Sunday, March 3, 2013

Creative thoughts


நேரத்தை வீணாக்காமல் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடித்து வந்தால் ஒவ்வொரு நாளும் உற்சாகமாக இருக்கும்.புதிய எண்ணங்களின் வரவால் முன்னேற்றத்தை வெகு இயல்பாக முடுக்கிவிட முடியும் .

சுய முன்னேற்றத்தில் பின்தங்கி இருக்கின்றோம் என்றால் அதற்குக் காரணம் நாம் பயனுள்ளவாறு நேரத்தைச் செலவிடாமல் சுணங்கிப் போனதுதான் .

இறந்த கால நிகழ்வுகளை மறக்காமல் பாடம் கற்றுக் கொண்டு ,எதிர் காலத் தேவைகளை முன் திட்டமிட்டுக் கொண்டு ,நிகழ்காலத்தில் ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்து வாருங்கள் .முக்காலமும் அவர்களுக்குச் சிறப்பானதாக அமையும் .

எழுதி முடிக்கப்பட்ட நம்முடைய கடந்த கால வரலாற்றை நம்மால் ஒரு நாளும் திருத்தி எழுதமுடியாது .ஆனால் எழுதப்படவிருக்கும் நம்முடைய வரலாற்றை நாம் நினைத்தால் எந்தத் திருத்தத்தையும் எழுதப்படுமாறு செய்யமுடியும்.

தேவையில்லாத வேலைகளைச் செய்து கொண்டு சிலர் நேரமே இல்லை என்று அலுத்துக் கொள்வார்கள் .வேலைகள் இருந்தும் ஈடுபாடின்றி வேலை செய்யாமல் வேறு சிலர் சும்மாவே இருப்பார்கள் .ஆர்வமிருந்தால் அடுத்தடுத்து செய்வதற்கு வேலையுமிருக்கும்,செய்வதற்குத் தேவையான நேரமும் கிடைக்கும்.

நீ ஒரு தொழிற்சாலை என்றால் அங்கே தொழிலாளியும் நீதான், முதலாளியும் நீதான் .உன் செயல்களைத் தீர்மானிக்கும் எஜமானரும், அவற்றைச் செய்யப்போகும் வேலைக்காரனும் நீதான் என்பதை மறந்து விடாதே .

உன் செயல்களைத் தீர்மானிக்கும் எஜமானர் நீயாக மட்டுமே எப்போதும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துவிட்டால் பின்னாளில் கவலைப்படவேண்டிய நிலை ஏற்படாது.

செய்வதற்கு வேலைகள் ஏதுமிருந்தால் தள்ளிப் போட வேண்டியது மற்றவற்றைத்தானே ஒழிய வேலையை அல்ல .

பயமும் ,நம்பிக்கையும் எல்லோருடைய மனதிலும் இடம்பெற்றிருக்கின்றன .நம்பிக்கையை அழித்து விட்டுத் தன் ராஜ்ஜியத்தை விரிக்கும் விருப்பத்துடன் இடத்தை பயம் ஆக்கிரமித்துக் கொள்ளும்.பயத்திற்குப் பயந்து தன் இடத்தை விட்டுக் கொடுத்து விட்டு கொஞ்ச நேரம் கொஞ்சிப் பார்க்கும் .அக மற்றும் புற உதவிகள் இல்லாவிட்டால் இறுதியில் நம்பிக்கை பயத்திற்கு அடிமையாகிவிடும் .பயத்தை வெல்ல நம்பிக்கை வலிமையானதாக இருக்கவேண்டும் .

ஒரு துளி நம்பிக்கை உலகையே வெல்லும் .நெஞ்சில் எங்கெல்லாம் முடியுமோ எங்கெல்லாம் நம்பிக்கையை விதைத்து வை .பயம் மிரண்ட பேய் போல பயந்து ஓடிவிடும் .

No comments:

Post a Comment