Tuesday, November 13, 2012

Vethith thanimangal


வேதித் தனிமங்கள் - குரோமியம் -கண்டுபிடிப்பு

குரோமியம் இயற்கையில் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை.குரோமியத்தின் செழிப்பு பூமியின் மேலோட்டுப் பகுதியில் ஓரளவு செறிவாகக் (0.02 %) காணப்படுகிறது . குரோமியம், குரோமைட் என்ற செவ்வீயத் தாது, குரோமிடைட், குரோகோய்சைட் போன்ற கனிமங்களைப் பெற்றுள்ளது . இதில் குரோமைட் தாது இந்தியாவில் சேலம் மாவட்டத்திலும் துருக்கி,ஈரான்,அல்பேனியா,பின்லாந்து,பிலிப்பைன்ஸ்,மலகாசி மற்றும் தென் ரொடிஷியாவிலும் கிடைக்கின்றது.இத் தனிமம் 1797 ல் வாக்குலின் என்ற வேதியலாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

குரோ கோய்சைட் கனிமத் தூளை பொட்டாசியம் கார்பனேட்டுடன் கலந்து கொதிக்க வைக்க ஈய கார்பனேட்டும் ஒரு வகையான மஞ்சள் நிற நீர்மமும் விளைந்தன. இது ஒரு வகைப் புதிய அமிலத்தின் பொட்டாசிய  உப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். பல்வேறு வினைமங்களுடன் (reactants) இன் நீர்மத்தைச் சேர்க்க கரைசல் பல்வேறு நிறங்களைப் பெறுவதைக் கண்டார். பாதரச உப்புக்கள் சிவப்பு நிறத்தையும் , ஈய உப்புக்கள் மஞ்சள் நிறத்தையும், டின் குளோரைடு பச்சை நிறத்தையும், கரைசலுக்கு ஊட்டின.இதன் காரணமாக நிறம் என்ற பொருள் தரக் கூடிய கிரேக்க மொழிச் சொல்லான 'குரோமா' என்ற சொல்லிலிருந்து குரோமியம் என்ற சொல்லை உருவாக்கி அப் புதிய தனிமத்திற்குப் பெயர் சூட்டினார்

அலுமினியத்தினால் ,குரோமியம் ஆக்சைடை ஆக்சிஜநீக்க வினைக்கு வெப்ப வூட்டல் முறையினால் (thermite process ) உட்படுத்திப் பெறமுடியும்.இது மாங்கனீஸ் உலோகத்தைத் தனித்துப் பிரிப்பதற்குப் பின் பற்றப்படும் வழிமுறையை ஒத்தது.

பண்புகள்

இதன் வேதிக் குறியீடு Cr ஆகும் .இதன் அணுவெண் 24 ,அணு நிறை 52, அடர்த்தி 7190 கிகி/கமீ,உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 2173 K, 2873 K ஆகும். .

குரோமியம் மெல்லிய நீலம் பாய்ந்த வெண்ணிறங் கொண்ட மிகவும் கடினமான,பொலிவு மிக்க,உடைந்து நொருங்கக் கூடிய ஓர் உலோகமாகும்.

அதனால் இதை முழுஅளவில் மெல்லிய தகடாக அடிக்கவோ கம்பியாக இழுக்கவோ முடிவதில்லை ஆக்ஸி- ஹைட்ரஜன் சுடரில் பிரகாசமாய் எரிந்து அதன் ஆக்சைடை உண்டாக்குகின்றது . செந்தணலாய் சூடுபடுத்தப் பட்ட குரோமியம் நீராவியைப் பகுக்கின்றது .

காற்று வெளியில் நிலையானது .நீர்த்த அமிலங்களில் மெதுவாகக் கரைந்து, காற்று வெளித் தொடபில்லாத போது நீல நிறத்தில் குரோமஸ் உப்புக் கரைசலையும், ஹைட்ரஜனையும்,காற்று வெளித் தொடர்பு கொள்ளும் போது அக் கரைசல் விரைந்து பச்சை நிறங் கொண்ட குரோமிக் உப்புக் கரைசலாகவும் மாற்றம் பெறுகிறது. உயர் உருகு நிலை ,உயரளவு கடினத் தன்மை ,பிற உலோகங்களுடன் கலந்து கலப்பு உலோகத்தை ஏற்படுத்தக் கூடிய நல்லிணக்கம், போன்ற பண்புகள் கலப்பு உலோகத் துறையில் பலன் தருகின்றன. மிகச் சிறிதளவு வேற்றுப் பொருள் தூய குரோமியத்தோடு கலந்திருந்தாலும் அதை நொறுங்கும் தன்மையுடையதாக்கி விடுகின்றது. ஆனால் குரோமியக் கலப்பு உலோகங்கள் இக் குறைபாடுகளைப் பெற்றிருப்பதில்லை .

குரோமியம் நல்ல மின் மற்றும் வெப்பங் கடத்தியாக உள்ளது. ஆனால் 37 டிகிரி C ல் குரோமியத்தின் இத்தகைய பண்புகள் மாறுதலுக்கு உள்ளாகின்றன. இதன் அக உராய்வு பெருமத்தை எட்டுகிறது. மீள் குணகம் சிறுமத்தைத் தொடுகிறது.வெப்பஞ் சார்ந்த பெருக்கம் ,வெப்ப மின்னியக்கு விசை ,மின் கடத்தும் திறனில் கூட திடீர் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வெப்ப நிலை சார்ந்து இணை திறனில் ஏற்படும் மாற்றங்கள் குரோமியத்தின் உலோக நிலைகளை வேறுபடுத்தலாம் என்று சிலர் கருதுகின்றனர்

No comments:

Post a Comment