Friday, January 21, 2011

eluthaatha kaditham

அன்பார்ந்த இந்திய மக்களே,
சாதாரண மக்களுக்கு அவர்களைப் போலவே ஒரு சாதாரண
மனிதனாக இருந்துகொண்டு மற்றவர்களுக்காக
அவர்கள் சொல்லும் விஷயங்கள் தான் சாதாரண மக்களுக்கு
உண்மையிலேயே பயனுள்ளவைகளாக இருக்கின்றன.
அரசியல் வாதிகள் சொல்லும் வார்த்தைகளில் உண்மை
என்பது மருந்துக்குக்கூட இருப்பதில்லை,இராஜ தந்திரம்
என்று திடீரென்று திசை மாறும்; அது நானில்லை என்று
சாதிப்பார்கள்;தன்னுடைய அடியாள் ஒருவரை
சுட்டிக்காட்டி அதற்குக் காரணம் என்று கூறுவார்கள்; இதயத்
தாக்கம் என்று மருத்துவ மனையில் போய் ஓய்வெடுத்துக்
கொள்வார்கள். அரசியல்வாதிக்குக் கொடுக்கும்
முக்கியத்துவத்தில் ஒரு சிறிதளவேணும் சாதாரண மனிதன் சாதாரணமாகச் சொல்லும் விசயங்களுக்கும் கொடுங்கள்

நம் இந்திய அரசு எவ்வளவு பலவீனமானது என்பதைக்
கவனியுங்கள். விதிகளை மீறி ஆதர்ஷ் குடியிருப்பு
கட்டப்பட்டுள்ளதால் அதை இடித்துத் தள்ள சுற்றுச் சூழல்
அமைச்சகம் 17 -1 -2011 அன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த முடிவு எப்பொழுது வருகிறது ?

எல்லாம் முடிந்து முதல் ராத்திரியில் கட்டில் வரை வந்த
பெண்ணுக்கு கணவனைப் பிடிக்கவில்லையாம்
என்ற கதைதான் போங்கள் . ஊடகங்கள் மூலம்
விஷயங்கள் வெளியே வராவிட்டால் அதை அரசு
அப்படியே என்றுக்கொண்டுவிடுமா ?

கடல் வளத்தை பாதுகாக்க அது இடையூறாக
இருக்கிறது என்பதை கட்டடம் பல ஆயிரங் கோடி
செலவில் கட்டி முடித்து, முறை கேடாக
பங்கீட்டுத்தனமும் செய்து,குடியேறியபின் அது எதோ
ஒரு பக்கத்தில் பொத்துக்கொள்ள விஷயம் வெளியே
கசிந்து விபரீதமாகி விடுகிறது. மக்களுக்க் கிடைக்கும்
விஷயங்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கின்றன.
இதில் வேடிக்கை என்னவென்றால் கடைசி வரை எது
உண்மை எது பொய் என்பதை உச்ச நீதிமன்றத்தாலும்
உணரமுடியாது. தான் தப்பிப் பிழைக்க பிரச்னையை
மேலும் மேலும் அரசியல்வாதிகளே சிக்கலாகி குழப்பி
விடுவதால் இது வழக்கமாகி வருகிறது. அரசியல்வாதிகள்
இப்படிச் செய்வதால்,பெருகி வரும் சமூக விரோதிகளும்
தப்பிப் பிழைக்க முன்மாதியான வழி கிடைக்கிறது.

ஆதர்ஷ் குடியிருப்பு கட்டட ஊழல் விவரங்களைத்
துருவித் துருவி ஆராய்ந்து வெளிப்படுத்தி
விபரீதமானபின், அரசு இந்த முடிவைத்
தெரிவித்துள்ளது. இந்த முடிவும் முடிவான முடிவா
என்பது தெரியவில்லை.ஏனெனில் தவறு செய்பவனைத்
தவறு செய்ய விட்டுவிட்டு ,பின்னர் அது தவறு என்று
அவனைத் தண்டிப்பதில் மனு நீதி இருப்பதாகத்
தெரியவில்லை.

கட்டடத்திற்காக இடம் தேர்வு செய்தபோது, கட்டடம்
கட்ட ஒப்பந்தம் செய்தபோது, கட்டடம் கட்டி வளர்ந்த
போது இந்த அரசு இயந்திரம் என்ன செய்து கொண்டிருந்தது?

இந்தியத் தலைவர்கள், அரசியல்வாதிகள் எவரும்
இந்தியாவிற்காக இந்தியாவை அரசாளவில்லை
என்பதைத்தான் இது காட்டுகிறது. அரசாளத் தகுதி
இல்லாதவர்கள் அமர்ந்து விட்டால், விபத்து அவர்கள்
காலத்தில் மட்டுமல்லாது ,விடாது கறுப்புப் போல
விபரீதங்கள் மேலும் மேலும் வலுப்பெற்று,
முன்னைக்காட்டிலும் வலிமையாக நிகழும்,
தகுதியானவர்கள் இருக்கின்றார்கள் என்றாலும்,
அவர்களை மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்
இன்றையக் கால கட்டத்தில் இது நடை பெறுவதற்கான
வாய்ப்பு இல்லை.நல்லவர்கள் உண்மையில்
துஷ்டர்களைக் கண்டு விலகிவிலகிச் செல்கிறார்கள்.
நல்லவர் யாரவது வந்து விட்டால் அவர்களைப்
பின்னுக்குத் தள்ளி விடுகிறார்கள். அவர்களுடைய
நல்ல இமேஜ் மட்டும் தான் அவர்களுக்குத் தேவை.
அப்படியே அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டாலும்
விபரீதங்கள் எதுவும் குறையப்போவதில்லை.
புதியவர்கள் எப்பொழுதும் பழையவர்களின்
வழிகாட்டலில் செயல்படும் நிர்பந்தம் இந்தியாவில்
இருக்கிறது இந்நிலை இருக்கும் வரை
இதற்கு ஒரு நிரந்தரமான, நிலையான ,நேர்மையான
தீர்வு இல்லை.

நீண்ட காலம் பதவில் இருக்கிறார்கள் என்பதால்
அவர்கள் சிறந்த தலைவர்களை இல்லை.
அதிகம் படித்திருக்கிறார்கள் என்பதாலும் அவர்கள்
அரியணைக்குத் தகுதியானவர்கள் இல்லை. அடிக்கடி வெளிநாட்டிற்கும்,உள்நாட்டில் பல மாநிலங்களுக்கும்
பயணம் மேற்கொள்வதால் அவர்கள் புகழ் மிக்க
ஆளுநர்கள் இல்லை. செல்வந்தர்களாக இருந்தாலும்
அவர்கள் நல்லொழுக்கம் கொண்ட தலைவர்களாக
இல்லை.மக்கள் இவர்களை அளவுக்கு மீறி ஏகமாய்
பாராட்டுவதால் (அது மட்டும் தான் முடியும்) அவர்கள்
தங்களை கடவுளுக்கும் மேலாக நினைத்துக் கொள்கிறார்கள்.
இதை உணராத மக்கள் இன்னும் இன்னும் அதே புதை
குழியில் விழுந்து சிக்கிக் கொள்கிறார்கள்
கானல் நீரைத்தேடி அலையும் கழுதைகள் போல
அலைகிறார்கள். அரசியல் வாதிகள் திருந்தமாட்டார்கள்,
திருந்தவே மாட்டார்கள். இதை நான் உறுதியாகச்
சொல்வேன். இனி மக்கள் தாம் திருந்த வேண்டும்.

விலை உயரும் ஒரு பொருளின் பயன்பாட்டை
மட்டுப்படுத்தும் உறுதி மனதில் இருந்தால்
உயந்த விலை தானாகக் கீழே விழுந்து விடாதா?

அன்புடன்

காவேரி

No comments:

Post a Comment