்தகத்தின் தனித் தன்மையை லவாய்ச்சியர் தெரியப்படுத்தினார். கந்தகம் என்ற பெயரின் மூலம் ‘சுல்வாரி’ என்ற வடமொழிச் சொல்லாகும். இதற்கு 'செம்பின் எதிரி ' என்று பொருள்.செம்பையும்,கந்தகத்தையும் சேர்த்து சூடுபடுத்தும் போது செம்பு அழிகிறது என்ற உண்மையைத்தெரிந்து வைத்துக் கொண்டு இப்பெயரிட்டனர் போலும். இது லத்தீன் மொழியில் ‘சல்பூரியம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது கந்தகம் தனிமமாக எரிமலைக் குழம்பு உறைந்த பாறைகளில் கிடைக்கிறது. வியாழனின் துணைக் கோளான அயோ (Io) வில் எரிமலையிலிருந்து வெளியேறிய கந்தகப் பொருட்கள் பல நூறு கிலோமீட்டர் தூரம் வரை உறைந்துள்ளது. அதனால் அது பிரகாசமான சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திட்டுக்களைப் பெற்றுள்ளது. பொதுவாக கந்தகம் பல தனிமங்களோடு சேர்வதால் அவற்றின் சல்பைடு மற்றும் சல்பேட்டுக்களாகக் கிடைக்கின்றது.வெப்ப நீர் ஊற்றுக்களில் கந்தக்கம் சேர்ந்திருக்கிறது. பெட்ரோலிய எண்ணெய் மற்றும் எரி வளிமத்தோடு கலந்திருக்கிறது. பண்புகள் கந்தகம் வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட,மணமற்ற,எளிதில் உடைந்து நொருங்கக் கூடிய திண்மமாகும்.இது நீரில் கரைவதில்லை என்றாலும் கார்பன் டை சல்பைடில் கரைகிறது. S என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய கந்தகத்தின் அணு எண் 16; அணு நிறை 32.06;அடர்த்தி 2070 கிகி/கமீ .இதன் உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 386,717.8 K ஆகும். திண்ம,நீர்ம,மற்றும் வளிம நிலைகளில் தனிமக் கந்தகம் பல வேற்றுருக்களைக் கொண்டுள்ளது.இது அதன் வடிவங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருக்கிறது.சாய் சதுரமுகி அல்லது எண்முகி (Rhombic or octohedral) அல்லது ஆல்பா கந்தகம் என்ற வேற்றுருவைப் பெற கந்தகத்தைக் கார்பன் டை சல்பைடில் கரைத்து வடிகட்டி காற்றில் உலரவைத்துப் பெறுகின்றார்கள் . இது வெளிர் மஞ்சள் நிறப் படிகமாகவும் 2060 கிகி/கமீ என்ற அளவில் அடர்த்தி கொண்டதாகவும் 112.8 டிகிரி C உருகு நிலையும் கொண்டிருக்கிறது.இது அறை வெப்ப நிலையில் நிலையாக இருக்கிறது. ஒற்றைச் சாய்வுடைய (monoclinic) அறுங்கோணமுகி (Prismatic) அல்லது பீட்டா கந்தகம் என்ற கந்தகத்தை அதன் உருகு நிலையில் உருக்கி புறப்பரப்பு உறையுமாறு குளிர்வித்து திண்மமாய் உறைந்த பகுதியில் ஒரு சிறிய துளையிட அதன் வழியாக வெளியேறுபடி செய்வார்கள்.இது கொள்கலனின் சுவர்களில் ஊசிப் படிவுகளாகப் படியும். இதன் நிறம் சற்று அழுத்தமான மஞ்சளாக உள்ளது.அடர்த்தி சற்று குறைந்து 1960 கிகி/கமீ ஆகவும்,உருகு நிலை சற்று அதிகரித்து 119.25 டிகிரி C ஆகவும் உள்ளது . நெகிழ்மக் கந்தகம் (Plastic sulfur) அல்லது காமாக் கந்தகம் இரப்பர் போன்ற தன்மையையும் ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய தன்மையையும் கொண்டுள்ளது.கந்தகத்தை உயர் வெப்ப நிலைக்கு உருக்கி திடீரென்று குளிர் நீரில் குளிர்வித்து இதைப் பெறுகின்றார்கள். இதன் அடர்த்தி 1920 கிகி/கமீ.இது பிற கந்தக வேற்றுருக்களைப் போல கார்பன் டை சல்பைடில் கரைவதில்லை.நீண்ட நேர படு நிலைக்குப் பின் கந்தகம் ஒளிபுகா,உடைந்து நொருங்கக் கூடிய வெளிர் மஞ்சள் நிறப் பொருளாக மாற்றமடைகின்றது.நெகில்மக் கந்தகத்தை கந்தகத்தின் உண்மையான வேற்றுரு இல்லை என்று சொல்வார்கள்.படிக உருவமற்றவை(amorphous),மிதமக்(colloidal)கந்தகம் எனவும் கந்தகத்தை வேறுபடுத்தியுள்ளனர்.கந்தகம் மின்சாரத்தையும்,வெப்பத்தையும் மிகக் குறைவாகக் கடத்துகிறது.இது காற்று வெளியில் நீல நிற சுவாலையுடனும் ஆக்சிஜன் வெளியில் அவுரி நீல நிற சுவாலையுடனும் எரிந்து கந்தக டை ஆக்சைடு,கந்தக ட்ரை ஆக்சைடு போன்ற வளிமங்களை வெளியேற்றுகின்றது சூடு படுத்த தங்கம்,பிளாட்டினம் மற்றும் இருடியம் தவிர்த்த பிற உலோகங்களுடன் இணைகிறது.செம்பு,இரும்புடன் சேரும்போது சுடரொளி வீசுகிறது.

No comments:

Post a Comment