Saturday, November 10, 2012


சிறு கதை காதலில் புனிதம் எங்கே இருக்கிறது ? என்றைக்குமே அலுக்காத காதலை மீண்டுமொருமுறை முழுமையாகச் சுவைத்து விட்டுத் திரும்பிப் படுத்த மன்மதனைத் தன் பக்கம் திருப்பிய ரதி "ஸ்வாமி, இன்றைக்கு தேவலோகத்தில் காதலர் தினம். இந்தக் காதலை மிகவும் புனிதமாக மதிக்கும் பூலோக மனிதர் ஒருவரை தேவலோகம் அழைத்து வந்து பொன்னும் பொருளும் கொடுத்து சந்தோசமாய் அனுப்பிவைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனக்காக இதைச் செய்வீர்களா ?” எனக் கேட்டாள். ரதி சொல்லி என்றைக்கு மன்மதன் மாட்டேன் என்று மறுத்திருக்கிறான். ஐ -பாடை எடுத்து பட்டியலில் முதல் மூன்று மனிதர்களைத் தேர்வு செய்தான். எல்லோரும் காதலைப் புனிதமாக மதித்து காதலைத் தொடர்ந்து செய்து வருபவர்கள். தன் கிளி வாகனத்தில் ஏறி பூலோகம் வந்து மூவரையும் தனித்தனியாகச் சந்தித்து யார் ரதியின் அறுசுவை விருந்தில் கலந்து கொள்ளத் தகுதியானவர் எனத் தெரிந்து கொள்ள விசாரிக்கலானான். முதல் மனிதன்" வேறு ஜாதி இல்லை ,வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செய்து காதலித்துக் கொண்டே இருக்கிறோம் " என்றான். இரண்டாவதாக வந்தவன் "ஜாதி வேறு, மதம் வேறு ,நாடு வேறு, மொழி வேறு இருந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்”என்றான். மூன்றாவதாக வந்தவன் ," காதலிக்கும் போது அவள் அழகாக இருந்தாள். ஒரு சாலை விபத்தில் அவள் தாய்மையாகும் தகுதியை இழந்தாள். என் உறவினர்கள் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளாதே என்றனர்.ஆனால் நான் காதலித்தவளையே திருமணம் செய்து கொண்டேன்” என்றான். மூன்றாவது ஜோடியின் காதலே புனிதமானது என்று முடிவு செய்த மன்மதன் அந்த ஜோடியை தேவலோகம் அழைத்துச் சென்று வயிறு நிறைய விருந்தும் மனம் நிறைய மகிழ்ச்சியும் கொடுத்து வழியனுப்பி வைத்தான்.உடலுறவு என்று ஒன்று மட்டும் இல்லாதிருந்தால் பூவுலகில் காதலே இல்லாது போயிருக்கும். உடலுறவிற்காக காதல் இல்லை என்பதை உணர்த்தும் மூன்றாவது மனிதனின் காதலே புனிதமானது என்று பின்னாளில் மன்மதன் ரதிக்கு விளக்கமளித்தான்

No comments:

Post a Comment