Thursday, January 21, 2021

 அரசியல் கட்சிகள் கணக்கில்லாமல் பலவாக இருப்பது பொதுவாக நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லதல்ல . அரசியல்வாதிகள் மட்டுமல்ல குற்றவாளிகளும் அதிலுள்ள எதிர்மறையான வாய்ப்புக்களை அவர்களுடைய சுயநலத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு விடுகின்றார்கள்.ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக்  கொண்டாட்டம் என்பார்கள் ..கட்சிகள் பலவானால் ஊர் இரண்டுபடவே செய்யும். கட்சியை உருவாக்கி தலைவராகி விடவேண்டியது. ஆளும் போது  செய்த ஊழல்களினால் தனித்து வெல்லமுடியாது என்று அச்சப்படும் கட்சிகள் இவர்களுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள விரும்புவார்கள். எந்தக் கட்சி இந்தமுறை வெல்லும் என்று கணித்து அந்தக்கட்சியோடு கூட்டணி சேர சில சின்னக் கட்சிகள் விரும்பும். கூட்டணியில் கட்சியின் கொள்கைகள் மறக்கப்பட்டுவிடும் ..

ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் சின்னச் சின்னக்  கட்சிகளின் நிபந்தனைகளும்.அதிகாரமும் மக்களாட்சியில் ஊடுருவும் சர்வாதிகாரத் தனத்தையே வெளிப்படுத்திக் காட்டும் .தோள் கொடுப்போம் என்று தோள் மீது ஏறி அமர்ந்துகொண்டு விடுவார்கள். நாட்டு நலன் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள ஓர் அரசியல்வாதி ,பதவியைப்பெறுவதற்காக அல்லது தக்கவைத்துக் கொள்வதற்காக பதவிக்காகவே அரசியல் செய்யும்   கூட்டணி கட்சிகளின் ஆதரவை விரும்பமாட்டார்.

ஒரு கட்சிக்கு ஒரு நல்ல தலைவர் அமைவது அரிது.ஏனெனில் ஒரு  தலைவர் தனித்த  கொள்கையின் தாக்கத்தினால் உருவாவதை விட கட்சியில் இருக்கும் பொறுப்பாளர்களின் விருப்பமே தலைமையை நிரந்தரமாக்குகின்றது. கட்சியின்  கொள்கை என்பது அக் கட்சியிலுள்ள பெரும்பாலான பொறுப்பாளர்களின் கருத்தாகிவிடுவதால் அது காலத்திற்கும் ,சூழ்நிலைக்கும் ஏற்ப மாறிக்கொண்டே போவது தவிர்க்கயிலாததாக இருக்கின்றது .

கூட்டணியில் இருக்கும் ஒருவர் ஊழல் குற்றத்தால் குற்றம்சாட்டப்பட்டால் , ஆட்சியிலிருப்பவர்கள் அந்தக் குற்றச்சாட்டையே குற்றம்சாட்டுகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ,அது தனக்குத் தெரியாது என்று வருத்தம் தெரிவிப்பார்கள் .அரசியல் தெரிந்த உண்மையான அரசியல் தலைவர் ஆட்சிப் பொறுப்பில் தனக்கு உண்மையாகத்  துணையாக இருக்கக் கூடியவர்களுக்கு மட்டுமே பொறுப்புக்களைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அவர் அவருடைய  கட்சியிலிருக்கவேண்டும் என்ற கட்டாயம் கூட இல்லை.. திறமையான நாட்டு மக்களாக இருந்தாலே போதுமானது.அப்படிப்பட்ட நபர்களைத் தெரிவு செய்யக் கூடிய ஆளுமைத் திறன் ஒரு நேர்மையான தலைவருக்கு இருக்கவேண்டும் .சரியான நபரைத்  தெரியாமல் தேர்வு செய்யக்கூடிய ஒரு தலைவரால்  ,நாட்டு மக்களின் மனதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கவே முடியாது. ஒரு சராசரி மனிதனின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால் எத்தகைய திறமையுள்ள தலைவரும் நாட்டைச் சிறப்பாக ஆளவே முடியாது.     


No comments:

Post a Comment