Friday, November 26, 2010

Vinveliyil ulaa-8

ஸ்கார்பியோ (Scorpio)



விருச்சிக இராசி மண்டலமும் அண்டை விண்மீன்
வட்டாரங்களும்

இது லிப்ரா(Libra) மற்றும் சக்கிடாரியஸ் (Sagittarius)
வட்டாரங்களுக்கு இடையில்அமைந்துள்ள ஏறக்குறைய
100 விண்மீன்களை உள்ளடக்கிய ஒரு பெரிய
வட்டாரமாகும்.இது தேள் வடிவமாகச் சித்தரிக்கப்
பட்டுள்ளது.கிரேக்க புராணத்தில் இது தன் கொடுக்கால்
ஓரியன்(Orion) என்ற வேட்டைக்காரனைத் தீண்டிக் கொன்று விடுகிறது .ஓரியன்மேற்கே மறையும் போது கிழக்கே
ஸ்கார்பியன் உதிப்பதால் இப்படிக் கதை புனைந்து
சொல்லப்பட்டது .இது பால் வழி மண்டலத்தில்
செழிப்பான பகுதியில் அண்ட மையத்தின்
திசையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விருச்சிக இராசிக்குரிய நட்சத்திர மண்டலமான
இவ்வட்டாரத்தில் நமது சூரியன் 23 நவம்பர் முதல்
18 டிசம்பர் வரையிலான காலத்தைக் கழிக்கும்.

ஓரியன் என்ற வேட்டைக்காரன் ,ஆர்டேமஸ் (Artemis )
என்ற பெண் கடவுளையும் அவளுடைய தாயான
லெட்டோ(Letto ) வையும் வணங்கி, தான் எல்லா
விலங்குகளையும் வேட்டையாடிக் கொல்லும்
வல்லமையைத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
ஆர்டேமஸ் வேட்டைத் திறன் மிக்க ஒரு கடவுள்
என்றாலும்,உலக விலங்குகளுக்கு பாதுகாவலனாகவும்
கருதப்பட்டாள். அதனால் ஆர்டேமஸ் ஓரியனின் விஷயத்தை
மேற்கொள்ள ஒரு தேளை அனுப்பி வைத்தார்.ஒரியனும் ,
தேளும் சண்டையிட்டுக் கொண்டபோது தேள் ஒரியனை
கொட்டிவிட்டது. இந்த போட்டிச் சண்டை, ஜுயஸ்
(Zeus ) என்ற முதன்மைக் கடவுளின் கவனத்திற்கு வர,
தேளின் நல்லெண்ணத்தைக் கருதி அதை விண்ணில்
ஒரு விண்மீனாக வடித்தார். அதிகப் பேராசைபடக்
கூடாது என்பது மற்றவர்களுக்கு ஓர் பாடமாக
இருக்கவேண்டும் என்பதற்காக ஆர்டேமஸ் கேட்டுக்
கொண்டதற்கு இணங்க, ஒரியனையும் பிற்பாடு ஜுயஸ்
விண்மீனாக்கி விண்ணில் வடித்தார்.

ஆர்டேமஸ் அழகானவள் என்றாலும் ஓரியன் அவளை
விடவும் அழகானவன். அதனால் அவன் மீது அவளுக்கு
ஒரு பிரியம் இருந்தது . இது அவளுடைய
கூடப் பிறந்த சகோதரன்னான அப்பல்லோ(Appollo) விற்குப்
பிடிக்கவில்லை.அவன் கோபங்கொண்டு ,ஒரு கொடிய
தேளை ஏவி ,ஒரியனைக் கொல்லுமாறு செய்தான் என்றும்
புனைந்து கூறப்பட்டது. ஓரியன் கொல்லப்பட்ட பிறகு ,
ஆர்டேமஸ் , ஜுயஸ்சைக் கேட்டுக்கொள்ள, ஓரியன்
விண்ணில் பாடம் செய்யப்பட்டான்.அதனால் குளிர்
காலத்தில் ஓரியன் விண்ணில் வேட்டையாடி உலா
வருவான். கோடை காலத்தில் தேள் வடிவ விண்மீன்
வட்டாரம் தோன்றுவதால் அவன் மறைந்து போய்
விடுவான்.

அண்டாரஸ்




இவ்வட்டாரத்தின் முதன்மையான விண்மீன் அண்டாரஸ் (Antares ) எனப்படும் ஆல்பா ஸ்கார்பி ( α Scorpi) ஆகும் . அண்டாரஸ் தேள் வடிவ வட்டாரத்தில் தேளின் இதயமாக உள்ளது.




இது வானில் மாபெரும் சிவப்பு நிற விண்மீனாகவும் ,
மாறி மாறி ஒளிரும் ஒரு மாறொளிர் விண்மீனாகவும்
உள்ளது. இதன் பிரகாசம் 4 -5 ஆண்டுகால வட்டச் சுற்றில்
மாறுகிறது .604 ஒளி ஆண்டுகள் தொலைவில்(180 pc) இது
அமைந்துள்ளது. விண்ணில் தெரியும் பிரகாசமான
விண்மீன்களின் வரிசையில் இது 16 வதாக உள்ளது .

காபெல்லா (Capella)என்பது ஒரு நான்கிணைத் தொகுப்பு
விண்மீன். இதில் உள்ள இரு பிரகாசமிக்க விண்மீன்களின்
பிரகாசத்தை ஒன்றெனக்கருதினால் அண்டாரசின்
பிரகாசம் பட்டியலில் 15 வதாக இடம்பெறும்.இதன்
ஆரம் 822 ± 80 சூரிய ஆரம். இதை சூரியன் இருக்கும்
இடத்தில் வைத்தால் ,இதன் விளிம்பு, செவ்வாய்க்கும்
வியாழனுக்கும் இடைப்பட்ட வட்டப்பாதை வரை
விரிந்திருக்கும். இதன் ஒளிர்திறன் (luminosity )
சூரியனைப்போல 10 ,000 மடங்கு அதிகம். இது ஓரளவு
கூடுதலாக அகச் சிவப்புக் கதிர்களை உமிழ்வதால்
வெப்பக் கதிர்வீச்சு முறையில் ஒளிர்திறன் 65,000
மடங்கு சூரியனின் ஒளிர்திறனாகும்.
இதன் நிறை 15 -18 சூரிய நிறை. இதன் பெரிய
உருவமும், குறைந்த நிறையும், அண்டாரசின்
அடர்த்தி மிகவும் குறைவாக இருக்கவேண்டும் என்று
தெரிவிக்கின்றது. மெதுவாக மாறி மாறி ஒளிரக்கூடிய
இது ஒரு மாறோளிர் விண்மீனாகும் .இதன் தோற்ற
ஒளிப்பொலிவெண் 0௦.88 முதல் 1.16 வரை மாற்றம்
பெறுகின்றது. மே 31 ல் அண்டாரசை வானில் தெளிவாகக்
காணமுடியும். அப்போது இந்த விண்மீனுக்கு எதிர்
திசையில் நமது சூரியன் இருப்பதால்
இது இயலுவதாக இருக்கின்றது.அப்போது அண்டாரஸ்,
சூரியன் மறையும் போது தோன்றி, உதிக்கும் போது
மறைகின்றது. நவம்பர் 30 க்கு முன்பின்னாக இரண்டு
அல்லது மூன்று வாரங்களில் சூரியனின் பிரகாசமான
பின்புல வெளிச்சத்தில் இது புலப்பட்டுத் தெரியாததால்
இந்த விண்மீனைப் பார்க்க முடிவதில்லை. இது பூமியில்
தென் அரைக் கோளப் பகுதியை விட, வட அரைக்
கோளப்பகுதியில் இப்படித் தெரியாதிருக்கும் காலம்
கூடுதலாக இருக்கும்.

இதன் நிறம் நமது சூரியக் குடும்பத்திலுள்ள
செவ்வாயைப் (Mars ) போல உள்ளது . அதுவே இதற்குப்
பெயர் சூட்டியது எனலாம். .எரஸ் (ares ) என்பது கிரேக்க
மொழியில் செவ்வாய்க்கான பெயர்.அண்டாரஸ் என்றால்
செவ்வாயின் போட்டியாளன் என்று பொருள். நிலா உலா
வரும் வீதியில் இதற்கு கேட்டை என்று பெயர்.





அண்டாரஸ் ஒரு இரட்டை விண்மீன். அதாவது ஒன்றை
ஒன்று சுற்றிவருமாறு அமைந்த இரு விண்மீன்களாகும் .
அண்டத்திலுள்ள விண்மீன்கள் எல்லாம் தனித்த
விண்மீன்கள் இல்லை. சில இரட்டையாகவும் வேறு
சில மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட விண்மீன்களின்
தொகுப்பாகவும் இருக்கின்றன இரட்டை விண்மீன்களில் இரு விண்மீன்களும் அவற்றின் பொது மையத்தைப் பற்றி
ஒன்றையொன்று சுற்றி வருகின்றன .மூன்று மற்றும்
அதற்கும் மேற்பட்ட விண்மீன்களில் ,சூரியனைச் சுற்றி
வரும் கோள்கள் போல ,ஒரு பெரிய விண்மீனை பிற
விண்மீன்கள் வெவ்வேறு சுற்றுப் பாதைகளில் சுற்றிவரும்.
ஒவ்வொரு அண்டத்திலும் 46 % இரட்டை விண்மீன்களும்
15 % சூரியனைப் போலத் தனித்த விண்மீன்களாகவும்
எஞ்சிய 39 % பல் தொகுப்பு விண்மீன்களாகவும் உள்ளன.

அண்டாரஸ் 3 வினாடிகள் கோண விலக்கத்துடன் அமைந்த
ஒரு துணை விண்மீனைக் கொண்டுள்ளது. இது 5 என்ற
ஒளிப் பொலி வெண்ணுடன் வெண்நீல நிறத்துடன்
அண்டாரஸை 900 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றிவருகிறது.
இத் துணை விண்மீன் சூரியனை விட 17 மடங்கு
ஒளிவீசுகிறது. அண்டாரஸ் ஓரியன் வட்டாரத்திலுள்ள
பெடல்ஜியூஸை(Betelgeuse) விடவும் வெப்பமிக்கது. ஏறக்குறைய
700 சூரியன்களின் ஒளியையும் வெப்பத்தையும் கதிர்வீச்சையும்
உமிழ்கிறது. பிரகாசமான அண்டாரசுடன் அதன் துணை
விண்மீனை இனமறிவது மிகவும் கடினம் .

செவ்வாய்க்கு ரோமன் மொழியில் ‘ares’ என்று பெயர் .
ஏரஸ் என்பது கிரேக்கர்களின் போர் கடவுளாகும்.
இக் கடவுளின் உருவம் போருக்குச் செல்லும்
வீரர்களுக்கு மன தைரியத்தை ஊட்டுமாறு இருக்க
வேண்டும் என்பற்காக கோபக்கனல் தெறித்து விழுமாறு
அதன் கண்கள் சிவப்பாக்கப்பட்டிருந்தது. இதுவே
செவ்வாய் கோளுக்கு செந்நிறத்தை தந்தது என்று
காரணம் கற்பிப்பார். அண்டாரஸ், விண்ணில் தெரியும்
சிவப்பு நிற விண்மீன்களுள் மிகவும் சிவப்பானது.சிவப்பு
விருப்பத்தின் நிறமாகக் கருதப்பட்டதால் ,அண்டாரஸ்,
வாழ்க்கையில் விருப்பத்தின் காரணமாக நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் கார்த்தாவாக உள்ளது என்பர்.

அண்டாரஸ் பிற சிவப்பு விண்மீன்களைப் போல தன்னைச்
சுற்றி பரந்து விரிந்துள்ள ஒரு செந்நிற மேகத்தைப்
பெற்றுள்ளது. இது 5 ஒளி ஆண்டுகள் தொலைவு வரை
விரிந்துள்ளது. இது தன் நிறத்தையும் கிளர்ச்சியுற
ஆற்றலையும் அண்டாரசிலிருந்து பெறுகிறது.

ஒப்பீடு

________________________________________________________________________

                                                         ஒளிப்பொலிவெண்
விண்மீன்விட்டம் /வெப்ப /தோற்ற*/சார்பிலா**/அடர்த்தி/நிறை/             
மைல்                        நிலை(o F)                                       (சூரியன்=1) (சூரியன் =1)

சூரியன் 885,000      ௦௦௦ 9900           -26 .7             +4 .8              1.0                  1.0

அண்டாரஸ் 500,000,000  6300  +0.98            -4.0           1/1,000,000      10-15

______________________________________________________________________



                             
*பூமியிலிருந்து பார்க்கும் போது விண்மீனின் பிரகாசம்

**எல்லா விண்மீன்களும் பூமியிலிருந்து சம தொலைவில் இருக்கும் போது விண்மீனுக்கு இருப்பதாகத் தோன்றும் பிரகாசம். இதுவே உண்மையான ஒப்பீட்டு பிரகாசமாகும்.

.

அண்டாரஸ் B என்ற துணை விண்மீன் 2.9 வினாடி
கோணவிலக்கத்துடன் அமைந்துள்ளது. இது 550
வானவியல் தொலைவில் (Astronomical unit) உள்ளது.
இதன் ஒளிப்பொலிவெண் 5.5 .இது 1/370 அண்டாரசின்
பிரகாசத்திற்குச் சமம். எனினும் சூரியனை விட 170
மடங்கு பிரகாசமாக உள்ளது. அண்டாரஸ் A-யைச்
சுற்றி வட்டப்பாதையில் 878 ஆண்டுகளுக்கு
ஒருமுறை சுற்றி வருகிறது. துணை விண்மீன் பச்சை
நிறத்தில் காட்சி தருகிறது. ஆனால் இது அண்டாரசின்
சிவப்பு நிறத்தில் ஏற்படும் ஒரு நிறஜாலம் என்று
கண்டுபிடித்துள்ளனர்.

5 டிகிரி கோண விலக்கத்திற்கு உட்பட்டு நிலா உலா
வரும் கதிர் வீதியை ஒட்டி இருக்கும் முதல்
ஒளிப்பொலிவெண்ணுடைய நான்கு ராஜ விண்மீன்களில்
(ராயல்) அண்டாரசும் ஒன்று . அதனால் இது நிலவால்
இடைமறைப்புக்கு ஆளாகும் வாய்ப்பைப்பெற்றுள்ளது.
அப்போது அண்டாரஸ்-B யைக் காணமுடிகிறது.
31 ஜூலை 2009 , அண்டாரஸ் நிலவால் இடைமறைப்பு
செய்யப்பட்டது.

இதன் செந்நிறம் சரித்திரக் காலந்தொட்டே இதற்கு
ஒரு தனிச் சிறப்பைப் பெற்றுத் தந்துள்ளது.
எகிப்தில் கோயில்கள் எல்லாம் அங்கிருந்து அண்டாரசைக்
காணும்படி கட்டமைக்கப்பட்டுள்ளன .அங்கு நடைபெறும்
விழாக்கள் அனைத்தும் அண்டாரசின் தோன்றுதலோடு தொடர்புபடுத்தப்பட்டன.

No comments:

Post a Comment