Sunday, March 24, 2013

Philosophy


தத்துவம்

இறைவன் ஒரு மௌன குரு .ஒருநாளும் யாருடனும் வாய்திறந்து பேசமாட்டார்.எல்லோருக்கும் தன் படைப்புக்களின் மூலம் குறிப்புணர்த்துவார்.அதைப் புரிந்து கொள்வதையும் புரிந்து கொள்ளாததையும் அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட்டார் .புரிந்து கொள்ளுமாறு கட்டாயப் படுத்துவதில்லை .கட்டாயப்படுத்தும் போது செயல்பாடுகளில் சுயவிருப்பம் இருப்பதில்லை என்பதால் எல்லோரிடமும் இப்போக்கை கடைப்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் .

நாம் வாழும் பூமி சூரிய மண்டலத்தில் ஒரு பகுதி .சூரியமண்டலத்தின் நிலையான இயக்கம் அணுவின் இயக்கத்தை ஒத்திருக்கின்றது . அருகிலுள்ள அணுவைப் பார்த்து சூரிய மண்டலத்தின் கட்டமைப்பு ,இயக்கம் ,நிலைப்புத் தன்மை பற்றி அறிந்து கொள்ள வைக்கின்றார் நம் வாழ்க்கையின் அர்த்தத்தையும் அதுபோல குறிப்புணர்த்திக் காட்டியிருக்கின்றார் .பிறர் வாழ்வதின் மூலம் தானும்,தான் வாழ்வதின் மூலம் பிறரும் வாழ்வதுதான் வாழ்க்கை. இக் கருத்தை ஒவ்வொருவருக்கும் அவரவர் உடல் மூலம் குறிப்புணர்த்துகின்றார் .உடலில் பல உறுப்புகள் புறத் தூண்டுதல் இன்றித் தானாக இயங்கிக் கொண்டிருக்கின்றன .என்றாலும் தன் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலைப் பெற பிற உறுப்புக்களை நலமாக வைத்திருக்க துணைபுரிகின்றன. உயிர் வாழத் தேவையான உணவு கிடைக்கும் இடமறிய கண்,காது போன்ற உணவறிவான்கள் உதவ,கால்கள் அவ்விடம் நோக்கி நகர,முதுகு குனிந்து கைகள் அதை எடுத்து வாயில் திணிக்க ,பற்கள் அரைக்க நாக்கு உதவ இப்படி பல உறுப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்களுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுகின்றன .நாம் சமுதாயத்தில் வாழ்வதும் இதைப்போலத்தான் .மனிதர்கள் சமுதாயத்தின் உறுப்புக்கள் . தனிமனிதர்களால் ஆனதுதான் சமுதாயம் என்றாலும் சமுதாயமின்றி தனி மனிதனால் வாழவே முடியாது என்பதைத்தான் இறைவன் இந்த உடல் மூலம் எடுத்துக் காட்டுகின்றார் போலும்.  

No comments:

Post a Comment