Sunday, August 26, 2012

Micro aspects of developing inherent skill-4


மாற்றம் வேண்டும்,மாற வேண்டும் மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாகவும்,உண்மையாகவும் இருக்க வேண்டும். பலர் அப்படி இருப்பதில்லை.சிகை அலங்காரத்தை மாற்றுவதாலோ,கைக் கடிகாரத்தை மாற்றுவதாலோ,பிரஞ்சு பியர்டு வைத்துக் கொள்வதாலோ,வேட்டிக் கரையை மாற்றுவதாலோ ,கும்பிடும் சாமியை மாற்றுவதாலோ ஒருவர் நினைக்கும் மாற்றங்கள் நிஜமாவதில்லை.மாற்றம் வேண்டும் என்பது ஒரு தொடக்கம்.அது தீர்மானமாய் இருக்கும் போது அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வது எளிதாகிறது.அதனால் திறந்த மனதுடன் மாற வேண்டும் என்ற ஒருவருடைய முதல் தீர்மானம் முக்கியமானதாகிறது.அதாவது இப்படி ஒரு தீர்மானம் எடுக்காமல் யாரும் மாற்றத்தின் பாதையில் அடி எடுத்து வைக்க முடியாது.வேறு எந்த மாற்றங்கள் குறிந்து எடுக்கப்படும் முடிவுகளும் செயல் நிலைக்கு வராமல் மனதிற்குள்ளேயே புதைந்து போகும். பெரும்பாலான மக்கள் தீர்மானம் மேற்கொள்ளும் நிலையைத் தாண்டி ஒருபோதும் செல்வதில்லை. மாற்றம் வேண்டும் என்று நினைத்த பலர் மாறிய நிலையை அடையாமல் போவது இதனால் தான். மாற்றங்களை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கான விளக்கங்கள் முதலில் அம்மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்திற்குப் பிறகே வருகிறது. இத் தீர்மானம் மாற்றத்தை அடைவதற்கான வழிமுறைகளைத் தீர்மானிக்கத் தேவையான நுண்ணறிவையும் ,செயல் திறனையும் தருகின்றது இலக்கைச் சரியாகத் தீர்மானித்தவன் அதை எட்டும் வழியை எளிதாகத் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தி விடுகிறான் மாற்றம் தொடர்பாக எடுக்கும் ஒரு தீர்மானம் தவறாகக் கூட இருக்கலாம் தவறான தீர்மானத்தை எடுப்பது தவறில்லை ஆனால் தீர்மானமே எடுக்காமல் இருப்பதுதான் தவறாகும் ஏனெனில் தவறான ஒரு தீர்மானத்தை பிற்பாடு திருத்திக் கொள்ள முடியும் ,இல்லாத தீர்மானத் தில் அப்படியொரு அனுகூலமில்லை. தவறுகள் அனுபவங்களினால் கற்றுக்கொள்ளும் பாடங்கள்.இந்தப் பாடத்தைப் படித்தவன் வாழ்கையில் அதுபோன்ற தவறு மீண்டும் வருவதேயில்லை.ஆனால் தவறுகளின்றி வெற்றி பெற்றவன் வாழ்கையில் தவறுகள் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது.ஏனெனில் செய்யாத தவறுகளினால் எதையுமே முழுமையாகக் கற்றுக் கொள்ள முடியாது பலர் விரிவான திட்டங்களைத் தீட்டுவார்கள் ஆனால் அதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.அதனால் அவர்களுடைய முயற்சியில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காண மாட்டார்கள்.நீண்ட காலமாகத் தொடரும் தீர்மானமின்மை அவநம்பிக்கை,சந்தேகம்,பயம் போன்ற அகத்தடைகளை ஊக்குவித்து ஒவ்வொருவரும் அவர்களாலேயே தோற்றுப் போகச் செய்யும். ஓடாத காருக்கு திசை தெரியவேண்டியதில்லை.ஆனால் அந்தக் கார் ஓடத் தொடங்கினால் அதற்கு செல்லும் திக்குத் தெரிய வழிகாட்டல்கள் கிடைக்கின்றன. அதுபோல ஓய்வாக உட்கார்ந்திருப்பவனுக்கு வழிகாட்டிகள் தேவையில்லை,அவன் எண்ணத்தில் அவைகள் தோன்றுவதுமில்லை.ஆனால் வண்டியில் பயணம் செய்து இயக்கத்திலிருப்பவனுக்கு செல்லும் திசை தெரியவேண்டும்.இலக்கை நோக்கி இயங்கத் தொடங்கியதுமே வழிநெடுக வழிகாட்டல்கள் கிடைக்கிறன.ஓய்வு நிலையிலிருந்து இயக்க நிலைக்கு மாறிக்கொள்ளும் போது இந்த வழிகாட்டுதல்கள் நமக்குள்ளே இயல்பாகத் தோன்றுகின்றன. அது மாற வேண்டும் என்ற உறுதியான தீர்மானம் தந்த ஆற்றல்.மாற வேண்டும் என்று எப்பொழுது உறுதியான,உண்மையான தீர்மானம் எடுத்துவிட்டோமோ அப்பொழுதே வெற்றி நிச்சியமாகி விடுகிறது என்று இதனால்தான் கூறுகின்றார்கள்.

No comments:

Post a Comment