Wednesday, January 13, 2021

 ஊழலை ஒழிக்க ஆக்கப்பூர்வமான அரசியல் மாற்றங்கள்  


ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு அதில் உண்மையாகவே விருப்பம் இல்லாதவர்களிடம் கொடுக்கப்படுவதால்  அது நிறைவேற்றப்படாமல் இருப்பதோடு ஊழல் பெருக்கத்திற்கும் ஆதரவாய் இருக்கின்றது. அதனால்தான் ஊழல் ஒழிப்பு நீண்டகாலமாக  வெறும் கனவாகவே இருக்கின்றது  ஊழலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கின்றது என்று உறுதிப்படுத்தப்பட்ட  நிலையில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை  அரசியல்வாதிகளிடம் ஒப்படைப்பது நாம் செய்யும் தவறாகும் .அரசியலுக்கும் அப்பாற்ப்பட்ட ஒரு தனித்துவமான அமைப்பு மட்டுமே ஊழலை ஓரளவாவது கட்டுப்படுத்தும் .அத்தகைய அமைப்பை அமைக்கும் பொறுப்பு நேர்மையான அரசியல்வாதிகளுக்கு உண்டு .ஏனெனில் அரசியல்வாதிகள் மக்கள் நலனுக்காகவே பொதுச் சேவை செய்யும் மனப்பான்மையோடு  பதவியை ஏற்றுக்கொண்டவர்கள் .அரசியல்வாதிகள் செய்யத் தவறினால் அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதவேண்டிய கட்டாயம் சட்ட வல்லுநர்களுக்குத் தவிர்க்கயியலாததாக  இருக்கின்றது  இதிலுள்ள சிக்கல் இதை நன்மக்களே உணர்த்தவேண்டிய கட்டாயமாக இருக்கின்றது 


ஆக்கப்பப்பூர்வமான அரசியல் மாற்றங்கள் ஏற்படவேண்டும். இது ஒரு கட்சித் தலைவர் போய் மற்றொரு கட்சித் தலைவர் ஆட்சி புரிவதால் வருவதில்லை . ஏனெனில் அவர்களிடம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படையான பொதுக் கொள்கைகள்  பேச்சளவில்  உறுதியானவை போலத் தோன்றினாலும் செயலளவில் பலவீனமாகவே இருக்கின்றன. அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏறக்குறைய ஒன்றுபோலச் செயல்படுவது தலைமை மாற்றத்தினால்  மக்கள் நலத்திற்கான புதிய  மாற்றங்கள் ஏற்பட வழியில்லை என்பதை மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவேயில்லை.மீண்டும் மீண்டும் தலைமை மாற்றத்தினால் மட்டுமே மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.


இன்றைக்கு இந்தியாவில் பின்பற்றப்படும் ஆட்சியாளர்களுக்கான தேர்தல் முறை பயனற்றது.ஏனெனில் அதை எவ்வளவு முறை திருத்தங்களுடன் மேற்கொண்டாலும் நன்மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றங்கள் ஏற்படுவதற்கான வழி தென்படவில்லை.மதம், இனம்,மொழி  சார்ந்த தேர்வு முறையும் நாட்டு மக்களின் பொது நலனுக்கு பயனளிப்பதில்லை.   மக்களின் பொருளாதாரம்  , கல்வி, வாழ்க்கைச் சூழல் , வாழ்வாதாரத் தேவைகள்    ,போன்ற பலவிதமான சமச்சீரின்மையால் பெரும்பாலான மக்கள்  சரியான ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யும் திறமையில்லாதவர்களாகவே இருக்கின்றார்கள்.நிரந்தரத் தேவைகளைத் நிறைவேற்றுவதாக  பொய்யான உறுதிமொழிகளால் மக்களைக் கவர்ந்தும் , இலவசங்களை அள்ளிக் கொடுத்தும்    வாக்குகளை அதிகம் பெற்று  தேர்தலில் வெற்றிபெறும் போக்கால் நாடு முன்னேறுவதற்கான வாய்ப்பு சிறிதுமில்லை .              


கட்சித் தலைவர்களே வேட்பாளர்களை நியமிக்கிறார்கள்  .கட்சித்தலைவரின் நியமனம் பெற்ற கட்சி வேட்பாளரே தேத்தலில் வெற்றி பெறுகின்றார் .நியமனம் பெறாத கட்சி உறுப்பினர் வெற்றிபெறுவதில்லை  தேர்தெடுக்கப்பட்ட பிறகு அவர்கள்  கட்சித் தலைவர் நினைக்கின்றபடியே செயல்படமுடியும் . சுயமாகச் சிந்தித்துச் செயல்படமுடியாது..அதாவது அவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருப்பதைவிட  கட்சித் தலைவரின் பிரதிநிதியாகவே இருக்கின்றார். சட்ட மன்ற ,அல்லது  மக்கள் மன்ற உறுப்பினர்கள் பலவாக இருந்தாலும் கட்சித் தலைவரின் கருத்தும் முடிவும் மட்டுமே அவர்களுடையதாகி அரங்கேறுகிறது ..கட்சித்தலைவரின் கருத்தும் முடிவும் தவறாக இருக்கும் போது அதை மறுப்பதற்குக் கூட  அவர்களுக்கு உரிமையில்லாது  போகின்றது. தேர்தலுக்காக கோடிக்கணக்கில் செலவுசெய்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு  , உறுப்பினர்களின் தனித்த கருத்துகளுக்கு இடமின்றி  கட்சித் தலைவரின் கருத்தையும் முடிவையும் ஏற்றுக்கொள்வது என்பது முழுமையான ஜனநாயகம் ஆகாது. இதற்குக் கட்சித்தலைவரையே நிரந்தரமாக பதவியிலிருக்குமாறு செய்துவிடலாம்.


நாடு முழுக்க பல கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு , அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி நாட்டை ஆளும் தலைவரைத் தேர்ந்தெடுகின்றது.இது மக்களாட்சி என்று சொல்லப்பட்டாலும், ஒரு வகையில் மக்களாட்சிக்கு எதிரானதும் கூட .ஒரு சிறிய பகுதிக்கு அப்பகுதி மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களால் ,நாடு  முழுமைக்கும் சரியான, நேர்மையான ,தகுதியான ஒரு பொதுவான தலைவரைத் தேர்வு செய்வது  மக்களாட்சியாகாது .நாட்டை ஆள்பவர் நாட்டு மக்கள் எல்லோராலும் தேர்தெடுக்கப்படுபவராக இருக்கவேண்டும் .நாட்டை ஆளும் தகுதியுடைய யார்வேண்டுமானும் தலைமைப் பதவிக்கு ப் போட்டியிடலாம். தேர்தல் என்பது அது மட்டுமே. மைய அரசுக்கு ஜனாதிபதி ,மற்றும் பிரதம மந்திரி யும்  மாநில அரசுக்கு முதலமைச்சரும் மக்களால் தேர்வுசெய்யப்பட்டால் போதும். தங்களுக்குத் தேவையான தகுதி வாய்ந்த திறமையானவர்களை அவர்களே அமைச்சர்களாகவும் ,வட்டாரப் பிரதிநிதிகளாகவும்  நியமித்துக் கொண்டு  நிர்வாகம் புரிவார்கள்.நாட்டு மக்கள் அனைவராலும் தேர்வு செய்யப்பட்ட ஒரு நல்ல தலைவர், நல்ல அமைச்சர்களையும் , வட்டார உறுப்பினர்களையும் தேர்வு செய்வார். நல்ல அமைச்சர்கள் நல்ல அதிகாரிகளை உருவாக்குவார்கள்., நல்ல அதிகாரிகளால் நல்ல பணியாளர்கள் இயல்பாகக் கிடைப்பார்கள்.அரசாங்கம் என்ற இயந்திரம் செம்மையாக இயங்கிச் செல்ல இதைவிட வேறு என்ன வேண்டும் ? பதவிக்காக திடீர்திடீரென்று கொள்கையற்ற பல கட்சிகள் உருவாவது தவிர்க்கப்படுவதுடன் ,திறமையான, நேர்மையான முழுத்தகுதியான மக்கள் தலைவர்களை  மக்களே தேர்வு செய்யும் வாய்ப்பும்  கிடைக்கின்றது ..இந்த மாற்றங்கள் சட்டங்களாக்கப்பட்டு செயல்படுத்தப்படுவது இருக்கட்டும் . இப்படிப்பட்ட சிந்தனைகள் கூட  இன்றைய அரசியல்வாதிகள் யாரிடமும் இல்லை .ஏனெனில் அவர்கள் அரசியலால் பெறும் ஆதாயங்களையும்  அனுகூலங்களை யும் இழந்துவிட நேரிடும் என்பதால் எந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டாலும் அரசியல் மாற்றங்களை அனுமதிப்பதேயில்லை.


No comments:

Post a Comment