விண்வெளியில் உலா-7
வரைபடத் தொகுப்பு
1603 -ல் ஜோகன் பேயர் என்ற வானவியலார் பல புதிய விண்மீன்
கூட்டங்களை இனமறிந்ததோடு,விண்மீன் கூட்டங்களுக்கான
ஒளிப்படத்தொகுப்பு நூலொன்றையும் வெளியிட்டார். இதில்
பழைய வட்டார விண்மீன் கூட்டங்களும் அடங்கியிருந்தன .
18 -ம் நூற்ற்றாண்டின் தொடக்கத்தில் ,அன்றைக்கு இருந்த
சிறிய தொலைநோக்கிகளைக் கொண்டு வானத்தை ஆராய்ந்த வானவியலார் மினுக்காத கோள்கள் ,மினுக்கும் விண்மீன்கள்
தவிர வழக்கத்திற்கு மாறான புதுமையாய்த் தோற்றமளித்த
வேறு சில விண்ணுருப்புகளையும் இனமறிந்தார்கள்.குளிர்கால
இரவில் படர்ந்திருக்கும் மூடுபனி போல ,விண்வெளியில்
அவை மங்கலாகக் காட்சி அளித்ததால் இலத்தீன் மொழியில்
மேகத்தைக் குறிப்பிடும் நெபுலா என்ற சொல்லையே அதற்குச் சூட்டினார்கள் .
வானியல் தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்
1611 -ல் சைமன் மாரியஸ் என்பார் இது போன்ற
இயல்நிலைக்கு மாறான விண்ணுருப்புகள் இப்பேரண்டமெங்கும்
இருப்பதைக் கண்டறிந்தார். எனினும் அது உறுதி
செய்யப்படுவதற்குள் ஒரு நூற்றாண்டு காலம் ஓடி விட்டது.
18 -ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் பிரான்சு நாட்டின்
வானவியலாரான சார்லஸ் மெசியர் என்பார் அன்று வரை
இனமறியப்பட்ட நெபுலாக்களின்ஒளிப்படங்களைத் தொகுத்து
1781 -ல் வெளியிட்டார் .இந்நூல் இன்றைக்கும் ஒரு மேற்கோள்
நூலாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது .இந்நூலில்
கொடுக்கப்பட்டுள்ள.நெபுலாக்கள் அவற்றின் வரிசைப்படி
மெசியர்-1,மெசியர்-2......என்று குறிப்பிடப்படுகின்றன .இதச்
சுருக்கமாக M -1 ,M -2 .... என்றும் குறிப்பிடுவார்கள் .
இதில் மொத்தம் 103 ஒளிப்படங்கள் அடங்கியுள்ளன .
பின்னர் வந்த வில்லியம் கெர்சல் என்பார் உணர்திறன்
மிக்க தொலைநோக்கியின் மூலம் மேலும் பல
நெபுலாக்களை இனமறிந்து தெரியப்படுத்தினார் .
அவருடைய கண்டுபிடிப்புகள் சர் ஜான் என்பாரால்
தொகுக்கப்பட்டன .இத் தொகுப்பு ட்ரியர் என்பாரால்,
1888 -ல் திருத்தப்பட்டு அதிக விவரங்களுடன் ஒரு
முழுமையான பட்டியலாக வெளியிடப்பட்டது .
நெபுலாக்கள் மற்றும் வட்டாரவிண்மீன் கூட்டங்களின்
தொகுப்புகளின் புதிய பொதுப் பட்டியல் (New General
Catalogue of nebulae and cluster of stars ) என்ற தலைப்புடன் கூடிய
அந்நூலும் மேற்கோள் நூலாக இன்றைக்கும் எல்லோராலும் கையாளப்படுகிறது .இதன் பின்னர் இப்பட்டியலில் காணப்படும் நெபுலாக்களை 'NGC ' என்ற முதலெழுத்துச் சொல்லால்
குறிப்பிடுவது வழக்கமாயிற்று .இப் பட்டியலில் மொத்தம் 7480 ஒளிப்படங்கள் உள்ளன . 1895 -ம் ,1908 -ம் ஆண்டுகளில்
இன் நூலுக்கு பிற்சேர்க்கைகள் இணைக்கப்பட்டன .
இதில் அடங்கியுள்ள ஒளிப்படங்களை Index catalogue என்பதால்
'IC ' என்ற சுருக்கெழுத்துடன் குறிப்பிடுகின்றார்கள் .இரு வேறு பட்டியலிலும் இடம்பெற்றிருக்கும் ஓர் ஒளிப்படம்
இரு சுருக்கெழுத்தாலும் குறிப்பிடப்படுகிறது
No comments:
Post a Comment