Monday, August 27, 2012

Vethith Thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள்- குளோரின் -பயன்கள்
நீரில் குளோரின் கரைகிறது.அதைக் குளோரின் நீர் என்பர்.நீரைக் கொதிக்க வைத்தால் குளோரின் வெளியேறிவிடுகிறது.சூரிய ஒளியில் குளோரின் நீர் ஹைட்ரோ குளோரைடாக மாறுகிறது.அப்போது ஆக்சிஜன் வெளியேறுகின்றது . நீரில் உள்ள நோய்க் கிருமிகள்,தீமை பயக்கும் நுண்ணுயிரிகள் இவற்றைப் பேரளவில் அளிக்க குளோரின் வளிமம் பயன்படுகின்றது.இதனால் குடி நீர் விநியோக முறையிலும் ,நீச்சல் குளத்திலுள்ள நீரைத் தூய்மையூட்டுவதிலும் குளோரினைப் பயன்படுத்துகின்றார்கள் .குளோரின் நுண்ணுயிரிகளை ஓரளவு விரைவாக அழிக்கும் மலிவான பொருளாகும்.எனினும் வைரஸ் எனப்படும் சில நச்சுயிரிகளை குளோரினால் அழிக்க முடிவதில்லை.மேலும் நீரிலுள்ள சில கரிமப் பொருட்களுடன் வினை புரிந்து,புற்று நோய்க் காரணிகளுள் ஒன்றாகக் கருதப் படுகின்ற டிரைகுளோரோ மீத்தேனை உற்பத்தி செய்து விடுகிறது .இதனால் குளோரின் பண்டுவம் குடி நீருக்கு முழுமையான வழி முறை எனக் கூற முடியாது.மேலும் குளோரினால் நீரின் இயல்பான சுவை குன்றிப் போகிறது.இதனால் இன்றைக்கு குளோரினுக்குப் பதிலாக ஓசோனைப் பயன்படுத்துகின்றார்கள் குளோரின் வெளுப்பூட்டியாகச் செயல்படுகின்றது பயனுறுதிறன் மிக்க வெளுபூட்டியின் வளர்ச்சி நீண்ட காலமாக இருந்து வருகிறது. தொடக்கத்தில் குளோரின் நீரே இதற்குப் பயன்படுத்தப் பட்டது.ஆனால் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் பருத்தி,லினன் ஆடைகளைப் பாதிக்கின்றது .இன்றைக்கு வீடுகளில் பயன்படுத்தப் படும் நீர்ம வெளுபூட்டி சோடியம் ஹைபோ குளோரைட்டின் மென் கரைசலாகும் .குளோரின் வளிமம் காகிதம்,அட்டை போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளில் வெளுபூட்டியாகப் பயன் படுகிறது.பாலி வினைல் குளோரைடு(PVC)போன்ற நெகிழ்மங்களை(Plastic) உற்பத்தி செய்யும் முறையில் குளோரின் ஒரு மூலப் பொருளாகும் .அரிமானத்திற்கு உட்படாததாலும்,எடை குறைந்ததாக இருப்பதால் கையாளுவதற்கு எளிதாக இருப்பதாலும் ,நீர் மற்றும் நீர்மங்களை எடுத்துச் செல்லும் குழாயாக இரும்பிற்குப் பதிலாக இன்றைக்கு நெகிழ்மக் குழாய்கள் பயனில் உள்ளன.கண்ணாடி போன்று நிறமற்ற நெகிழ்மங்கள் நீர்மங்களை வைத்திருக்கும் கொள்கலனாகப் பயன்படுகின்றன பல்வேறு பொருட்களின் உற்பத்தி முறையில் குளோரின் பயன்படுத்தப் படுகின்றது.சாயங்கள்,துணிகள்,பெட்ரோலியப் பொருட்கள்,மருந்துப் பொருட்கள்,நஞ்சுத் தடை மருந்துகள்,பூச்சி கொல்லி மருந்துகள்,உணவுப் பண்டங்கள்,கரைப்பான்கள்,வண்ணப் பூச்சுகள் எனப் பலதரப்பட்ட மக்கள் பயன்பாட்டுப் பொருட்களின் உற்பத்தி முறையில் குளோரினின் முக்கியம் உணரப்பட்டுள்ளது.பயன்களைத் தரும் வேறு பல வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு குளோரின் ஒரு மூலப் பொருளாகவும் உள்ளது.இவற்றுள் கார்பன் டெட்ரா குளோரைடு,குளோரோபாம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.எண்ணெய் மற்றும் மசகுப் பொருட்களுக்கு கார்பன் டெட்ரா குளோரைடு ஒரு கரைப்பானாக உள்ளது.துணிகளை நீரில் நனைக்காமலேயே சலவை செய்ய இந்தக் கரைப்பான் பயன்படுகிறது.எனினும் ஈரலுக்கு மிகவும் நஞ்சானது என்பதால் இப் பயன்பாடு மட்டுப் படுத்தப் பட்டுள்ளது.குளோரோபாம் எளிதில் ஆவியாகக் கூடிய நீர்மம்.இது அறுவைச் சிகிச்சையின் போது மயக்கமூட்டும் மருந்தாகப் பயன்படுத்தப் படுகின்றது.இது ஈரல் மற்றும் சிறுநீரகங்களைத் தீவிரமாகப் பாதிக்கின்றது என்பதால் இதைக் கவனமாகக் கையாள வேண்டியது அவசியமாகும். குளிர் சாதனங்களில் உறைபதனப் பொருளாக (refrigerant) குளோரோ புளுரோ கார்பன் நெடுங்காலமாகப் பயன் படுத்தப்பட்டது.ஆனால் இது குளோரினின் தனிக் கூறுகளை (free radical) வெளியிட்டு வளி மண்டலத்தின் மேல் அடுக்குகளில் தங்கி பாதுகாப்புக் கவசமாக விளங்கும் ஓசோன் படலத்தைச் சிதைத்து அழிக்கின்றது என்பதால் இப் பயன்பாடு இன்றைக்குப் புறக்கணிக்கப் பட்டுள்ளது .

No comments:

Post a Comment