Friday, January 25, 2013

Vethith Thanimangal- Chemistry


வேதித் தனிமங்கள் -செம்பு -பிரித்தெடுத்தல்

இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செம்பைப் பற்றி மக்கள் அறிந்திருந்தார்கள்.இதற்குக் காரணம் செம்பு இயற்கையில் ஒரு தனி உலோகமாகக் கிடைப்பதும் அதன் கனிமங்களிலிருந்து மிக எளிதாக ப் பிரித்தெடுக்க முடிவதும் ஆகும்.

செம்பு செம்பாக அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்திலும் ரஷ்யாவில் சில விடங்களிலும்,ஆஸ்திரேலியாவின் தென் பகுதிகளிலும்,பொலிவியா நாட்டிலும் கிடைக்கின்றது .உலோகங்கள் மற்றும் அலோகங்களுடன் செம்பு சேர்ந்து பல வகையான கனிமங்களாகவும் காணப்படுகின்றது .இந்தியாவில் பீகாரில் சிங்பம் மாவட்டத்தில் செம்பு கிடைக்கின்றது .இவற்றுள் முக்கியமானது குப்ரைட் ,மாலசைட் ,அசுரைட் ,சால்கோ பைரைட் ,டெனொரைட் ,போர்னைட் போன்றவைகளாகும் .

கந்தகக் கலப்பில்லாத செம்புக் கனிமத்துடன் கால்சியத்தைச் சேர்த்து அதிலிருந்து ஈரம் மற்றும் கார்பன் டை ஆக்சைடை அகற்றி சூட்டுலையில் கரியுடன் சேர்த்து ஆக்சிஜனிறக்கம் செய்து செம்பைப் பிரித்தெடுக்கலாம் .கந்தகக் கலப்புள்ள செம்புக் கனிமத்தில் இரும்பு ,ஆர்செனிக் ,மற்றும் கந்தகம் வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன என்பதால் இவற்றைத் தொடர் வழிமுறைகளினால் மட்டும் தூய்மையூட்டி செம்பைப் பிரித்தெடுக்க முடிகின்றது.தூய்மையற்ற செம்பை மின்னார் பகுப்பு முறை மூலம் 99.99 % வரை தூய்மைப்படுத்தலாம்.சில வகைப் பாக்டீரியாக்களைக் கொண்டும் செம்புக் கழிவிலிருந்து செம்பை தனித்துப் பிரித்தெடுக்க முடிகிறது.இது உயிரி வேதியியல் வழிமுறையாகும் .

பண்புகள்

இதன் வேதிக் குறியீடு Cu ஆகும். பழங்காலத்தில் உள்ள செம்புச் சுரங்கங்களில் மிகவும் பிரபலமானது சைப்ரஸ் ( Cyprus ) தீவிலுள்ளதாகும் .இதிலிருந்துதான் செம்பு என்ற பெயரே உருவானது .இலத்தீன் மொழியில் செம்பிற்கு குப்ரம் (Cuprum ) என்று பெயர் .இதன் அணுவெண் 29 ,அணு நிறை 63.54, அடர்த்தி 8920 கிகி /கமீ ,உருகு நிலையும் ,கொதி நிலையும் முறையே 1356 K ,2853 K ஆகும் .செம்பு செந்நிறமும்,பளபளப்பும்,உறுதியும் கொண்ட ஓர் உலோகம் .இதை அடித்து தகடாகப் பயன்படுத்தவும் கம்பியாக நீட்டி உபயோகிக்கவும் முடிகின்றது. தங்கம் ,வெள்ளிக்கு அடுத்தபடியாக உயரளவு வெப்பம் மற்றும் மின் கடத்தும் திறனைப் பெற்றுள்ளது .வறண்ட காற்று செம்பைப் பாதிப்பதில்லை .ஆனால் ஈரமான காற்று வெளியில் அதன் பொலிவு மங்கிப் போகின்றது .இதற்குக் காரணம் கருமையான குப்ரிக் ஆக்சைடு ஆக்சிஜனேற்றத்தால் படிவதே ஆகும்.இது பச்சை நிறத்தில் சுடர் விட்டு எரிகிறது,காற்றில் எரிவதில்லை ,ஆனால் பழுக்கச் சூடான நிலையில்,அது மெதுவாக ஆக்சிஜனேற்றம் பெறுகின்றது .புளூரின் ,குளோரின் போன்ற வளிமங்கள் செம்பின் புறப்பரப்பைத் தாகுகின்றன .செம்பு ஹைட்ரஜனுடன் நேரடியாக இணைவதில்லை .

குளிர்ந்த நிலையில் நீர்த்த மற்றும் அடர் கந்தக மற்றும் ஹைட்ரோ குளோரிக் அமிலங்கள் செம்பை அரிப்பதில்லை .காற்றின் முன்னிலையில் நீர்த்த கந்தக அமிலம் செம்பை மெதுவாக அரிக்கிறது .சூடான கந்தக அமிலத்தில் செம்பு விரைவாகக் கரைகிறது .அடர் மற்றும் நீர்த்த நைட்ரிக் அமிலத்திலும் செம்பு விரைவாகக் கரைகின்றது .

No comments:

Post a Comment