Friday, March 15, 2013

Vinveliyil Ulaa


விண்வெளியில் உலா

சென்டாரஸ்

பால்வழி மண்டலத்தின் தென்புறத்தில் உள்ள மிகப் பெரிய வட்டார விண்மீன் கூட்டமாகும் . இதன் மேற்புறம் மனித உருவமும் கீழ்ப்புறம் குதிரை உருவமும் கொண்டதாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது .கிரேக்க புராணத்தில் இவ்வுருவம் 'சிரோன் ' என்றழைக்கப்படுகின்றது.கடவுளின் குழந்தைகளுக்கு இது குரு என்று கருதப்பட்டது .

இவ்வட்டாரத்தில் மிகவும் பிரகாசமான விண்மீன் ரீகில் சென்டாரஸ் என்ற ஆல்பா சென்டாரி ஆகும் .இது விண்ணில் தெரியும் பிரகாசமான விண்மீன்களுள் மூன்றாவது பிரகாசமிக்க விண்மீனாகும்.இதைவிட பிரகாசமிக்கதாய்த் தெரிவான சீரியஸ்சும்,கநோபஸ்சும் ஆகும் .ஆல்பா செண்டாரியின் தோற்ற ஒளிப் பொலி வெண் - 0.27 உள்ளது .ஆல்பா செண்டாரி ஓர் இரட்டை விண்மீன் .இது இரட்டை விண்மீன் என்பதை 1689 ல் பேராயர் ரிச்சர்ட் என்பார் ,இந்தியாவில் பாண்டிச்சேரியில் வால்மீன்களை ஆராய்ந்த சமயத்தில் கண்டறிந்தார். இதில் ஒன்று மஞ்சள் நிறமும் மற்றொன்று ஆரஞ்சு நிறமும் கொண்டுள்ளன .இவற்றின் ஒளிப் பொலிவெண் முறையே 0.0 மற்றும் 1,4 ஆகும் .இவை அவற்றின் பொது மையத்தை 80 ஆண்டுகளுக் கொருமுறை சுற்றி வருகின்றன ..இதற்கு 2 டிகிரி விலகி மிகவும் மங்கலான விண்மீன் உள்ளது .ஒளிப் பொலி வெண் 11 கொண்ட சிவப்பு நிற குறு விண்மீனான இதை பிராக்சிமா சென்டாரி என்பர் .இது 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது .பிரகாசமான ஆல்பா சென்டாரியை விட 0.2 ஒளி ஆண்டுகள் தொலைவு நமக்கு அருகில் உள்ளது .சூரியனுக்கு அடுத்து குறைந்த தொலைவில் இருக்கும் விண்மீன் இந்த பிராக்சிமா சென்டாரியே ஆகும் .

ஆல்பா செண்டாரி க்குக் கோள்கள் இருக்கக் கூடுமா ? ஆராய்ச்சி முடிவுகள் உறுதியாகத் தெரிவிக்காவிட்டாலும் இதில் கோள்கள் இருக்க வாய்ப்பில்லை என அனுமானிக்கக் கூடுதலான வாய்ப்பிருக்கின்றது .முதலவாது தனி விண்மீன்களில் கோள்கள் இருக்க வாய்ப்பு அதிகம் .ஆல்பா சென்டாரி ஓர் இரட்டை விண்மீன் என்பதால் கோள்கள் அமைய வாய்ப்பில்லை .இரட்டை விண்மீனுக்கு கோள் இருக்குமானால் அதன் சுற்றுப் பாதை வட்டமாகவோ அல்லது நீள் வட்டமாகவோ அமையாது சிக்கலான பாதையாக இருக்கும் .சுற்றுப் பாதையின் ஆரம் நெடுந்தொலைவு மாற்றத்திற்கு உட்படும் .இதனால் வெப்பநிலை நீண்ட நெடுக்கைக்கு உட்பட்ட மாற்றத்திற்கு உள்ளாகும் .அதாவது கோடை தாங்க முடியாத வெப்பமாகவும் ,குளிர் தாங்க முடியாத குளிராகவும் இருக்கும் .ஆல்பா சென்டாரி மற்றொரு வகையிலும் முரண்பட்டிருக்கின்றது .இது இது அதிக அளவில் புற ஊதா க் கதிர்களை உமிழ்கின்றது .இதை ஊதா கிள ரொளி (Violet Flare ) என்பர் .இது சூரியனுக்கும் உண்டு .சூரியக் கரும்புள்ளிகள் பெருமத்தை எட்டும் போதெல்லாம் சூரியன் திடீரென்று பிரகாசித்து ரேடியோ மற்றும் எக்ஸ் கதிர்களை உமிழ்ந்து மின்னூட்டத் துகள்களை ஒளியின் திசை வேகத்திற்கு முடுக்கி விடுகின்றன .ஆனால் நல்ல வேளை இது அரிதாக 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியைத் தாக்குகின்றது .விண்வெளி வீரர்களுக்கும் ,விண்கலங்களுக்கும் இது ஆபத்தை உண்டுபண்ணக் கூடியது .மேலும் இதனால் ஏற்படும் பாதிப்பு நீண்ட கால உடல்நலத்திற்கு உகந்ததில்லை .ஆல்பா சென்டாரி இது போன்ற உமிழ்வை அடிக்கடி ஏற்படுத்துகின்றது .1925 முதல் 2000 வரை 150 முறை தீவிரமாக ஆற்றல் மிக்க கதிர்வீச்சை உமிழ்ந்திருக்கின்றது .

 

No comments:

Post a Comment