Thursday, March 7, 2013

Vethith Thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் -ஜெர்மானியம் -கண்டுபிடிப்பு

1871 ல் தனிம அட்டவனையை ஏற்படுத்தும் போது மென்டலீவ் மூன்று தனிமங்களை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே அறிவித்தார் .அவை ஏக போரான் ,ஏக அலுமினியம் ,ஏக சிலிகான் ஆகும் .இவை பின்னர் முறையே ஸ்காண்டியம் ,காலியம் ,ஜெர்மானியமாக அறியப்பட்டன .ஜெர்மனி நாட்டில் கிடைத்த அர்கைரொடைட் (Argyrodite ) என்ற கனிமத்தில் மிகுதியாக வெள்ளி சேர்ந்திருக்கிறது .அதன் சேர்மானத்தை ஆராய்ந்த போது,ஜெர்மன் நாட்டு விஞ்ஞானியான விங்லர் (C.Winkler) என்பார் 1886 ல் அதில் 6.96 % புதிய தனிமம் சேர்ந்திருப்பதைக் கண்டறிந்தார் .அவர் தன் நாட்டைக் கௌரவப் படுத்தும் முகமாக இதற்கு ஜெர்மானியம் எனப் பெயரிட்டார் .

ஜெர்மானியம் துத்தநாகக் கனிமத்திலிருந்தும் ,நிலக்கரியிலிருந்தும் கிடைக்கின்றது .பிற உலோகங்களிலிருந்து ஜெர்மானியத்தை எளிதில் ஆவியாகக் கூடிய அதன் டெட்ரா குளோரைடிலிருந்து ,பகுதி வடித்தல் (fractional distillation )மூலம் பிரித்தெடுக்க முடியும்.

டெட்ரா குளோரைடை நீரால் பகுத்து ஜெர்மானியம் ஆக்சைடைப் பெறலாம் .ஹைட்ரஜன் மூலம் ஆக்சிஜனை அகற்றி ஜெர்மானியம் உலோகத்தைப் பெறலாம் .மண்டல வாரியான தூய்மையூட்டல் (Zone refining ) முறை மூலம் மிகவும் தூய்மையான ஜெர்மானியத்தைப் பெறுகின்றார்கள் .

பண்புகள்

இந்த உலோகம் மெல்லிய சாம்பல் நிறம் கொண்ட தோற்றப் பொலிவைப் பெற்றுள்ளது . தூய படிக நிலையில் இது உடைந்து நொறுங்கக் கூடியதாக இருக்கின்றது .அறை வெப்ப நிலையில் காற்று வெளியில் தன் பொலிவை இழப்பதில்லை .

Ge என்ற வேதிக் குறியீடைக் கொண்டுள்ள ஜெர்மானியத்தின் அணு எண் 32அணு நிறை 72.59, அடர்த்தி 5350 கிகி /கமீ .கடத்தும் நிலைக்கும் கடத்தா நிலைக்கும் உள்ள வேறுபாடு 0.72 eV (எலெக்ட்ரான் வோல்ட் ) ஆக உள்ளது .சிலிகானுக்கு இது 1.1 eV .இதன் உருகு நிலையும் ,கொதி நிலையும் முறையே 1232 K ,3123 K ஆகும் .

பயன்கள்

ஜெர்மானியத்தின் முக்கியப் பயன் சிலிகானுக்கு மாற்றுப் பொருளாக குறைக் கடத்தி சாதனைகளில் பயன்படுகின்றது .ஜெர்மானியம் சிலிகானுக்கு ஒரு மாற்றுப் பொருளாகத் தோன்றினாலும் சிலிகானின் சிறப்புகள் ஜெர்மானியத்திற்கு இல்லை.எனவே ஒரு சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டும் ஜெர்மானியத்தாலான குறைக்கடத்திகள் பயன் படுத்தப்படுகின்றன .ஆர்செனிக் ,காலியம் போன்ற வேற்றுப் பொருட்களைப் புகுத்தி நேர் மற்றும் எதிர் வகைக் குறைக் கடத்திகளை உண்டாக்கி மின்னணுவியல் சாதனங்களில் பயன் படுத்துகின்றார்கள்

ஜெர்மானியம் கலப்பு உலோகம் தயாரிக்கப் பயன்படுகின்றது .ஒளிரும் விளக்குகளில் ஒளிர் பொருளாகவும் ,வேதியியல் வினைகளில் வினையூக்கியாகவும் ஜெர்மானியம் பயன்படுகின்றது .ஜெர்மானியம் ஆக்சைடு அகச் சிவப்புக் கதிர்களை ஊடுருவிச் செல்ல அனுமதிக்கின்றது .அதனால் அகச் சிவப்பு ஆய் கருவிகளிலும் ,அகச் சிவப்பு நிறமாலை மானிகளிலும் ,ஒரு சில ஒளியியல் சாதனங்களிலும் பயன் தருகின்றது .இதன் ஒளி விலகல் எண் மிகவும் அதிகம் என்பதாலும் ,ஒளிச் சிதறலை வலிமையாகச் செய்கிறது என்பதாலும் ,இது கண்ணாடியில் சேர்க்கப்படும் ஒரு சிறப்புப் பொருளாகக் கொள்ளப்படுகின்றது .ஒளிப்படப் பதிவுப் பெட்டிகளுக்கான வில்லைகளில் இது பெரும்பங்கு பெற்றுள்ளது .

பொதுவாக ஜெர்மானியம் பாலூட்டிகளுக்கு நஞ்சாக இருப்பதில்லை .ஆனால் ஒரு சில நுண்ணுயிரிகளைப் பாதிக்கின்றது .இதனால் இது நுண்ணுயிரிகளை அழிக்கும் மருத்துவ முறையில் கையாளப் படுகின்றது

No comments:

Post a Comment