Valarum Ariviyal Tamil
கலைச் சொற்களின் தோற்றத் தட்டுப்பாட்டைச் சொல்வளமிக்க
சங்க இலக்கியங்களிலுள்ள சொற்களைப் புத்தாக்கம் செய்து
நீக்கலாம் .கலைச் சொற்களைப் பரவலாக்கம் செய்யாவிட்டால் ,
தோற்றத் தட்டுப்பாட்டை முற்றுமாக அகற்றி விட முடியாது.
எனவே இன்றைய காலகட்டத்தில் பழந்தமிழ்
சொற்களைப் புத்தாக்கம் செய்து பரவலாக்கம் செய்ய
வேண்டியது மொழி ஆர்வலர்களின் இன்றியமையாக்
கடமையாகும்.
'மம்' என்ற விகுதி
'மம்' என்ற விகுதியுடன் பல சொற்கள் இலக்கியங்களில்
காணப்படுகின்றன.பேச்சு வழக்கிலும் அத்தகைய சொற்களில்
சில பயன்பாட்டில் உள்ளன. வன்மம் ,சாமம், காமம், நாமம் ,
உரிமம் போன்ற தமிழ்ச் சொற்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் .காவல்,பாதுகாப்பு என்ற பொருளுடைய
ஏமம் என்ற சொல்லும் இத்தகையதே .பரிபாடலில்
பலவிடங்களில் இச்சொல் எடுத்தாளப்பட்டுள்ளது.
பரி .3 வரி 26, பரி 4 ,வரி 53, பரி 7 வரி 40-ல் ஏமம் என்ற சொல் காணப்படுகிறது. .பொருளதிகாரத்தில் மூன்று குறள்களில்
(738 ,766 ,815 ) இச்சொல் கையாளப்பட்டுள்ளது.
இது பல கிளைச் சொற்களையும் தந்துள்ளது..அவற்றையும்
இலக்கியங்களில் ஆங்காங்கே காணமுடிகிறது.
ஏமாப்பு (குறள் 112 ,126 398 ,458 ,459 ,868), ஏமரா (குறள் 448 ),
போன்ற கிளைச் சொற்களையும் ஏமப் புனை (குறள் 1164 )
எமஞ்சாரா(குறள் 815 )போன்ற கூட்டுச் சொற்களையும் இங்கு குறிப்பிடலாம்.
பரி 10 வரி 39 ல் ஏம் உறு என்றொரு சொல் காணப்படுகிறது.
இவையாவும் அறிவியல் கலைச் சொற்களின்
விரிவாக்கத்திற்குஅனுகூலமயிருக்கின்றன. .
வேதியியல் மற்றும் இயற்பியல் துறையில் ஒரு குறிப்பிட்ட
பொதுப் பண்புடைய பொருட்களை ஒரு குறிப்பிட்ட சொல்லால் குறிப்பிடுவது மரபு. திண் என்றால் வலிமை ,
வலிய தோளை திண்மையான தோள் என்று
குறிப்பிடுவதிலிருந்து அறியலாம் . அதனால் எளிதில்
உருக்குலையாத, வலிமைமிக்க உறுதியான பொருளைத்
திண்மம் (Solid ) என்றனர். இது பொதுத் தன்மையுடைய
பொருட்களைக் குறிப்பிடும் இது பொது சொல்லாகும்
திண்மம் என்பது பொருளின் ஒரு நிலை . பொருளின்
பிற நிலைகளுக்கான கலைச் சொற்களையும் இதை
ஒட்டியே உருவாக்கலாம்.
நீர்த்து உருகிய நிலையில் உள்ள பொருளை நீர்மம் (liquid) என்றும் ,ஆவியாகி ,உறுதியும் உருவமும் இல்லாது
காற்றோடு கலந்துவிட்ட பொருளை வளிமம் (gas ) என்றும்
குறிப்பிடலாம். இதன் அடிப்படையில் ஏமம் என்ற சொல்லை
'Insulation' என்ற சொல்லுக்குரிய கலைச் சொல்லாக்கிக்
கொள்ளலாம் . மின்சாரம் ,வெப்பம் போன்றவை ஒரு
ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு செல்லாமல்
தடுக்க காப்பீடு செய்யப்படும் .இதையே insulation என்பர்.
இது சில கூட்டுச் சொற்களுக்கும் இணக்கமாக உள்ளது.
electrical insulation - மின்னேமம்
thermal insulation - வெப்பேமம்
magnetic shield - காந்த ஏமம்
radiation shield - கதிரேமம்
மம் விகுதியைப் பெயரடையிலோ ,வினையடையிலோ
சேர்த்துப் பெயர்ச் சொற்களை உருவாக்கும் கொள்கை
வழிமுறையைப் பின்பற்றி பல புதிய கலைச் சொற்களை
எளிதாக உருவாக்கலாம் .அப்படி உருவாக்கப்பட்டு பயனில்
உள்ள சொற்களோடு சில புதிய சொற்களும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன .
Carbon-கரிமம் (கார்பன் )
Colloid- கூழ்மம் (இடைமிதவலான்துகள்கள் )
Compound- சேமம் (கூட்டுப் பொருள்)
condensed matter - உறைமம் (உறை பொருள் )
element-தனிமம்
emulsion-பால்மம்
enzyme நோதிமம்
exciton -கிளர்மம்
fluid-பாய்மம்
fuel- எரிமம்(எரிபொருள்)
gel களிமம்
isobar-சம அணு நிறைமம்
isotope-சம அணு எண்மம்
ore-கனிமம்
plasma -மின்மம்
plastic-நெகிழ்மம்
phosphor-ஒளிர்மம்
polymer-பல்மம்
வணக்கம் மெய்யப்பன்
ReplyDeleteமிகவும் தேவையான விடயம்
நன்றி
பயனுள்ள தகவல்கள். இவற்றுள் பலவற்றைத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே பயன்படுத்துகிறோம். உங்களுக்கும் நேரம் இருக்குமெனில் அங்கு பங்கு கொள்ளலாமே.
ReplyDelete