Wednesday, August 15, 2012

Vethtith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள்-பாஸ்பரஸ்-வேற்றுருக்கள் (allotrope) பாஸ்பரஸ் நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட வேற்றுருக்களைக் கொண்டுள்ளது .இதை வெள்ளை,சிவப்பு,கருப்பு ,வைலெட் பாஸ்பரஸ் என்று கூறுகின்றனர்.வெள்ளை பாஸ்பரஸ்ஸை பாஸ்பரஸ் ஆவியில் 230 டிகிரி C வெப்ப நிலையில் சூடு படுத்த சிவப்பு பாஸ்பரஸ்ஸாக மாறுகிறது.இதை நீருக்குள் பொடி செய்து மாறாத வெள்ளைப் பாஸ்பரஸ்ஸை நீக்க காஸ்டிக் சோடாவில் கொதிக்க வைத்து சூடான நீரில் கழுவி நீராவியால் காய வைத்து உற்பத்தி செய்வார்கள்.இது சாக்லேட் -சிவப்பு நிறம் கொண்டது வெள்ளை பாஸ்பரஸ்ஸை விட அடர்த்தி மிக்கது [2140 கிகி/கமீ] இது தானாக ஒளிர்வதில்லை,மணத்தையும் இழந்து விடுகிறது.நச்சுத் தன்மையும் கொண்டிருப்பதில்லை.இதன் உருகு நிலை 773-873 டிகிரி K ஆக உயர்ந்து விடுகிறது.மேலும் இது 256 டிகிரி C வெப்ப நிலையில் பற்றி எரிகிறது.கார்பன் டை சல்பைடில் கரைவதில்லை.குளோரின் வளிமத்தில்சூடு படுத்தும் போது பற்றி எரிகிறது.எனினும் இந்த வேற்றுருவையும் கவனமாகக் கையாளவேண்டும் .ஏனெனில் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் சிவப்பு பாஸ்பரஸ் வெள்ளை பாஸ்பரஸ்ஸாக மாறிவிடுகிறது.சிவப்பு பாஸ்பரஸ் தீக்குச்சி செய்யப் பயன்படுகிறது. சிவப்பு பாஸ்பரஸ்ஸை உலோக ஈயத்துடன் சேர்த்து அடைக்கப்பட்ட வெளியில் 500 டிகிரி C வெப்ப நிலையில் சூடு படுத்த பாஸ்பரஸ் அதில் கரைந்து விடுகிறது.இதை குளிர்வித்து உறைய வைக்க கரைந்த பாஸ்பரஸ் பளபளப்புடன் கூடிய அவுரி நிறத்தில் படிகமாக மாறுகிறது. .இதன் அடர்த்தி 2340 கிகி/கமீ .இதன் உருகு நிலை ஏறக்குறைய 873 டிகிரி K. வெள்ளை பாஸ்பரஸ்ஸை 200 டிகிரி C வெப்ப நிலையில் உயர் அழுத்தத்திற்கு உட்படுத்த கருப்பு பாஸ்பரஸ் தோன்றுகிறது.இதன் பண்புகள் ஏறக்குறைய வைலெட் பாஸ்பரஸ் போல இருந்தாலும் இது மிகவும் சிறப்பாக வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்துகிறது. பயன்கள்
பாஸ்பரஸ்,பாஸ்பேட் உரங்களின் உற்பத்திக்கு ஒரு மூலப் பொருளாக விளங்குகிறது. பாஸ்பேட் உரங்கள் மண்ணில் பாஸ்பரஸ் சத்தை மேம்படுத்துகிறது. பாஸ்பரஸ் சோடிய ஆவி விளக்கு போன்ற சிறப்புப் பயன்களுக்கான கண்ணாடியை உற்பத்தி செய்யவும்,வெண்கல உற்பத்தி முறையிலும் பயன்படுகின்றது எலிகளைக் கொல்லும் நஞ்சாகவும்,மருந்துகள் உற்பத்தித் துறையிலும் பாஸ்பரஸ்ஸைப் பயன்படுத்துகின்றார்கள்.புகை எழுப்பும் பாஸ்பரஸ் அடங்கிய குண்டுகள் கலவரத்தை அடக்கவும்,எதிரிகளின் முன்னேற்றத்தை மட்டுப்படுத்தவும் பயன்தருகின்றன. தீக்குச்சிகளில் வெள்ளைப் பாஸ்பரஸ்ஸை பயன்படுத்த அனுமதிக்கப் படுவதில்லை. பாஸ்பரஸ் சல்பைடை இதற்காகப் பயன்படுத்து கின்றார்கள்.இது வெள்ளைப் பாஸ்பரஸ் போன்று பயன்பட்டாலும் நச்சுத் தன்மை கொண்டதில்லை.எப்பரப்பிலும் தேய்த்து எரியச் செய்யும் தீக்குச்சிகளில் ஸ்கார்லெட் பாஸ்பரஸ் (Scarlet Phosphorus)பொட்டாசியம் குளோரேட்,செவ்வீயம் போன்றவை பயன்படுகின்றன.
பாதுகாப்பான தீக்குச்சிகளில் இதே சேர்மானம் இருப்பினும் பாஸ்பரஸ் மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இதை சொரசொரப்பான வேதிப் பொருள் பூசப்பட்ட தளத்தில் எரியச் செய்ய வேண்டும். தீப்பெட்டிகளின் பக்கங்களில் இப்பரப்பு,சிவப்பு பாஸ்பரஸ்,ஆண்டிமணி டிரை சல்பைடு ,பொடி செய்யப்பட்ட கண்ணாடித் தூள் போன்றவற்றால் ஆனதாக இருக்கும்.வான வேடிக்கைக்கான வெடி பொருட்களில் பாஸ்பரஸ் பயன் தருகிறது. டிரை சோடியம் பாஸ்பேட் நீரை மென்மைப் படுத்தி கொதிகலனின் உட்சுவரில் படியும் காரைகளைத் தவிர்க்கிறது.எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் பாஸ்பரஸ் உறுதுணையாக விளங்குகிறது.உடல் நலத்திற்கு இரத்தத்திலுள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியத்தின் அளவு காக்கப்படவேண்டும்.பாஸ்பரஸ்சின் செறிவு அதிகமாகும் போது அது கால்சியத்தை வெளியேற்றி விடுகின்றது.இது இறுதியாக எலும்பு சம்பந்தமான நோய்களைத் தருகிறது.

No comments:

Post a Comment