வேதித் தனிமங்கள் -புரோமின் -கண்டுபிடிப்பு
1825 ல் ஜெர்மனி நாட்டின் ஹைடெல் பெர்க் பல்கலைக் கழகத்தின் லோவிக் (Lowig ) என்ற மாணவர் ஒரு நீரூற்றிலுள்ள நீரில் சேர்ந்துள்ள உப்புக்களின் சேர்மானம் பற்றி ஆராய்ந்தார் .அக்கரைசல் வழி குளோரினைச் செலுத்த அது உப்பு நீருக்குச் செந்நிற மூட்டியது ஈதர் மூலம் உப்பு நீருக்கு நிறமூட்டிய பொருளைத் தனித்துப் பிரிக்க ,அது செம்பழுப்பு நிறத்தில் நீர்மமாக இருந்தது அதுவே பிற்பாடு புரோமின் என அழைக்கப்பட்டது .எனினும் தூய்மையான புரோமினைப் பெற்று அதன் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை முழுமையாகத் தெரிவிக்காததால் அதைக் கண்டுபிடித்த பெருமை அவருக்குக் கிடைக்கவில்லை .
1826 ல் பிரான்ஸ் நாட்டின் பாலார்டு (A .Balard) புரோமினைக் கண்டுபிடித்தார் .ஒரு குடுவையில் பொட்டசியம் ப்ரோமைடு,மாங்கனீஸ் டைஆக்சைடு மற்றும் நீர்த்த கந்தக அமிலம் இவற்றை இட்டு சூடுபடுத்தி எழும் கருஞ் சிவப்பு ஆவியை குளிர்வித்து நீர்மமாக்கி புரோமினைப் பெறலாம் .பாலார்டு இதற்கு முறைடு (Muride ) எனப் பெயரிட்டார் .இலத்தீன் மொழியில் முறியா என்றால் உவர் நீர் எனப் பொருள் .அறை வெப்பநிலையில் நீர்ம நிலையில் ஒரே உலோகம் புரோமினாகும் .பின்னர் வேதியியலார் இதற்கு கிரேக்க மொழியில் கவிச்சி நாற்றமுடைய என்ற பொருள்படும் புரோமோஸ் என்ற சொல்லிலிருந்து புரோமின் என்ற பெயரைத் தேர்வு செய்தனர் .
பண்புகள்
இதன் அணுவெண் 35,அணு நிறை 79.91 கருஞ் சிவப்பு நீர்மமான இதன் அடர்த்தி 3120 கிகி/கமீ .உருகு நிலை 265.85 K ,கொதி நிலை 331.4 K ஆக உள்ளன.அறை வெப்ப நிலையிலேயே ஆவியாகி பழுப்பு நிற ஆவியாக வெளியேறுகின்றது .குளோரின் போல இதன் ஆவி உடனடியாக மூக்கையும் ,தொண்டையையும் பாதிக்கின்றது.தோலில் பட்டால் மஞ்சள் நிறத்தில் தீச் சுட்ட புண்ணை ஏற்படுத்துகின்றது.இது போன்ற விபத்திற்கு அவ்விடத்தை உடனடியாகத் தூய நீரால் கழுவி,சோடியம் பை கார்போனேட் கரைசலால் சுத்தப்படுத்தி ,பின்னர் வாசிலின் தடவி புற ஊடகத்திற்குத் தடுப்பாக ஒரு மறைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் .உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் வேதிப் பொருட்களுள் புரோமினும் ஒன்று .
புரோமின் ஓரளவு நீரில் கரைந்து புரோமின் நீரை உண்டாக்குகின்றது .இது குளோரின் நீர் போலன்றி நிலையாக இருக்கின்றது .கார்பன் டை சல்பைடு ,குளோரோபாம் போன்றவற்றில் உடனடியாகக் கரைந்து ஆரஞ்சு-சிவப்பு நிற நீர்மத்தை ஏற்படுத்துகின்றது .
குளோரின் போல புரோமினும் வினை யூக்கமிக்க தனிமமாகும் .பல தனிமங்களுடன் இணைந்து புரோமைடை உண்டாக்குகின்றது .பாஸ்பரஸ் ,பொட்டசியம் ,புரோமினில் வெடிப்புடன் எரிகின்றன .பொடி செய்யப்பட்ட ஆர்செனிக் மற்றும் ஆண்டிமணி யும் வெடிப்புடன் எரிகின்றன .சூடுபடுத்திய நிலையில் ஹைட்ரஜனும் புரோமினும் இணைகின்றன..
புரோமின் ஒரு வலுவான வெளுப்பூட்டியாகும் .அதனால் ஸ்டார்ச்சை மஞ்சள் நிறமாக நிறமாற்றம் செய்கின்றது .இது ஆக்சிஜனேற்றம் செய்யும் காரணியாகவும் விளங்குகின்றது .
பயன்கள்
புரோமினின் முக்கியமான ஒரு பயன் எதிலின் டை புரோமைடாகும் .இதை ஈதைல் பெட்ரோலில் கலந்து அதிலுள்ள ஈயத்தை ஈய புரோமைடாக ஆவியாக்கி வெளியேற்றுகின்றது .இப்படிச் செய்யாவிட்டால் பொறித் தக்கையில் படிந்து அதனை நாளடைவில் செயலிழக்கச் செய்துவிடும் ..இது தொற்றுத் தடை மருந்தாகவும் பயன்படுகின்றது .புகை உண்டாக்கியாகவும் (fumigants ),நீர் சுத்திகரிப்பு வழிமுறையில் கிருமி நாசினியாகவும் ,சாயம் மருந்துப் பொருட்கள் மற்றும் புகைப்படத் தொழிலுக்குத் தேவையான வெள்ளி புரோமைடு போன்ற வேதிப் பொருட்கள் தயாரிக்க புரோமின் பெரிதும் நன்மை அளிக்கின்றது .பொட்டசியம் புரோமைடு மயக்க மூட்டியாக ப் பயன்படுத்தப் படுகின்றது .