Friday, August 24, 2012

Vethith thanimangal - Chemistry


வேதித் தனிமங்கள்- குளோரின் -கண்டுபிடிப்பு ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானியான காரல் வில்ஹெம் ஷீலே(Carl Wilhelm Scheele) 1774 ஆம் ஆண்டில் பைரோலுசைட் என்ற கனிமத்தை ஆராய்ந்த போது குளோரினைக் கண்டுபிடித்தார். ஆனால் அப்போது இது தவறுதலாக ஆக்சிஜன் சேர்ந்த ஒரு சேர்மம் என இனமறியப்பட்டது 1810 ல் சர் ஹம்ரி டேவி இந்த வளிமத்தின் தனித் தன்மையை நிறுவினார் .இதற்கு குளோரின் என்று பெயர் சூட்டியவரும் இவரே.கிரேக்க மொழியில் குளோரோஸ்(Chloros )என்றால் மஞ்சள் கலந்த பசுமை நிறமுடைய என்று பொருள் குளோரின் இயற்கையில் தனித்துக் காணப்படுவதில்லை. ஆனால் பெருமளவு குளோரைடு உப்புக்களாக உறைந்துள்ளது. பாறை உப்புக்களிலும் கடல் நீரிலும் சோடியம் குளோரைடு பெருமளவு உள்ளது உற்பத்தி முறை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மாங்கனீஸ் டை ஆக்சைடு போன்ற ஆக்சிஜனூட்டி மூலம் ஆக்சிஜனேற்றம் செய்து குளோரினைப் பெறலாம். சோடியம் குளோரைடு,மாங்கனீஸ் டை ஆக்சைடு மற்றும் 50 % கந்தக அமிலம் இவற்றின் கலவையைக் கொண்டும் குளோரினை உற்பத்தி செய்யலாம்.வெளுப்புக் காரத்தில் (Bleaching powder) தெவிட்டிய ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை விட்டும்,அடர் மிகு ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும்,பொட்டாசியம் பெர் மாங்கனேட்டையும் வினைபுரியச் செய்தும்,கரித் தண்டுகளாலான மின்முனை வாய்களை அடர் மிகு ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் வைத்து மின்னார் பகுப்பு செய்தும் குளோரின் வளிமத்தைப் பெறலாம் பண்புகள் Cl என்ற வேதிக் குறியீட்டைக் கொண்டுள்ள குளோரினின் அணு வெண் 17 , அணு நிறை 35.45 .வளிம நிலையில் இதன் அடர்த்தி 3.21 கிகி/கமீ.இது ஈரணு மூலக்கூறுகளால் ஆனது. நச்சுத் தன்மை கொண்டது. இதன் உறை நிலை 172.2 K,கொதி நிலை 239.1 K ஆகும். முதல் உலகப் பெரும் போரின் போது போர்க்களத்தில் குளோரின் ஒரு நச்சு வளிமமாக ஐரோப்பாவில் பயன்படுத்தப் பட்டது.சிறிதளவு குளோரினைச் சுவாசித்தாலும் அது நுரையீரலைத் தீவிரமாகப் பாதிக்கின்றது. குளோரின் நீர்மம் தோலில் எரிச்சலூட்டி புண்ணாக்குகின்றது 3.5 ppm (part per million) இருந்தால் குளோரினின் நமச்சலூட்டும் மனத்தை உணரலாம்.1000 ppm இருந்தால் ஒரு சில சுவாசித்தலில் இறக்க நேரிடும்.காற்றில் அனுமதிக்கப் பட்ட இதன் அளவு 1 ppm ஆகும். குளோரின் ,ஹாலஜன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வளிமம். இது ஆக்சிஜன் போல தீவிரமாக வினை புரிய வல்லது (ஆனால் வறண்ட குளோரின் மந்தமானது ) பெரும்பாலான உலோகங்களுடன் இணைந்து குளோரைடுகளைத் தோற்று விக்கின்றது.பாஸ்பரஸ்,கந்தகம்,சோடியம் குளோரினில் பிரகாசமாய் எரிகின்றன.பொடி செய்யப்பட்டு சூடுபடுத்தப் பட்ட ஆர்செனிக் மற்றும் ஆண்டிமணி பொடியை இவ் வளிமத்தில் தூவ நெருப்புப் பொறி மழை போலப் பொழிகிறது.செம்பு இழை இவ்வளிமத்தில் எரிகின்றது.ஆக்சிஜன்,நைட்ரஜன்,கார்பன் போன்ற உலோகமற்றவைகளுடனும் குளோரின் வினை புரிகின்றது ஹைட்ரஜனுடன் கலந்து சூரிய ஒளியில் வைத்தால் சத்தத்துடன் வெடிக்கின்றது.ஹைட்ரஜன் வளிமத்தை குளோரின் வளிமத்தில் பீச்ச அல்லது குளோரின் வளிமத்தை ஹைட்ரஜன் வளிமத்தில் பீச்ச எரிகிறது ஹைட்ரஜன் மீது குளோரின் கொண்டுள்ள நாட்டம் அளவில்லாதது. அதனால் ஹைட்ரஜனீக்கம் செய்ய குளோரின் பயன்படுகிறது. தண்ணீர், ஹைட்ரஜன் சல்பைடு,டர்பன்டைன் போன்ற வற்றிலுள்ள ஹைட்ரஜனை எளிதாக அகற்றி விடுகிறது.குளோரின் வெளியில் எரியும் மெழுகுவர்த்தி புகையை எழுப்புகிறது .

No comments:

Post a Comment