Monday, November 12, 2012

Short story


சிறு கதை

நீதி கட்சி மாறுவதில்லை

ராஜதுரை அமைச்சராகப் பதவி ஏற்ற அன்று அவரது வாழ்கையின் இறுதி நாளானது என்று ஊடங்கங்களில் வந்த செய்தி கேட்டு இருபது வருடங்களாக கடவுளே இல்லை என்று எனக்குத் தெரிந்த கடவுளை எல்லாம் திட்டிக் கொண்டிருந்த நான் முதல் முதலாக ஊருக்கு வெளியில் இருந்த ஐயனார் கோவிலுக்குச் சென்றேன்.

ராஜதுரையும் நானும் கிராமத்தில் தொடக்கப் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். நான் மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு பியூனாகச் சேர்ந்து விட்டேன் .ராஜதுரை ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டவில்லை.முரட்டுப் பயலாக வளர்ந்தவன் ஊரில் பெரிய ரௌடியானான்.

அடி உதை,கட்டப் பஞ்சாயத்து ,ராஜ்வ் காந்தி வேலை வாய்ப்புத் திட்டத் தலைவர் ,ரோடு கான்டிராக்ட்,பஞ்சாயத்துத் தலைவர், ஆளுங் கட்சியில் இளைஞர் அணித் தலைவர் ,எம்.எல் என்று படிப்படியாக  நிலை உயர்ந்து வந்தான். நிலை உயர உயர அவன் செய்யும் தவறுகளும் ,குற்றங்களும் அதிகரித்தன.தட்டிக் கேட்ட அம்மாவையே தள்ளி விட்டவன்.யாருக்கும் நேரடியாக எடுத்துக் கூற தையிரியம் இல்லை. அவனால் துன்பப் பட்டவர்கள் துவண்டு அழும்போது ,எல்லோரும்இந்தக் கடவுளுக்கு இரக்கமே இல்லையா ,இந்தப் பாபிக்கு ஒரு முடிவு காலம் வராதா’ என்று வயிறு எரிய சொல்லுவார்கள்.இப்போது ராஜதுரை அமைச்சராகப் போகிறார் என்ற பேச்சு வேறு அடிபடுகிறது. நல்லோர் துவள தீயோர் மேலும் மேலும் வளருவதோ என்று பாதிக்கப்பட்ட பலரும் வருத்தப்பட்டார்கள் .

ராஜதுரையின் அஞ்சாநெஞ்சம் தலைவருக்குப் பிடித்து போனதால் அவனுக்கு அமைச்சர் பதவியை புடுங்கிக் கொடுத்தார்.அன்று கவர்னர் முன்னிலையில் பதவிப் பிரமாணம்.வார்த்தைகள் வெளி வரும்போது ராஜதுரையின் கைகள் நெஞ்சைப் பிடித்தன ,வாயிலிருந்து இரத்தம் வழிந்தது.அடுத்த கணமே அவன் உடல் மேடையில் சாய்ந்தது. அதிக மகிழ்ச்சி காரணமாக உயிர் பிரிந்தது என்று டாக்டர்கள் பேசிக் கொண்டது ஊடகங்களில் வரவில்லை .

அதிக மகிழ்ச்சியால் சாக வேண்டும் என்பதற்காக மகிழ்ச்சியைக் கடவுள் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக் கொடுத்து வந்திருக்கிறார் என்பதை அந்தச் சன்னதியில் புரிந்து கொண்டேன் .

No comments:

Post a Comment