Monday, August 13, 2012

Creative thoughts-micro aspects of developing inherent skill

micro aspects of developing inherent skill -3
பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் இப்பொழுது எப்படி இருக்கின்றீர்களோ அப்படியே இருப்பீர்கள் என்று நான் சொன்னால் அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? நிச்சியமாக நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்,ஏனெனில் அது உங்களை ஒரு திறமையற்றவராகப் பிறர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்வது போலாகிவிடும்.அப்படிக் குறிப்பிடுவது உங்கள் மனதை ஏன் புண்படுத்துவதாக இருக்கிறது? மாற்றம் என்பது வளர்ச்சி,முன்னேற்றத்தின் முயற்சி ,அதுவே மனதிற்கு மகிழ்ச்சி.இது இல்லாது போனால் இகழ்ச்சி. இதை நீங்கள் புரிந்து வைத்திருக்காவிட்டாலும் உங்கள் மனது அதை சரியாக அறிந்து கொண்டிருக்கிறது வாழ்க்கையோடு தொடர்புடைய ஓர் உண்மையைப் புலப்படுத்திக் காட்டுவதற்காக இப்படி விளையாட்டாகக் குறிப்பிட்டேன்.வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடமும் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுடைய மனம் அதை இயல்பாகவே விரும்புகிறது.ஆனால் மனதின் விருப்பமும், மனிதனின் செயலும் ஒன்றாக இருப்பதில்லை. மாற வேண்டும் என்ற திடமான ஒரு முடிவை சுய விருப்பத்தோடும்,முழுமையான புரிதலோடும் மேற்கொண்டாலே இது சாத்தியமாகும் என்பதை இது தெரிவிக்கிறது. இதில் நீங்கள் ஏற்படுத்தும் கால தாமதம் நீங்கள் விரும்பும் அந்த மாற்றத்தை அடைவதில் பன்மடங்காக வெளிப்படும். மாற்றத்தின் பலனை நுகர வேண்டுமெனில் மாற வேண்டும், மாறியே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தை முழு மனதுடன் மேற்கொள்ள வேண்டியது முக்கியமாகும். மாற்றம் என்பது வாழ்க்கை நிலையில் ஏற்படும் முன்னேற்றமாகும்.இது திறன் வளர்ச்சி,பொருளாதார வளர்ச்சி,உயர் பதவி பெறுதல்,போட்டிகளில் வெற்றி மட்டுமின்றி வெகு இயல்பாய் வாழும் கலையை அறிதலுமாகும்.வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை இடம்பெயரும் ஒரு பொருளின் நிலை மாற்றத்தோடு ஒப்பிட்டு நம் புரிதலை ஓரளவு மேம்படுத்திக் கொள்ள முடியும். ஒத்த இரு இரும்புக் குண்டுகள் -ஒன்று தரை மட்டத்தில் இருக்க மற்றொன்று கோபுரத்தின் உச்சியில் இருப்பதாகக் கொள்வோம்.
இவையிரண்டில் எது தன்னியக்கத்தால் நிலை மாற்றத்தைப் பெறும் என்று கேட்டால் ,உயரத்தில் இருக்கும் குண்டே என்று உடனடியாகச் சொல்லலாம். அதற்குக் காரணம் அக்குண்டு தன் நிலையாற்றலை வெகுவாக உயர்த்தி வைத்துக் கொண்டிருப்பதுதான். நிலையாற்றல் என்பது உள்ளே பொதிந்திருக்கும் திறன்.ஈர்ப்பு விசை பொருளின் நிறைக்கு ஏற்ப இருந்தாலும் ஈர்ப்பு முடுக்கம் எல்லாப் பொருள்களுக்கும் சமம். அதாவது சமமான நிலை மாற்றத்தையே பெறுகின்றன.ஒரே வகுப்பறையில் ஒரே ஆசிரியரிடம் கல்வி கற்ற மாணவர்கள் ஒரே அளவிலான மாற்றங்களைப் பெற்று முன்னேறுவதில்லை. சிலர் சிகரத்தைத் தொடுவார்கள், சிலர் அடி நிலையிலேயே பின் தங்கி விடுவார்கள்.நிலை மாற்றத்திற்கு ஒவ்வொருவரும் கொடுக்கும் எதிர்ப்பு வேறுபட்டிருப்பதுதான் இதற்குக் காரணம் என்பதை நிலை மாற்றத்திற்கு இரும்புக் குண்டு கொடுக்கும் நிலை மாற்றத் தடையால் (inertial resistance) அறியலாம்.இயற்கையில் ஒவ்வொரு பொருளும் தான் இருக்கும் நிலையிலேயே நீடித்திருக்க விரும்புகின்றன.அதனால் அவை நிலை மாற்றத்திற்கு ஒரு தடையை ஏற்படுத்திக் கொள்கின்றன. இது நிறைக்கு எதிர் விகிதத்தில் இருக்கிறது. அதாவது நிறை அதிகமானால் நிலை மாற்றத்திற்கான தடை குறைவு எனலாம். அதனால் தான் கனமான குண்டு முதலிலும் இலேசான குண்டு தாமதமாகவும் தரையில் விழுகின்றன. எதிர் விசை என்பது மனிதர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் மனதில் சேமித்து வைத்திருக்கும் எதிர்மறையான எண்ணங்களேயாகும். எதிர் மறை எண்ணம் குறைவாக,பலவீனமாக இருக்குமானால் நிலை மாற்றம் விரைவாக இருக்கும் என்பதையே இது தெரிவிக்கின்றது. கீழே விழுந்து கிடக்கும் பொருள் தானாக நிலை மாற்றம் பெறுவதில்லை,அதற்கு ஒரு புறத் தூண்டுதல் அவசியமாக இருக்கிறது.கீழே கிடக்கும் கல் எந்நாளும் அப்படியே இருக்கிறது. ஆனால் ஒரு விதை தன் முயற்சியால் நெடிய மரமாக வளர்கிறது. மாற்றங்கள் நிகழ வேண்டுமானால் ஒன்று நீங்கள் திறமைகளை வளர்த்து வைத்திருக்க வேண்டும்,தானாகக் கீழே விழும் குண்டைப் போல அல்லது சுயவிருப்பத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ள பிறரின் உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டு முனைப்புடன் செயல்படவேண்டும் கீழே கிடக்கும் விதையை போல.

1 comment:

  1. ஒரு நல்ல வாசிப்பு.நானும் இந்த தலைப்பெ பற்றி சிந்தித்து கொண்டுஇருந்தென்.நீங்கள் உதாரணத்துடன் மிகவும் அழகாக தமிழில் விலக்கி உள்ளீர்கள்.
    மிக்க நன்றி !!

    ReplyDelete