Wednesday, January 30, 2013

Eluthatha Kaditham


எழுதாத கடிதம்

முன்னேற்றப் பாதையில் முன்னேறிச் செல்ல நம்மை நாமே தகுதிப் படுத்திக் கொள்ளும் போது அதற்கு மற்றவர்களின் உதவியைப் பெறலாம் ஆனால் முழுப் பொறுப்பையும் மற்றவர்களிடமே விட்டு விடக்கூடாது .முன்னேறுவதற்கு நேர்மையான வழிமுறையைத் தேர்வு செய்ய விருப்பமில்லாதவர்கள் மற்றும்  குறுகிய காலத்திலேயே முன்னேறி விடவேண்டும் என்று தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் துடிப்பவர்கள்  தவறான வழிமுறைகளினால் முன்னேறியவர்களைத் தலைவர்களாகக் கொண்டு விடுகின்றார்கள் .இதனால் அவர்கள் தங்கள் சுயபுத்தியை வெகு சீக்கிரத்திலேயே இழந்துவிடுகின்றார்கள்.தவறான வழியில் தொடர்ந்து பிழைப்பதற்கு இவர்களைத் தலைவர்கள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.அவனால் தான் பிழைத்ததை விடத் தன்னால் அவன் பெற்றதே அதிகம் என்பதைப் பெரும்பாலும் காலங் கடந்து உணர்வதால் திருந்தவோ அல்லது ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளவோ தவறிவிடு கின்றார்கள். எதிர்ப்புகளைச் சமாளித்து மக்களை ஏமாற்றிப் பிழைக்க இதுவே பாதுகாப்பான வழி  என்பதால் பெரும்பாலான தலைவர்கள் இந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றார்கள். தாங்களாகவே அடிமையாகிக் கொள்ளும் இவர்களால் நாடு வெகுவாகச் சீரழிந்து வருகிறது .

மற்றொரு வகையினர் மிக எளிதில் உணர்ச்சி வயப்பட்டு தங்களை இழந்துவிடுவார்கள்.உணர்ச்சி வயப்படுதல் என்பது ஒரு வகையான பலவீனம்.உணர்ச்சிகள் எளிதில் வசப்படக் கூடியதாக இருப்பின் வாழ்க்கை முழுதும் பாதுகாப்பின்றி இருக்கும் .நம்மை மற்றவர்கள் ஏமாற்றுவதற்கு நாமே ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தது போலாகிவிடும் .

வாழ்கையில் ஒவ்வொருவரும் அவர்களே ஹீரோவாக இருக்க வேண்டும் மற்றவர்களை ஹீரோவாக்கிக் கொண்டாடக் கூடாது என்பதை உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் நினைவு படுத்திக் கொண்டால் தப்பிப் பிழைக்கலாம்.

No comments:

Post a Comment