Thursday, January 10, 2013

Creative thoughts


இயற்கை

பூக்கள் தேனை வண்டுக்குத் தந்ததால் தோல்வியும் இல்லை ,தேனை எடுத்துக் கொண்டதால் வண்டுக்கு வெற்றியும் இல்லை .இது இயற்கையின் நியதி .இயற்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் வரையறை கிடையாது.

மனிதனுக்கு இயற்கை ஏகப்பட்ட நன்கொடைகளை வழங்கியிருக்கிறது .மனிதன் மட்டும் அது போதாது என்று இன்னும் புலம்பிக் கொண்டே இருக்கிறான்

உண்மையிலேயே தியாகம் செய்யக்கூடிய மக்கள் யாருமில்லை .மெய்யான தியாகங்களுக்கு எடுத்துக் காட்டுகளாக இயற்கையின் நிகழ்வுகளைத்தான் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

இது நல்லது இது கெட்டது என்ற பாகுபாடு இயற்கையில் இல்லை. நல்லதில் கெட்டதும் உண்டு ,கெட்டதில் நல்லதும் உண்டு .

இயற்கை மனிதர்களைப் போல அரசியல் தந்திரம் என்ற பெயரில் நேரத்திற்கு ஏற்ப தன்னை நிறம் மாற்றிக் கொள்வதில்லை .

இயற்கையின் படைப்புக்களில் மனிதன் மட்டுமே இயற்கைச் சிந்தனைகளிலிருந்து விலகிச் செல்லும் துணிவுடையவனாக இருக்கின்றான் .

இயற்கைப் பாதையை விட்டு விலகிச் செல்லும் எந்தச் செயலும் இயற்கையான முடிவைப் பெறுவதில்லை .பெரும்பாலும் விபரீதமாகவே முடிகின்றது .

விலங்குகள் தனெக்கென ஓரிடத்தை ஒதுக்கி வைத்துக் கொள்வதில்லை நாளைக்கு வேண்டும் என்றும் சேமித்து வைத்துக் கொள்வதுமில்லை .தான் பெற்றெடுத்த குட்டிகளுக்கென்று எதையும் சேர்த்து வைத்துக் கொடுப்பதில்லை . உயிர் வாழ எப்படிப் போராடவேண்டும் என்பதை மட்டும் கற்றுக் கொடுக்கின்றன .இயற்கையிட்ட ஆணைப்படி வாழ்ந்து மடிகின்றன.ஆனால் பரிணாம வளர்ச்சியில் பின்னர் தோன்றிய மனிதர்கள் அப்படியில்லை .இயற்கையில் அவனுக்கு முழு நம்பிக்கையில்லையா ? மனிதன் இயற்கையின் ஓர் அம்சம்தான் .ஆனால் அவனுக்குள் இருக்கின்ற மாய மனம் இருக்கின்றதே அதுதான் செயற்கை .மனதின் மனதின் செயற்கைத் தன்மையை அப்புறப்படுத்தி விட்டு இயற்கையை அனுபவிப்பவர்கள் அரிதாகிக் கொண்டே வருகின்றார்கள் .

இயற்கையில் புரிந்து கொள்ளக் கூடிய அம்சங்கள் பல இருந்தும் அதையெல்லாம் விட்டுவிட்டு வேண்டாதனவற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றோம் .இயற்கையின் அம்சங்களைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை என்பதே இயற்கை என்று தெரியவரும் .

இயற்கையின் நடைமுறைகள் ஒவ்வொன்றும் மனித வாழ்க்கை எப்படி யிருந்தால் எந்நாளும் இனிமையானதாக இருக்கும் என்பதைத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கின்றது .ஆனால் மனிதன் அவற்றை அறிந்திருந்தும் மயக்கும் மனதின் ஆதிக்கத்தினால் இயற்கையைப் புரிந்து கொள்ளத் தவறி விடுகின்றான் .இதனால் அவனுடைய வாழ்க்கை பிரச்சனைகளால் பின்னப்படுகின்றது .

No comments:

Post a Comment