எழுதாதகடிதம்-18
அன்பார்ந்த மாணவர்களே
நவம்பர்-7
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ராயவரம் என்னும் ஊரில் பிறந்த
அழ .வள்ளியப்பா தன் வாழ்நாட்களை குழந்தைகளுக்காகச்
செலவிட்டு குழந்தைக் கவிஞர் எனப் பெயர்பெற்றார்.அவருடைய
பிறந்த நாளான நவம்பர் -7 ,காரைக்குடியில் ஒவ்வொரு ஆண்டும்
குழந்தை இலக்கிய தின விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது .அன்று
பல பள்ளிகளிலிருந்து சின்னச் சின்னக் குழந்தைகள் ஒன்று கூடி,
குழந்தைகளுக்கான பாடல்களையும் ,நாடகங்களையும் ,புதிய
கவிதைகளையும் அரங்கேற்றுகிறார்கள் .குழந்தைகள் எல்லோருக்கும்
பரிசும் ,வந்தவர்கள் எல்லோருக்கும் உணவும் வழங்கி
அவருடைய வாரிசுகள் விழாவினை மிகச் சிறப்பாக நடத்தி
மகிழ்ந்து மகிழ்விக்கின்றனர் .
குழந்தைகள் மனப்பாடமாய் கவிதைகளை ஒப்பிப்பதால் அவர்களுடைய
நினைவாற்றல் அதிகரிக்கின்றது.நடுக்கம் ,மனப் பயம் இன்றி
மேடையில் பேசுவதற்கும் ,சொல்லும் திறமையை
அதிகரிப்பதற்கும் இது பயனளிக்கிறது இந்தப் பழக்கமே
ஒரு ஊக்கக் காரணியாக அமைந்து
அவர்களுடைய சிந்தனைத் திறனை வளப்படுத்துகிறது .
இதன் பிற்பலனாக எதிர்காலத்தில் இது படைக்கும் திறனையும்
வழங்குகிறது .அறியாப் பருவத்தில்
செய்யும் மனப்பாடம், பிற்காலத்தில் தரும் பயன்கள் பலப்பல .
சொல்லும் திறன் இல்லாவிட்டால் சிந்திக்கும் திறன் இல்லை .
சிந்திக்கும் திறன் இல்லாவிட்டால் ,படைக்கும் திறன் இல்லை.
படைக்கும் திறன் இல்லாவிட்டால் ,பிறருக்குப் பயன் இல்லை.
பிறருக்குப் பயன் இல்லாவிட்டால் ,பிறவிப் பயன் இல்லை.
எனவே மாணவர்களே ,நீங்கள் சொல்லும் திறனை வளர்த்துக்கொள்ள
வேண்டுமென்றால் ,வலியச் சென்று இது போன்ற நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்ளுங்கள் .இது உங்கள் எதிர்காலத்திற்கு நீங்கள்
நீங்களாகவே செய்யும் ஒரு முதலீடு .
அன்புடன்
காவேரி
No comments:
Post a Comment