Wednesday, January 6, 2021

ஊழலற்ற சமுதாயம் -5
ஒரு சிலர் பணியிலிருந்து கொண்டே வேறொரு தொழிலில் ஈடுபடுவார்கள். பொதுவாக தனியார் துறையில் வேலை செய்பவர்களை விட அரசுத் துறையில் வேலை செய்பவர்களே தொழில் அதிபராக  பிற தொழில் தொடங்குவதையும்  இரண்டாவது வேலையில்  ஈடுபடுவதையும்   செய்கின்றார்கள். இதற்குக் காரணம் முதலீடு செய்வதற்குத்  தேவையான கூடுதல் பணத்தைச் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பணிபுரியும் அலுவலகத்திலேயே உருவாக்கிக் கொண்டு  பயன்படுத்திக்கொள் கின்றார்கள். தட்டிக் கேட்க யாருமில்லாததால் அரசுத் துறைகளில் ஏறக்குறைய அனைவருமே ஏதாவதொரு தவற்றை மறை முகமாகச்  செய்பவர்களாக இருக்கின்றார்கள். தவறு செய்ய  வாய்ப்புக் கிடைக்காதவர்களே நல்லவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள், நல்லவர்கள் என்று மற்றவர்களால் நினைக்கப்படுகின்றார்கள். இது தலைமையிலிருந்து அடிமட்ட ஊழியர்கள் வரை வேறுபாடின்றி காணப்படுகின்றது.
புதிதாகத் தொழில் செய்வதற்காகச் சிலர் , தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்வதற்காகச் சிலர் லஞ்சம் வாங்குவதாகக் கூறுவார்கள். தொழில்  பற்றிய தொழில்நுட்ப  அறிவு சிறிதும் இல்லாமல் தொழில் தொடங்குவது இழப்பில் தான் முடியும்.தொழில்  தெரியாமல் தொழில் தொடங்குவது ஒரு முட்டாள்தனமான செயல் . அதைத்  தவறான வழியில் ஈட்டிய பொருளால்  தொடங்குவது தவறான செயல் மட்டுமல்ல  தண்டனைக்குரிய குற்றமுமாகும். 
அரசியல்வாதிகள். அரசு உயர் அதிகாரிகள் ,வருவாய்த் துறை  அலுவலர்கள் எல்லோரும்  செய்யும் ஊழல், வாங்கும் இலஞ்சம் , செய்யும் தவறுகள் போன்றவற்றால் கிடைக்கும் கூடுதல் வருவாயை தொழிலில் முடக்கிவைக்கின்றார்கள் . தொழில் தெரியாதவர்கள் , பெரும்பாலும் வெளிநாட்டு வங்கிகளில் போட்டு வைக்கின்றார்கள். உள்நாட்டு வங்கிகளில் பணத்தை கோடிக்கணக்கில் போட்டு வைத்தால் எங்கே தன் தகுதிக்கு மீறிய சொத்துக் குவிப்பைக் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் இப்படிச் செய்கின்றார்கள். இவர்கள் பெரும்பாலும் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புள்ள, வெளிநாடுகளில் நெருங்கிய உறவினர்களைக் கொண்டுள்ள அரசியல்வாதிகள் உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களாக இருக்கின்றார்கள் அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் உள்நாட்டில் சொத்துக்களை வாங்குகின்றார்கள். சொத்துக்களின் விலை ஏற்றத்திற்கு இவர்களே காரணமாக இருக்கின்றார்கள். பினாமி என்று வார்த்தை இவர்களால் கண்டுபிடிக்கப்பட்டதுதான்.
பிள்ளைகள் செய்யும் தவறுகளைப் பெற்றோர் திருத்த வேண்டும் மாணவர்கள் செய்யும் தவறுகளை ஆசிரியர் திருத்தவேண்டும். அது போல தவறுசெய்யும் ஊழியர்களை உயர் அதிகாரிகள் திருத்தவேண்டும். உயர் அதிகாரிகள் செய்யும் தவறுகளை நாட்டை ஆள்பவர்கள் திருத்த வேண்டும் .நாட்டை ஆள்பவர்களே தவறு செய்பவர்களாக இருந்தால் திருத்த யாருமின்றி  குற்றங்கள் பெருகவே செய்யும். எனவே தவறுகள் செய்யாதவர்களிடம் நாட்டை ஆளும் உரிமையைக் கொடுக்கவேண்டும் என்பதை மக்கள் உணரவேண்டும்.உயர் அதிகாரிகளின் கண்காணிப்பு இருந்தால் அலுவலர்களிடம் காணப்படும்  ஊழலையும் ,இலஞ்சத்தையும்  கட்டுப்படுத்திவிடமுடியும். ஆட்சியாளர்களின் கண்காணிப்பு இருந்தால் உயர் அதிகாரிகளிடம் காணப்படும் இலஞ்சத்தையும் ,ஊழலையும் தடுக்க முடியும். இதெல்லாம் ஆட்சியாளர்கள் ஊழல் செய்யாத நேர்மையாளர்களாக இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆனால் அவர்களே அத்  தவறுகளைச்  செய்வதால் அமைப்பு ரீதியிலான கண்காணிப்பு  மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஒப்புக்குச் செய்யப்படும் ஒரு செயலாகவே இருக்கும். .மேலும் பெரும்பாலான கண்காணிப்பாளர்கள் பணத் திற்கும் ,போதைக்கும் அடிமையாகி அதை நிலைப்படுத்திக் கொள்வதற்காக தடுப்பதற்குப் பதிலாக ஊக்குவித்து விடுகிறார்க்ள
 
 அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்று நம் முன்னோர்கள் இதை அன்றைக்கே சுட்டிக்காட்டத்  தவறவில்லை   கேப்டன் இல்லாத கப்பல் கரை சேருவதில்லை.கப்பலில் இருப்பவர்கள் மடிந்த பின்பு கரை சேருவதால் பயனுமில்லை
கண்காணிப்பு இல்லாத சமுதாயம் நலம் பெறுவதில்லை. கண்காணிக்கும் உரிமையுள்ளவர்கள் குற்றங்கள் நடைபெறாமல் கண்காணிக்கவேண்டும்..அது அவர்களது கடமையுமாகும் .  அதனால் ஒருவர் மற்றவரைக் கண்காணிப்பதைவிட மற்றவர்கள்  தன்னைக் கண்காணித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கண்காணிப்பதையே விட்டுவிடுவார்கள்.  பொது நலத்தை விட சுய நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து  இவர்கள் பணியில் செய்வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்யமாட்டார்கள் .தான் செய்யும் தவறுகளை யாரும் கண்காணித்து கண்டுபிடித்துவிடக்கூடாது என்ற கள்ளத்தனத்தோடு மிகுந்த கவனமாகச் செயல்படும்போது பிறர் செய்யும் தவறுகளைக் கண்காணிக்கத் தவறிவிடுகிறார்கள். கண்காணித்தால் தானும் கண்காணிக்கப்படுவோம் ,தடுத்தால் தானும் தடுக்கப்படுவோம் என்ற உள்ளார்ந்த உணர்வு அவர்களைச் செயலிக்கச் செய்துவிடுகின்றது. மக்களைத்  திருப்திப்படுத்துவதற்காக ஒப்புக்குக் கண்காணிப்பது போல நடந்துகொள்வார்கள். தவறுகளைக் கண்டுகொள்வதில்லை. .களவாணிகள் எப்போதும் களவாணிகளோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு செயல்படுவார்கள். சுய தொழிலில் மேற்கொண்டு செய்வேண்டிய முதலீடுகளுக்கும்  , இடையிடையே ஏற்படும் இழப்புக்களை நேர் செய்யவும்  கடமை தவறி  பொருள் சம்பாதிக்கும் பழக்கத்தை கூட்டணி அமைத்துக் கொண்டு  விரிவு படுத்திக் கொண்டிருப்பார்கள்.
 
ஒரு தவறான செயல்  தடுக்கப்படாது  சமுதாய மக்களிடம் பரவுமானால் அச் செயல் ஒரு தொற்று நோய் போல விரைந்து பரவிவிடும் . கண்காணிக்கப் படும்  குற்றங்கள் ஒரு கூட்டுத் தொடரிலும் கண்காணிக்கப்படாத  குற்றங்கள் ஒரு பெருக்குத் தொடரிலும்  செல்வதால் கண்காணிக்கப்படாத குற்றங்கள்  ஒரு நிலையில் எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அது சீர்த்திருத்த முடியாத சமுதாயத்தை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்லும்

No comments:

Post a Comment