Thursday, January 14, 2021

 ஊழலுக்குக் காரணம் யார் ? எல்லா ஊழல்களுக்கும் மூல காரணம் அரசியல்வாதிகளே என்று பலர் சொல்வார்கள்.  அதில் மாற்றுக் கருத்து இருப்பதற்கு இடமில்லை. ஆனால் அதிகாரமுள்ள அரசியல்வாதிகள் ஆதாரங்களை மறைத்துவிட்டு மறுப்பதால் எந்த அதிகாரமில்லாத மக்கள் ஊழலை ஒழிக்கமுடியாமலும் ,ஒத்துப்போக முடியாமலும் நீண்ட காலமாகப் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

உயர் அதிகாரிகள் எல்லோரும் ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்பட்டு  அவர்கள் செய்யும் ஊழலுக்கு ஒத்துப் போகின்றார்கள் .அதனால் ஊழலில் அவர்களுக்கும் கணிசமாக ஒரு பங்கு கிடைத்துவிடுவதுடன் ,அரசியல்வாதிகளின் ஆதரவும் கிடைக்கின்றது. இந்த ஆதரவை அவர்கள் தனித்துச் செய்யும் பிற குற்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்கின்றார்கள்..

 எல்லாப் பொது மக்களுக்கும் நியாயமாகக் கிடைக்கவேண்டிய உரிமை, வாய்ப்பு, வசதிகளை ஒரு சிலர் தட்டிப்பறித்துக் கொண்டு போவதும் ,பொதுமக்களுடைய  வரிப்பணத்தை பொதுமக்களுக்காகச் செலவு செய்யாமல் ,செலவு செய்ததாகப் போலியாகக் கணக்கை மட்டும் காட்டிவிட்டு பணத்தை சுருட்டிக் கொள்வது முதன்மை ஊழல் .   இந்த வகையான ஊழலை ப் பெரும்பாலும் அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் செய்கின்றார்கள் .மக்களுக்கு சரிசமமாகப் பங்கீடு செய்யவேண்டிய அதிகாரமும் ,பொறுப்பும் , கடமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊழல் செய்யும் வாய்ப்பு இயல்பாகக் கிடைக்கின்றது  என்பதால் ஊழலின் முதல் குற்றவாளி அரசியல்வாதிகள் தான். அவர்கள் பங்கீடு செய்யும் வாய்ப்பை அதிகாரிகளுக்குக் கொடுத்தால்தான் அதிகாரிகள் ஊழல் செய்யமுடியும்..இதற்காகவே அரசியல்வாதிகள் ஆளுங்கட்சியில் பதவி பெறுவதற்காகப்  போராடுவார்கள் .

எதையும் விரைவாகவும் , குறுக்கு வழியிலும் சாதிக்க பொருள் வசதியும், வாய்ப்பும் உள்ள சுயநலக்காரர்களும் ஊழல் செய்கின்றார்கள்..சிலர் தொழில் தொடங்க அனுமதி, அரசாங்க வேலை கிடைக்க பணி நியமனம் ,உயர் படிப்பு படிக்க  வாய்ப்பு போன்றவைகளுக்காக அதற்கு அதிகாரமுள்ளவர்களுக்கு பொருள் கொடுத்துப் பெறுவதும் ஒருவகையான ஊழலே. இதை  இலஞ்சம் என்றும் கூறுவார்கள் . இதனால் சரியான நபருக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்பு அவர்களால் தட்டிப்பறிக்கப்படுகின்றது ..பெரும்பாலும் ஊழலால்  சம்பாதிக்கும் பணம் கறுப்புப் பணமாக பதுக்கிவைக்கப்படுகின்றது .நாட்டின் முன்னேற்றத்திற்காகப்  பெறப்படும் வருவாயை ஊழல் மூலம் ஒரு சிலர் அபகரித்துக் கொள்வதால் திட்டத் செலவிற்கான நிதி பற்றாக்குறையாகவே இருக்கின்றது..இதனால் எந்தத் திட்டமும் திட்டமிட்டபடி நிறைவேற்ற முடிவதில்லை .

No comments:

Post a Comment