Tuesday, January 12, 2021

 அது ஒரு பொம்மை என்றாலும் பார்த்தவுடனேயே ஒரு தத்துவத்தை அறிவுறுத்தக்கூடிய ஆற்றலுடையது என்பதால் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது .மூன்று குரங்குகள் அடுத்தடுத்து அமர்ந்திருக்க ஒவ்வொன்றும் பார்ப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட  செய்தியைக் கூறுமாறு வெவ்வேறு செயல்களைக்  காட்டிக் கொண்டிருந்தன .தீயதைப் பேசாதே என்று ஒரு குரங்கு வாயைப்  பொத்திக்கொண்டிருந்தது, தீயதைப்  பார்க்காதே என்று மற்றொரு குரங்கு கண்ணை மூடிக்கொண்டிருந்தது .தீயத்தைக் கேட்காதே என்று மூன்றாவது குரங்கு தன்னிரு காதுகளையும் கைகளால் அடைத்துக் கொண்டிருந்தது. தீயதைப் பேசினால்  வாய் இனிய சொற்களை உச்சரிக்காது  , தீயதைப் பார்த்தால் நல்லனவற்றைப் பார்த்து வேற்றுமையை உணர்ந்து விலக்க  வேண்டியதை விலக்கி  ஏற்றுக்கொள்ள வேண்டியதை ஏற்றுக்கொள்ளும்  பக்குவம் வராது. தீயதைக் கேட்டால் அதுதான் சமுதாயத்தின் நிலையோ என்றெண்ணி மனம் எளிதில் ஏற்றுக்கொண்டுவிடுவதுடன் அதைப் பின்பற்றவும் தூண்டும் .


இப் பொம்மையின் உட்பொருளாக உளவியல் சார்ந்த வாழ்வியல் கருத்துக்கள் உள்ளன என்பதை வெகு சிலரே புரிந்து கொண்டிருக்கின்றார்கள் .மனதை உருவகப் படுத்தி குரங்காக்கியிருக்கின்றார்கள் .கிளைவிட்டு கிளை தாவும் குரங்கைப் போல மனம் எப்போதும்  எண்ணங்களுக்கிடையே தாவிக்கொன்டே இருக்கும். குரங்கு சேட்டைகள் செய்வதைப்போல மனமும் சிலசமயங்களில் விபரீதமாய் எண்ணங்களில் வட்டமிடும் .அயர்ந்து தூங்கும் போது கூட மனம் ஓய்வெடுத்துக் கொள்வதில்லை. எண்ணங்களின் பிம்பங்கள் கனவாய் மலர்கின்றன..அகமனதின் உள்ளார்ந்த விருப்பமே  கனவுக்  காட்சிகளாய் வெளிப்படுகின்றது .ஓயாது அலைபாயும் மனதை ஒருவன் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது எல்லோருக்கும் அவ்வளவு எளிதான காரியமில்லை 


'எய்ட்ஸ் ' நோய் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை சமுதாயத்தில் ஏற்படுத்த குறும்புக்கார இளைஞர்கள் சிலர் இன்றைக்கு இதில் நான்காவதாக ஒரு குரங்கையும் இணைத்திருக்கின்றார்கள் . தகாத உறவு கொள்ளாதே என்ற கருத்தை வலியுறுத்தி அக்குரங்கு தன்  பிறப்புறுப்பைப்  பொத்திக் கொண்டிருக்கிறதாம் .இந்தக் குறும்பை பெருகிவரும் இலஞ்சத்தின் பொருட்டு மேலும் கொஞ்சம் விரிவுபடுத்தலாம் .இலஞ்சம் வாங்காதே , இலஞ்சம் கொடுக்காதே என்று அறிவுறுத்துமாறு ஐந்தாவதாக ஒரு குரங்கு தன்னிரு கைகளையும் மடக்கி  வைத்திருக்கலாம் . சட்டத்தின் எச்சரிக்கைக்கு செவிமடுக்காத மக்கள், மக்களுக்கான அதிகாரிகள் , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஆட்சியாளர்கள்  இந்த குரங்கு பொம்மையின் அறிவுரைக்குக் கட்டுப்படுவார்கள்  என நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயல்தான். 


தவறு செய்பவர்கள் தவற்றை ஒப்புக் கொள்வதில்லை .எந்த அறிவுரை கூறினாலும் அதற்கு வேறு விதமாக விளக்கம் வேறு கொடுப்பார்கள். .மனிதர்கள் பேசும் பொய்களைக் கேட்க விரும்பாமல் தன்  காதுகளையும் ,செய்யும் குற்றங்களை ப் பார்க்க விரும்பாமல்  தன் கண்களையும் , மீண்டும் மீண்டும் விரும்பப்படாத  அறிவுரைகளைச் சொல்லக் கூடாது என்று தன்  வாயையும் அந்தக் குரங்குகள் மூடிக்கொண்டிருக்கின்றவாம் .இன்றைக்குக் கற்பிக்கப்பட்டுவரும் புதிய விளங்கங்களே தீய ஒழுக்கங்களில்  மக்கள் கொண்டுள்ள மறைமுகமான விருப்பத்தைத் தெரிவிக்கக்கூடியதாக இருக்கின்றது  நல்லதைப் பேசாதே ,நல்லதைப் பார்க்காதே ,நல்லதைக் கேட்காதே என்று பார்ப்பவரை அறிவுறுத்துமாறு  அம்மூன்று குரங்களும்  கூறுகின்றனவாம் .ஒரே பொம்மைக்குச் சொல்லப்படும் கருத்து மாற்றங்கள் சமுதாய மக்களின் சராசரி எண்ணங்களின் பரிணாம வளர்ச்சியையே  படம் பிடித்துக் காட்டுகின்றது. 


இன்றைக்கு சமுதாய மக்களில் பெரும்பாலானோர்  ஏன் இப்படி விபரீதமாகச் சிந்திப்பதும் செயல்படுவதுமாக இருக்கின்றார்கள் .இதற்கு  அடிப்படைக் காரணம் அவர்களுடைய கண்ணோட்டத்தில்  குற்றச் செயல்கள் தண்டிக்கப்படுவதில்லை ,தடுக்கப்படுவதுமில்லை .அது மறைவொழுக்கமாக எல்லோரிடத்திலும் பரவிவருகிறது. தடுக்கும் தண்டிக்கும் உரிமையுள்ளவர்களே தவறான வழியில் கிடைக்கும் பொருளுக்கு பேராசைப்பட்டு   குற்றச் செயல்களை வளர விட்டுவிடுகின்றார்கள்  இது போன்ற எண்ணங்கள் வெறுப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தி  குற்றச் செயல்களின் ஈடுபாடு கொள்ளுமாறு செய்துவிடுகிறது.            

   

ஒவ்வொருவரும் நல்லனவற்றை  புறத்தே ஆதரித்தாலும்  தொடர்ந்து  அகத்தே நிராகரித்தது வருகின்றார்கள். அகநிலை மாற்றங்களை அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் ,அதன் பரிணாம வளர்ச்சி சமுதாயத்தால்  பிரதிபலிக்கப்படும் போது மதிப்பிடமுடிகின்றது. அகநிலை மாற்றங்கள் நம்முடைய பொதுவொழுக்கங்களில் குறிப்பிடத்  தகுந்த  மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.


சமுதாயத்தில் அன்றாடம் நிகழும்  நிகழ்வுகள் கூட இக் கருத்தை தெரிவிக்கின்றன. திருட்டு, கொள்ளை, ஏமாறுபவருக்குத் தெரியாமலே ஏமாற்றுதல் , வழிப்பறி , கொலை ,கற்பழிப்பு ,போன்ற குற்றங்கள் மிகச் சாதாரணாமாகி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நடந்து கொண்டிருக்கின்றன . இது சிறிய வளர்ச்சியில் காணப்படும் பெரிய வீழ்ச்சி , நுண்ணிய ஆக்கத்தில் மறைந்திருக்கும் பேரழிவு ,முன்பெல்லாம் தீய செயல்கள் எல்லாம் அரிதாக அரங்கேறின. யாரும் அறியாமல் இரவில் நடந்தன .தனி நபராக  மட்டுமே குற்றச் செயலில் ஈடுபட்டார்கள் . ஆனால் இன்றைக்கு  பட்டப்பகலில் நடு வீதியில்  பலர் முன்னிலையில்  இக் குற்றங்களை நடக்க ஆரம்பித்திருக்கின்றன .கூட்டுச் சேர்ந்து பெரிய அளவில் குற்றங்கள் புரிவதும் , சின்ன விஷயத்திற்கும் ,கருத்து வேறுபாடு கொண்டு கொலை செய்வதும் மட்டுப்படுத்தப்படாத   அதன் பரிணாம வளர்ச்சியாகும்  .இந்த மாற்றங்கள் மக்களால் மனப்பூர்வமாக விரும்பப் படாவிட்டால் அது பரிணாம வளர்ச்சியடைய  வாய்ப்பில்லை. இன்றைக்கு யாரும் தவறுகளைச் சுட்டிக்காட்ட முன் வருவதில்லை. சமுதாய வீதியில் எல்லோருக்கும் தெரியும் படி ஒரு குற்றம் நடந்தால் அருகில் இருப்பவர்கள் அதைக் கண்டு கொள்ள அச்சப்படுகின்றார்கள் .தீயதைச் செய்ய யாரும் வெட்கப்படுவதில்லை.பிறரைக்கண்டு அச்சப்படுவதுமில்லை  நல்லறிவுரை கூட இன்றைக்கு ஒருவரை கொலை செய்யத் தூண்டி விடுகின்றது .இதனால் நல்லவை இயல்பாக வெளிப்படத் தயங்குகின்றன.இதனால் குற்றங்கள் இன்றைக்கு சமுதாயத்தில் மிகுந்து வருவது மட்டுமின்றி  அவைகள் நியாயப்படுத்தப்படவும் செய்கின்றன.நல்லவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள் தீயவர்கள் போற்றப்படுகிறார்கள் . இத்தனைநாள் இன்றைய இளைஞர்களும் நாளையச் சந்ததியினரும் நல்லனவற்றைப் பார்த்து கற்றுக்கொள்வதை விட அதிகமாக மிக மிக அதிகமாகத் தீயன வற்றைப் பார்த்து பழகிக்கொள்கின்றார்கள் .   


No comments:

Post a Comment