Tuesday, January 1, 2013


கடவுள்

*மனிதன் என்பவன் இறைவனாகலாம் .எப்போது ? தான் பெற்றதை எல்லாம் கொடுத்துவிட மனமிருந்தால் .

*சம்பிரதாயமாக த் கோயிலுக்குச் செல்வதாலோ ,இறைவனைத் தொழுவதாலோ நன்மைகள் விளைவதில்லை .இறைவன் உனக்கு நண்பனாக வேண்டுமானால் இயற்கையை நேசித்து இயற்கையைப் போல வாழவேண்டும்

*ஒவ்வொருவரும் தனக்குத் தானே உதவிக்கொள்ள பல பல உறுப்புக்களை ஆண்டவன் அளித்திருக்கின்றான் .அதில் நம்பிக்கை இல்லாதவர்களே பிறரிடம் போய் உதவிக்கு நிற்கின்றார்கள் .கடவுளிடம் போய் எதையாவது கேட்டுக் கொண்டிருக்காதே .ஏனெனில் அதைப் பெறுவதற்கு வேண்டிய எல்லாவற்றையும் உனக்கு ஏற்கனவே அளித்து விட்டார்.

*ஒன்றில் எல்லாவற்றையும் காணுதல் என்பதும் எல்லாவற்றிலும் ஒன்றைக் காணுதல் என்பதும் இறைவனிடத்தில்தான்

*உள்ளுக்குள் வைத்துவிட்டு நாம் எல்லோரும் கடவுளை வெளியில் தேடிக்கொண்டிருக்கின்றோம் .எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ,எதற்குக் கொடுக்கக் கூடாது என்பது தெரியாமல் போனதால் இந்நிலை உருவாக்கி நிலைத்து விட்டது .

*ஒரு பொருளை அறையில் வைத்து பூட்டிவிட்டு வீடு முழுக்கத் தேடினால் எப்படி அப்பொருள் கைப்படாதோ ,அது போல இறைவனையும் நாம் ஆக்கிவிட் டோம் .

*எவனொருவன் இறைவனிடம் எதையும் கேட்டு வாழாமல் இருக்கின்றானோ அவனே இறைவனின் நம்பிக்கைக்கு உரியவனாகின்றான் .ஏனெனில் இறைவன் நீ வாழ உனக்கு எதெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் உனக்கு நீ பிறக்கும் போதே அளித்துவிட்டார் .அதை அனைத்தையும் கொண்டு வைத்துக் கொண்டு வாழ முடியாமல் மேலும் மேலும் எதையாவது இறைவனிடம் கேட்டுக் கொண்டே இருந்தால் அதனால் பயனொன்றுமில்லை.உன் வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்க்க மாட்டார் .

*நம்பிக்கை தீவிரமானதாக இருப்பதால் மட்டும் எதிர்பார்ப்புகள் எல்லாம் சிறப்பாக சிறப்பாக நிறைவேறி விடும் என்று கூறமுடியாது .பலர் ஏமாந்து போவதும் இறைவனைத் திட்டுவதும் இதைப் புரிந்து கொள்ளாததினால் தான் .

*இறைவன் என்பது ஓர் இரகசியம்,மனப் பக்குவப் பட்டவர்களால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும்.அவர்களால் மட்டுமே இரகசியத்தின் மூலமாக மக்களுக்கு நல்வழி காட்ட முடியும்.

*நல்லது நடக்குமெனில் பொய்யும் சொல்லலாம் என்பது சான்றோர்கள் நமக்களித்த உறுதிமொழி .அந்த அடிப்படையில் இறைவன் இன்றைக்கும் நிலைத்திருக்கின்றான்

*பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையை ஒரு பார்வையில் கண்டு களிக்க வேண்டும் என்ற விருப்பத்தின் வடிவமே இறைவன் .பேரளவிலான இயற்கையின் நுண்ணளவிலான உருவமே இறைவன்

 

No comments:

Post a Comment