Arika ariviyal
மரத்திலிருந்து காய் தானாகக் கீழே விழுவதில்லை .நன்கு
கனிந்த பழமே விழுகிறது .எப்பொழுதும் காய் கனிந்து
பழமானபின் ஏன் விழவேண்டும் என்று நியூட்டனைப்
போல நினைத்து ஒருமுறை சிந்தித்துப் பார்த்தால்
மேலும் ஒரு விஞ்ஞானம் வளராதா ?
உண்மைதான் .
பழம் என்பது மரத்தின் விதை .பழம் விழுதல் என்பது
இனவிருத்தியின் முதல் கட்டம்.அது கீழே விழும்போது
கனிந்த பழம் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்வதால் விதை
பாதுகாப்பாக மண்ணில் விழுகிறது . கல் போன்ற
கடினமான பாறைகளின் மீது விழுந்தாலும் விதைக்கு
பாதகம் ஏதும் விளைவதில்லை .மண்ணில் விதை
புதைவதற்கு ஏதுவாக ,விழும்போதே ஒரு சிறிய குழியை
ஏற்படுத்துகிறது .விதை விழும் இடத்தில் நிலைப்படுவதற்கு
இது அனுகூலமாகஇருக்கிறது.
இயற்கையில் மிகச் சாதரணமாக நிகழும் நிகழ்வுகளில்
எல்லாம் நுட்பங்கள் புதைந்திருக்கின்றன . கலையும்
அறிவியலும் ஒன்றிணைந்து இருப்பதால் அதுவே
கவிஞனாகவும் , விஞ்ஞானியாகவும் மாறிமாறித் தோன்றுகிறது .விழிப்புணர்வோடு இவற்றை உற்று
நோக்கினால் காலம் போவதே தெரிவதில்லை .தேடும்
மகிழ்ச்சி எல்லாம் ஒன்று திரண்டு அங்கே வெளிப்பட்டுத்
தோன்றும் உணர்வைக் காணமுடிகிறது .
இயற்கை, அறிவியலுக்கும் கலைக்கும் எழுதப்படாத
முழுமையான களஞ்சியம் .இதில் இல்லாத விஷயங்கள் ஏதுமில்லை .இயற்கையை உற்றுப்பார்த்து அது சொல்லும்
இரகசியங்களை மொழி பெயர்க்கத் தெரிந்தால் ,அந்தப்
பழக்கமே ஒரு மாணவனை உயர் நிலைக்கு
இட்டுச் செல்லும்.
****************
பஞ்சும் இரும்பும்
ஒரு கிலோ பஞ்சு ஒரு கிலோ இரும்பு இவற்றை
எடையிட்டால் எதன் எடை அதிகமாக இருக்கும் ?
இது ஒரு அபத்தமான ஒரு கேள்வி எனத்தோன்றும் .
ஏனெனில் இரண்டும் சம எடை கொண்டதுதானே .
எனினும் சிலர் அவசரப்பட்டு இரும்பு கனமானது
என்று கூறுவர்.சம எடை கொண்டது என்பது பேரியல்
அடிப்படையில் சரியானது என்றாலும் அதை நுண்ணிய
அணுகுமுறையில் ஏற்றுக்கொள்வதற்கில்லை. விளக்கவும் .
**************
காற்று வெளியில் ஒரு கிலோ பஞ்சு ,ஒரு கிலோ
இரும்பை விடச் சற்று அதிகமானது . ஆனால் வெற்றிட
வெளியில் நிறுக்கும் போது சமமானது . காற்று வெளியில்
நிறுக்கும் போது பஞ்சு அதிக அளவு இடத்தை அடைப்பதால்
அதனால் இடப்பெயர்வுக்கு உள்ளான காற்றின் எடையை அது இழக்க ,அதை ஈடுகட்ட கூடுதல் பஞ்சை ஒரு கிலோவாக நிறுக்க வேண்டியிருக்கும் ஆனால் இரும்பு சிறிதளவு இடத்தை அடைப்பதால் ,மிதவை விசை சொற்பமாக இருக்கும் .
எனவே காற்று வெளியில் ஒரு கிலோ இரும்பை
விட ஒரு கிலோ பஞ்சு சற்று கனமானது எனலாம்.
No comments:
Post a Comment