Wednesday, January 5, 2011

arika iyarppiyal

மேகம் கோள வடிவில் இல்லதிருப்பதேன் ?



சிறிய நீர்மத் துளியாகட்டும், சோப்புக் குமிழாகட்டும்
எல்லாம் பரப்பு இழுவிசை காரணமாக கோள வடிவில்
அமைகின்றன. பிரபஞ்ச வெளியில் எங்கும் தற்சுழலும்
விண்ணுருப்புக்கள் யாவும் கோள வடிவம் கொண்டுள்ளன .
முப்பரிமாண உருவங்களில் கொடுக்கப்பட்ட
பருமனுக்கு குறைந்த பரப்பைக் கொண்டுள்ள வடிவம்
கோளமாகும். கொடுக்கப்பட்ட சூழ்நிலையில்
பரப்பாற்றலை சிறுமமாக வைத்துக் கொள்ளவே எந்த
அமைப்பும் விரும்பும் என்பதால் இது அப்படி நிகழ்கின்றது
எனலாம். ஆனால் நீர் நீராவியாகி,மேகமாகத் திரளும்
போது கோளவடிவில் அமைவதில்லையே .ஏன் ?

                                                       ***************
 
கொடுக்கப்பட்ட நிறையுடைய பாய்மத்தின் மொத்த ஆற்றல்
என்பது உள்ளாற்றல்,இயக்கவாற்றல்,நிலையாற்றல் மற்றும்
பரப்பாற்றல் இவற்றின் கூடுதலாகும். இவற்றுள் பரப்பாற்றல்
மட்டும் வடிவத்தின் பரப்பிற்கு நேர் விகிதத்தில் இருக்கிறது .
இது பரப்பு மற்றும் பாய்மத்தின் பரப்பு இழுவிசை இவற்றின்
பெருக்கல் பலனாகும் .கொடுக்கப்பட்ட பருமனுடைய பாய்மம்
கோள வடிவில் இருக்கும் போது இது சிறுமமாக
இருக்கிறது .ஒரு பாய்மம் ,வெற்றிடம் அல்லது கலவுறா
பாய்மத்தொடு தொடர்பு பெறும்போது ,பரப்பு இழுவிசை அதன்
புறப்பரப்பில் வெளிப்பட்டுத் தோன்றுகிறது .

மேகத்தில் நிறை வழியில் 99 .5 % வளிமமும் ௦.5 % நீர்மம்/பனிக்
கட்டியும் உள்ளன. காணும் படியான உருவத்தைப்
பெற்றிருந்தாலும் இதன் சராசரிப் பண்பு சற்றேறக்குறைய
வறண்ட காற்றை ஒத்திருக்கிறது.அதனால் அதன் பரப்பிடைத்
தளத்தில் பரப்பு இழுவிசை வெளிப்பட்டுத்
தோன்றுவதில்லை. அதனால் மேகத்தின் வடிவம்
உண்மையில் கீழிருந்து ஊட்டப்படும் நீராவி மற்றும் குளிர்
காற்று ,காற்று வீசும் வேகம் ,அப்பகுதியில்
உள்ள சுற்றுப்புறச் சூழலோடு மேற்கொள்ளும் இடைச் செயல் போன்றவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. இதைப் பொறுத்து ,அரைக்கோளம் ,நீள் உருளை (உயரமாக
வளர்ச்சி பெறும்போது) பரந்த பரப்பில் ஒரே சீராக விரவித்
தோன்றுதல் எனப்பலவிதமாக அமையும் .வீசும் காற்றால்
இழுத்துச் செல்லப்படுதல் என்பது அடர்த்தியைப் பொறுத்தது.
அதனால் ஒரு மேகத்தின் அடர்த்தியால் வேறுபட்ட
வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு வேகத்தில் இழுத்துச்
செல்லப்படுவதால்மேகம் விரிவடைவதைப் போலக்
காட்சியளிக்கும்

1 comment:

  1. ஐயா, வணக்கம். பரப்பு இழுவிசைப் பற்றி சில ஐயங்கள்.
    free surfaceல் உள்ள நீர் மூலக்கூறுக்கள் அதிகப் படியான downward force of attractionக்கு ஆளாகுகிறது. அதனால் அம்மூலக்கூறுக்கள் stretched elastic membrane போல் செயல்படுகின்றன. இதுவே பரப்பு இழுவிசை எனப்படுகிறது. இதனால் நீர் மூலக்கூறுக்கள் தங்களுடையப் பரப்பளவைச் சுருக்கிக்கொள்கின்றன. மேலும் இதனால் குறைந்த நிலை ஆற்றலைப் பெறுகின்றன. குறைந்த நிலை ஆற்றலுக்கும் குறைந்த பரப்பளவுக்கும் என்ன சம்பந்தம்?
    free surfaceல் உள்ள நீர் மூலக்கூறுக்களை கிழே கொண்டு வர நாம் downward force of attractionக்கு
    எதிராக வேலை செய்ய வேண்டும். இவ்வேலையே நிலை ஆற்றலாக கருதப்படுகிறது. இங்கு downward force of attractionக்கு எதிராக நாம் நிறைய வேலை செய்யவேண்டும், அப்படியானால் மிகுதியான நிலை ஆற்றல் இருக்கும். ஆனால் பரப்பளவு சுருங்கும் போது எப்படி குறைவான நிலை ஆற்றல் இருக்கும்
    லோகேஸ் அரவிந்தன்

    ReplyDelete