Tuesday, March 5, 2013

விண்வெளியில் உலா -கோர்வஸ்
விர்கோ வட்டாரத்திற்கு தெற்காக உள்ள ஒரு சிறிய வட்டாரம் . இதில் மொத்தம் 15 விண்மீன்களை இனமறிந்துள்ளனர் .இது நீர்ப்பாம்பான ஹைட்ராவின் சுருண்ட உடல் மீது அமர்ந்திருக்கும் ஒரு காக்கையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது .கிரேக்க புராணத்தில் அப்பல்லோ என்ற சூரியக் கடவுளால் ,ஒரு கோப்பையில் நீர் கொண்டுவருமாறு இக் காக்கை கேட்டுக் கொள்ளப்பட்டது .(இக் கோப்பை அண்டை வட்டாரமான கிரேட்டரால் சுட்டிக் காட்டப் படுகின்றது). ஆனால் பேராவலால் உந்தப்பட்ட காக்கை அத்திப் பழத்தைத் தின்று கால தாமதத்தை ஏற்படுத்தி விட்டு ,இதற்கு நீர்ப்பாம்பான ஹைட்ராவே காரணம் என்று வழக்காடியது .அப்பல்லோ சிறிதும் ஏமாறாமல் அந்தக் காக்கை இனி என்றும் தாகத்தால் அவதிப் படட்டும் என்று காக்கையும் ,எட்டாத தொலைவில் அந்தக் கோப்பையையும் விண்ணில் பதிய சபித்து விட்டார் .
இவ்வட்டாரத்தில் பிரகாசமிக்க விண்மீன் 3 என்ற ஒளிப்பொலிவெண் கொண்ட காமா கோர்வியாகும். இது ஓர் இரட்டை விண்மீன் .இதன் துணை விண்மீன் 24 வினாடிகள் கோண விலக்கத்தில் ஒளிப்பொலிவெண் 8 உடன் உள்ளது .காமா கோர்வி வெப்ப மிக்க வெண்ணிற பெரு விண்மீனாக 130 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது .ஏறக்குறைய அதே தொலைவில் உள்ள டெல்டா கோர்வியும் ஓர் இரட்டை விண்மீனே.இதில் முதன்மை மற்றும் துணை விண்மீன்களின் தோற்ற ஒளிப்பொலிவெண் ,மிகுந்த வேறுபாட்டுடன் முறையே 3.0,9.0 ஆக உள்ளது .இந்த விண்மீனை நம்மவர்கள் ஹஸ்தம் என அழைப்பர் .
இவ்வட்டாரத்தில் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் இரு அண்டங்கள் காணப்படுகின்றன .அவற்றை NGC 4038 மற்றும் NGC 4039 எனப் பதிவு செய்துள்ளனர் .இதை ஆண்டனெ (Antennae) என்பர் .இதில் இரு ஒளிக் கதிர் கோடுகள் ,ஒரு பூச்சியின் உணர்கொம்பு போல காணப்படுவதால் இதற்கு இப்பெயரிட்டனர்.
இரு அண்டங்கள் ஒன்றோடொன்று மோதும் போது பெரிய வெடிப்பு ஏற்படும் என்றும், அதனால் நெடுந்தொலைவு வரையுள்ள விண்ணுருப்புக்கள் எல்லாம் பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்த்தால் அதுதவறாகும் .தலைகீழ் இருமடி விதியின்படி இரு விண்ணுருப்புகளுக்கு இடையேயான ஈர்ப்பு அவைகளுக்கு இடைப்பட்ட தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்தில் இருப்பதால்,இடைத்தொலைவு அதிகரிக்க ,ஈர்ப்பு விசையும் விரைந்து குறையும் .அருகருகேயுள்ள இரு விண்மீன்களுக்கு இடைப்பட்ட சராசரித் தொலைவிற்கும் விண்மீனின் சராசரி ஆரத்திற்கும் உள்ள தகவு பத்து மில்லியன் என்ற நெடுக்கையில் இருக்கிறது .அண்டங்களால்  நிறைந்த வெளியில் (கொத்து அண்டங்கள் ) ,இத் தகவின் மதிப்பு ஏறக்குறைய 20 ஆக உள்ளது .இது இரு அண்டங்கள் மோதுவதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் குறைந்தது 15 பில்லியன் வருடங்கள் எனத் தெரிவிக்கின்றது .இந் நிகழ்வில் ஓர் அண்டம் மற்றோர் அண்டத்தில் ஊடுருவிச் செல்கிறது .அதிலுள்ள விண்மீன்களைப் பொறுத்த மட்டில் ,இது போன்ற மோதல் தீங்கு விளைவிக்காததாகும்.ஒரே மாதிரியான சமநிலை கொண்ட இரு வளிமங்களை ஒன்று சேர்க்கும் போது ,தனித்திருக்கும் போது என்ன நிலையில் இருந்ததோ,அதே நிலையையே சேர்ந்திருக்கும் போது நீடிக்கும்.இந்த இயற்பியல் மோதும் இரு அண்டங்களுக்கும் பொருந்தும்.

No comments:

Post a Comment