Friday, August 17, 2012

Short story

கடவுளைத் தேடியவன்
எல்லோரும் கடவுள்,கடவுள் என்று சொல்கின்றார்களே கடவுளை எப்படியாவது சந்தித்து விடவேண்டும் என்று ஒரு மனிதன் நினைத்தான்.கோயில் குருக்கள், முனிவர்கள்,ஞானிகள்,துறவிகள் எனப் பலரையும் போய்ப் பார்த்தான்,கோயில்,புனித ஸ்தலங்கள்,அறு படைவீடு என எல்லா இடங்களுக்கும் சென்றான். ஆனால் கடைசிவரை கடவுள் என்று யாரையும் சந்திக்கவே முடியவில்லை.இமயமலையில் இருப்பதாக புராணங்களில் எப்போதோ படித்தது ஞாபகத்திற்கு வர ,நடைப்பயணமாக இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றான். வழி நெடுக கடவுளைத் தேடி அலைந்தான். .இறுதியாக இமயமலையின் அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு ஒரு வயதான ஒரு துறவியைச் சந்தித்து " ஐயா,நான் கடவுளைத் தேடி 20 வருடங்களாக அலைகிறேன். அவர் எங்கிருக்கிறார் என்பதை எனக்குக் காட்டுவீர்களா?" என்று கேட்டான்.அதற்கு அந்தத் துறவி,'மகனே,இந்த சின்ன விசயத்திற்காக நீ பொன்னான காலத்தை வீணாக்கி விட்டாயே.சரி பரவாயில்லை. கடவுளை நான் இன்றைக்கே உனக்குக் காட்டுகிறேன்.இப்பொழுது நீ சோர்வாக இருக்கிறாய், இந்த அறையில் ஓய்வெடுத்துக் கொள் " என்று கூறிவிட்டுச் சென்றார்.மீண்டும் அவன் தங்கி இருந்த அறைக்குத் துறவி வந்த போது அந்த மனிதன் தூங்கிக் கொண்டிருந்தான்.துறவி ஒரு சாவியை அவன் கொண்டுவந்திருந்த பையில் ஒழித்து வைத்தார்.பின்னர் அவனை எழுப்பி கடவுளைச் சந்திக்க வருமாறு அழைத்தார். இருவரும் தொலைவிலிருந்த கோயிலுக்கு நடந்து சென்றனர்.கோயில் வீடு வந்ததும், "சாவியை நான் வரும் வழியில் எங்கோ தொலைத்து விட்டேன்.நீ தேடிக் கண்டுபிடித்துத் கொண்டுவந்தால் கடவுளைக் சந்திக்கலாம்" என்றார்.அவன் எங்கு தேடியும் சாவி கிடைக்க வில்லை.துறவியிடம் வந்து சாவி கிடைக்க வில்லை என்றான்.துறவியும் அவனைப் பார்த்து ”சாவி கிடைக்காது என்பது எனக்குத் தெரியும்.ஏனெனில் சாவி உன்னுடைய அறையில் இருக்கிறது" என்றார் “அப்படியா,இப்பொழுதே சாவியை எடுத்து வருகிறேன்,கடவுளைச் சந்திப்போம்" என்றான்."வேண்டாம்,அதற்கு அவசியமேயில்லை.உன் அறைக்குள்ளே வைத்துவிட்டு,வெளியில் தேட எப்படி சாவி கிடைக்க வில்லையோ,அது போலக் கடவுளும். நீ கடவுளை உனக்குள்ளே தேடு,நிச்சியம் வெற்றி பெறுவாய்”என்று கூறி விட்டு துறவி சிரித்தார்.அவன் ஊர் திரும்பி வந்த போது கடவுளைக் கண்டு விட்ட மகிழ்ச்சி மனதில் நிறைந்திருந்தது.

1 comment:

  1. கடவுள் !! எங்கேயும் நீக்கமற நிறைந்து இருப்பவன்.

    ReplyDelete