Thursday, August 18, 2011

creative thoughts

vanna vanna ennangal

ஓங்கார நாதம்

         
கருநிறக் காகம் கரைவதைக் கேளு

காட்டுக் குயில் கூவுவதைக் கேளு

கொஞ்சும் குருவியின் குரலைக் கேளு

பச்சைக் கிளியின் மொழியைக் கேளு



சுறுசுறுப்பான தேனியின் ரீங்காரம் கேளு

தலியாட்டும் பூவின் அசைவைக் கேளு

சின்னச்சிறு சிள்வண்டின் தொடரிசை கேளு

நாடி வரும் வௌவாளின் கேளாஒலி கேளு



தீண்டும் தென்றலின் ஏழிசை கேளு

துளிரும் இலையின் மெல்லிசை கேளு

ஓயாக் கடலின் ஆரவாரம் கேளு

கரையில் முத்தமிடும் சத்தம் கேளு



கொட்டும் மழையின் இன்னிசை கேளு

சொட்டும் துளியின் சுருதியைக் கேளு

ஓடும் நீரின் சலசலப்பைக் கேளு

மோதும் அருவியின் முரசொலி கேளு



கோயில் மணியின் அருளிசை கேளு

கூண்டுக் கடிகாரத்தின் ஒற்றையொலி கேளு

குழந்தை குளறும் மழலை கேளு

கூடி விளையாடும் கும்மி கேளு



படரும் நெருப்பின் வெம்மை யைக் கேளு

பாயும் ஒளியின் வேகத்தைக் கேளு

பிறந்த மண்ணின் மணத்தைக் கேளு

பிறவா வானத்தின் மௌனத்தைக் கேளு



உள்ளுக்குள்ளே ஒலிகள் ஒத்ததிரும்போது

இந்தச் சுரங்களும் புரியும் மொழியாகும்

தனியாய் ஒருவன் இருக்கும்போது

அமைதி கூட இனிய இசையாகும்

இயற்கையோடு உறவாடத் தெரிந்தால்

மௌனமும் உதவும் மொழியாகும்

எண்ணமும் இயற்கை போலாகும்

சொல்லும் சொற்களெல்லாம் சுத்தமாகும்

செய்யும் செயலெல்லாம் சுகமாகும்

வாழும் வாழ்க்கை வளமாகும்

உனக்கு மட்டுமல்ல

எனக்கும்

எல்லோருக்கும்

No comments:

Post a Comment