Friday, March 1, 2013

Philosophy


தத்துவம்

ஒன்றும் இல்லாதிருப்பதே ஒப்பற்ற இன்பம் என்ற உண்மையை மனம் பொதுவாக ஒப்புக் கொள்வதில்லை. எல்லாம் இருந்தாலும் இது தேடும் இன்பத்திற்குப் போதும் என்று இன்னும் பொருள் தேடுவதை விட்டுவிடுவதும் இல்லை .மனிதனைத் தவிர்த்த எல்லா உயிரினங்களும் ஒன்றும் இல்லாமலேயே ஒவ்வொருநாளும் இனிமையாக வாழ்கின்றன.இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் இருந்த இன்பம் எதோ ஒன்று கைக்கு வந்த பிறகு காணாமற் போய்விடுகின்றது என்பதை அறிந்தும் அறியாதவனாய் மனிதன் இன்னும் வாழ்கின்றான்.

ஒன்றும் இல்லாமல் பிறந்தோம் ஒன்றும் இல்லாமலேயே இந்த உலகை விட்டுப் போகப் போகின்றோம்.கையில் தங்காத பொருளைச் சேர்க்க ஏன் தான் ஆசைப்படுகின்றோம் ? உலகில் வாழ்வதற்கு வாய்ப்புகள் குறைவாகவும் ,மனிதர்கள் எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கும் போதுதான் இதுபோன்ற மன நிலை ஏற்படும்.வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை இந்த உலகில் என்பார்கள் .பொருள் சேர்ப்பது தவறில்லை. ஆனால் அதற்குக் காரணம் இல்லாமல் சேர்ப்பதுதான் தவறு . எல்லோரும் பொருள் சேர்க்கின்றார்கள் என்பதற்காகவா, இல்லை எதிர்காலத்திற்கு இந்தக் கூடுதல் பொருள் பாதுகாப்பு என்பதற்காகவா நாம் பொருள் சேர்க்க முயல்கின்றோம்.

ஒருநாள் பொருளைச் சேர்த்து வை,ஒருநாள் சேர்த்த பொருளை மற்றவர்களுக்காகச் செலவழித்துப் பார்.எதில் உனக்கு இன்பம் கிடைத்தது என்று நீயே சோதித்து தெரிந்து கொள்.நான் உனக்குச் சொல்வதைவிட நீயே உனக்குச் சொல்லிக் கொள்வதைத்தான் உன் மனம் ஏற்றுக்கொள்ளும்.

பகவத் கீதையின் பொன் வரிகள் காலங் காலமாய் இதைத்தான் போதிக்கின்றன.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது

எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

உன்னுடையது எதை இழந்தாய் எதற்காக நீ அழுகின்றாய் ?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு

எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு

எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது

எதைக் கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது

எது இன்று உன்னுடையதோ அது நாளை மாற்றோருவருடையதாகின்றது

மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்

இந்த மாற்றம் உலக நியதியாகும் .

No comments:

Post a Comment