Thursday, August 2, 2012

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் -அலுமினியம் -பயன்கள் நற்கடத்தியாக விளங்குவதால் அலுமினியம் வெப்பம் உணர் கருவிகளுக்குத் தேவையான வெப்பக்கடத்தியாகவும்,மின்சாரத்தை எடுத்துச் செல்ல மின்கம்பியாகவும் பயப்படுகிறது மின்சாரத்தை நெடுந் தொலைவு எடுத்துச் செல்லும் கம்பியாக அலுமினியத்தைப் பயன்படுத்தும் போது தடித்த கம்பிகளாக்கி மின்தடையைப் போதிய அளவு தாழ்த்திக் கொள்ள மின் இழப்பு பெருமளவு குறைக்கப் படுகிறது.பிற மின்கம்பிகளை விட எடையும் குறைவு . அலுமினியத்தின் வெப்பங் கடத்தும் திறன் அதை சமையல் பாத்திரங்களாகப் பயன்படுத்த ஏற்றதாக இருக்கிறது.கிடைக்கும் வெப்பத்தை சுற்றுப்புறத்தில் இழந்துவிடாமல் உட்புறமாகக் கடத்தி சமைக்க வேண்டிய பொருளை விரைவில் சமைத்து விடுவதற்கு இது அனுகூலமாக இருக்கிறது. எனினும் சாதாரண உப்பால் அரிக்கப்படுகிறது.வெப்பங் கடத்தும் திறனும் ,வெப்ப ஏற்புத் திறனும் அதிகமாக இருப்பதால் அலுமினியம் சூரிய ஆற்றல் சேகரிப்பான் களுக்கும்,கருவிகளுக்கும் உகந்ததாக விளங்குகிறது தூய அலுமினியம் புற ஊதாக் கதிர்களுக்கு (ultra violet rays) ஒளி மின் எலெக்ட்ரான்களை (photo electrons) உமிழ்கிறது.இதனால் அலுமினியம் புற ஊதாக் கதிர்களை ஆராயும் ஆய்கருவிகளில் பயன் தருகிறது.சீதோஷ்ண மாற்றங்களைத் தாக்குப் பிடிப்பதால் கூரை வேயப் பயன்படும் குழவுத் தகடுகள் செய்ய முடிகிறது.அலுமினியப் பொடியை எண்ணையோடு கலந்து,நீராவிக் குழாய்,எண்ணெய் மற்றும் பெட்ரோல் கிடங்கு, இயந்திரங்களின் வெப்ப ஆற்றி (radiator) போன்றவைகளில் மேற்பூச்சிடுகிறார்கள் அலுமினியப் பூச்சு இரும்பு துருப் பிடிக்காமல் பாதுகாக்கிறது உலோகவியல் துறையில் அலுமினியம் ஆக்சிஜன் நீக்கியாகப் பயன் படுத்தப்பட்டு குரோமியம்,மாங்கனீஸ் போன்ற உலோகங்கள் தனித்துப் பிரிக்கப்படுகின்றன.உருகிய எக்கில் அலுமினியம் வளிமங்களுடன் சேர்வதால் உட்புழை ஏதுமின்றி எக்கை வார்க்க முடிகிறது. அலுமினியம் மிகவும் இலேசான உலோகம்.அதனால் அது வானவூர்திகளை வடிவமைக்க இணக்கமாய் இருக்கிறது. தேவையான கட்டுறுதியை அலுமினியக் கலப்பு உலோகங்கள் மூலம் பெறுகின்றார்கள் .இவற்றுள் முக்கியமானது டூராலுமின்(Duralumin),நிக்கலாய் (Nickaloy) மற்றும் சிலுமின் (Silumin)ஆகும்.ஹிந்தாலியம் என்ற அலுமினியக் கலப்பு உலோகம் 'பிரஷர் குக்கர்‘ செய்யப் பயன்படுகிறது.இக்கலப்பு உலோகங்கள் நீர் மூழ்கிக் கப்பல்,செயற்கைக் கோள்களின் உடல் பாகங்கள்,ஏவூர்தி மற்றும் ஏவுகணைகளின் பாகங்கள் உணர் கொம்பின் (antena) சட்டங்கள்,அலைச் செலுத்திகள் (wave guides) மின் தேக்கிகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுகின்றன.கட்டடப் பொறியியலில் நிலைச் சட்டங்கள்,சன்னல்,படச்சட்டங்கள்,இடைத் தட்டிகள்,கைப்பிடிகள் போன்றவற்றில் அலுமினியம் இன்றைக்குப் பயன்படுகிறது. நேர் முனைப் பூச்சேமம்(anodising) மூலம் அலுமினியத்தின் மீது ஆக்சைடு மென்படலத்தை ஏற்படுத்தி புறப்பரப்பை மெருகூட்டுவதுடன் அரிமானத்திலிருந்தும் பாதுகாக்கின்றார்கள்.இதனால் ஒரு திண்மப் பரப்பை 90 சதவீதம் எதிரொளிக்கக் கூடியதாக மாற்ற முடியும்.இன்றைக்கு வானளாவிய கட்டடங்களின் முகப்பை இத்தகைய எதிரொளிப்புத் தட்டிகளினால் அலங்கரிக்கின்றார்கள் பல்வேறு சிறப்புப் பயன்களுக்கென பல்வேறு அலுமினியக் கலப்பு உலோகங்களை உற்பத்தி செய்துள்ளனர்.மக்னீலியம்(Magnelium)என்ற கலப்பு உலோகம் பற்றினைப்புக்குப் பயன் தருகிறது. அலுமினியப் பொடியையும் பெரிக் ஆக்சைடையும் கலந்த கலவையை தெர்மிட் (Thermit )என்பர்.இது எரியும் போது வெப்ப நிலை 3000 டிகிரி C வரை உயர்வதால் ,இரும்பு மிக எளிதாக உருகிவிடுகிறது.இதனால் உடைந்த பாகங்களையும் ,இரயில் தண்டவாளங்களையும் பற்றிணைக்க முடிகிறது.கலகக் காரர்கள் இதை ஏறிகுண்டாகப் பயன்படுத்துவர்.ஏனெனில் இதனால் தோன்றும் தீயை எளிதில் கட்டுப் படுத்தமுடியாது. அலுமினிய மென்னிழையாலான 0 .009 மில்லி மீட்டர் தடிப்புள்ள அஞ்சல் வில்லையை முதன் முதலாக ஹங்கேரி வெளியிட்டது. அதன் பிறகு பல நாடுகள் அ லுமினிய அஞ்சல் வில்லைகளை வெளியிட்டன மெல்லிய அலுமினியப் பூச்சிட்ட இழைகளாலான அலுமினியத் துணியை நெய்துள்ளார்கள்.இது கோடையில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்தும் குளிர் காலத்தில் குளிர்ச்சியிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது.அலுமினியத்தின் மற்றொரு பயன்பாடு பலானியம் (Planium) என்ற வர்த்தகப் பொருளாகும்.இது அலுமினியத்தால் மேற் பூச்சிடப்பட்ட நெகிழ்மமாகும்(Plastic).நெகிழ்மத்தை விட 10 மடங்கு அழுத்தத்தைத் தாக்குப் பிடிக்கிறது.ஆனால் அதைப் போல நெருப்பினால் பாதிக்கப்படுவதில்லை.தானியங்கு ஊர்திகள்,குளிர் சாதனப் பெட்டி இவற்றில் உட்புறம் மற்றும் மேற்புறத் தளங்கள்,சாலைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்குத் தேவையான தற்காலியத் தடுப்புச் சுவர்கள்,கை அலம்பும் தொட்டிகள் தயாரிப்பதற்கு பலானியம் பயன்படுகிறது

No comments:

Post a Comment