Wednesday, November 28, 2012

Sonnathum Sollaathathum-7



சொன்னதும் சொல்லாததும் -7

புதிய கண்டுபிடிப்புகள் எதுவும் நாம் படிக்கும் பாடப் புத்தகங்களிலிருந்து தோன்றுவதில்லை பாடங்களைப் படிப்பதின் மூலம் நாம் வளர்த்துக் கொள்ளும் கற்பனை களின் வளமே அந்தப் புதிய கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இருக்கிறது. அந்தக் கற்பனையால் முடியாதது என்று எதுவும் இல்லை. அங்கு முடியாததும் முடியும், எட்டாத உயரமும் எட்டும், அனந்தம் கூட அங்கே ஒரு எண்ணக் கூடிய எண் தான் .

2011 -ம் ஆண்டு வேதியியலுக்கான நோபெல் பரிசு பெற்ற டேனியல் சசெக்ட்மன் (Daniel Schechtman ) னின் முயற்சிகள் இக் கருத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதுபோல் இருக்கின்றன .24 ஜனவரி 1941 ல் இஸ்ரேல் நாட்டில் டெல் அவிவ் நகரில் பிறந்தவர். படிகம் போன்று தோற்றம் தரும் திண்மப் பொருளைக் கண்டுபிடித்ததற்காக நோபெல் பரிசை வென்றவர் .இயற்பியல்,வேதியியல்,மருத்துவம் போன்ற துறைகள் பல கிளைகளாக விரிந்து பலராலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் அதிகமாக தெரிவிக்கப்படுவதால் ,பொதுவாக ஒவ்வொரு துறையிலும் இரண்டு அல்லது மூன்று சாதனையாளர்களுக்கு நோபெல் பரிசை பகிர்ந்து அளிப்பார்கள் .2011 ல் வேதியியலுக்கான நோபெல் பரிசு டேனியல் சசெக்ட்மன்னுடைய கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் கருதி அவருக்கு மட்டுமே அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

"படிகம் போலத் தோற்றம் தரும் படிகம் இல்லை,விஞ்ஞானிகள் போலத் தோற்றம் தரும் விஞ்ஞானிகள் மட்டுமே இருக்கின்றார்கள் " என்று இரு  நோபெல் பரிசு பெற்ற (வேதியியல் மற்றும் சமாதானம் ) லினஸ் பாலிங், டேனியல் சசெக்ட்மன்னுடைய கண்டுபிடிப்பை மறுத்துக் கூறினார்.

 இது போன்று இயற்பியல் பண்புடைய புதிய திண்மப் பொருளைக் கண்டுபிடித்த போது அதை யாரும் நம்பவில்லை. அவருடன் இருந்து ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் கூட இது இயலாதது என்றே நினைத்தார்கள் .ஆனால் காலம் செல்லச் செல்லஅவருடைய கண்டுபிடிப்பின் உண்மையை அறிந்துகொண்டார்கள் .கற்பியலான படிகங்கள் (Quasi crystals )தனிச் சிறப்பான இயற்பியல் பண்புகளைப் பெற்றுள்ளன -கடினமாகவும் ,உடைந்து நொருங்கக் கூடியதாகவும் வழுவழுப்பாகவும் ,பல உலோகங்கள் போலன்றி மின் கடத்தாப் பொருளாகவும் இருக்கின்றன. வரையறுக்கப்பட்ட ஒரு பாங்கில் அணுக்கள் திணிக்கப்பட்டிருந்தாலும் இயல்பான படிகங்களில் காணப்படுவதைப் போன்று கட்டமைவுப் பாங்குகள் தொடர் வரிசையில் தோன்றி யிருப்பதில்லை.இவை புதிய பயன்களை உலகிற்கு வழங்கி இருக்கின்றன,

காலத்தால் நான் கற்றுக்கொண்டது ஒரு முக்கியமான பாடம் -" ஒரு நல்ல விஞ்ஞானி அடக்கமாக எதையும் உற்றுக் கவனிப்பவராக இருப்பார் . வெறும் புத்தகத்தை மட்டுமே படிப்பவராக இருக்க மாட்டார் " என்று டேனியல் சசெக்ட்மன் கூறிய கருத்து இளைய தலைமுறை விஞ்ஞானிகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது..

இயற்கையே விஞ்ஞானத்தின் மூலம் .எவர் இயற்கையை நுட்பமாய் ஆராயகின்றார்களோ அவர்களே விஞ்ஞானத்தில் சாதனை படைக்கின்றார்கள் என்ற பேருண்மைக்கு இவருடைய அறிவியல் வாழ்கை நமக்கு ஒரு பாடம் .

No comments:

Post a Comment