Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Sunday, September 30, 2012
Kavithai
கவிதை
ஓர்ஊரில் ஓர் ஏழைக் குடியானவன்
அழகான ஆண்குதிரை இருந்தது அவனிடம்
அரசன் ஒருநாள் நகர்வலம் வந்தான்
ஆசைப்பட்டான் அந்த அசுவம் கண்டு
குறைவின்றி பொருள் தருவதாய்ச் சொன்னான் .
குடியானவன் குதிரையைக் கொடுக்க மறுக்க
கொற்றவன் காரணம் யாதென வினவினான்
இன்னொரு பிள்ளைபோல இந்தக் குதிரை
இதைவிட்டுப் பிரிய மனமில்லை என்றான்
குடிசையில் வாழ்ந்தவன் குதிரையை விற்று
கோட்டையில் வாழும் வாய்ப்பை கோட்டைவிட்டான்
ஊரார் அவனைப் போல எண்ணவில்லை
உலகம் நினைத்ததையே அவனும் நினைக்கவில்லை
நாட்டியக் குதிரை தோட்டத்தில் மேய்ந்தபோது
நச்சுப் பாம்பொன்று மிதிபட்டு இறந்தது
குதிரையே குலக்கடவுள் போல வந்து
அவன் குடும்பத்தைக் காத்தது என்றும்
அன்றைக்கு அரசனிடம் விற்றிருந்தால் இன்றைக்கு
இல்லாதிருப்பான் என்றும் சொல்லக் கேட்டான்
ஒருமாதம் ஓடிய பின் ஒருநாள்
ஓடி மறைந்தது அந்தக் குதிரை
எங்கு தேடியும் கிடைக்கவில்லை .
ஏமாளி இவனைப் போல எவனுமில்லை
என்று எல்லோரும் எள்ளி நகைத்தனர்
ஊரார் அவனைப் போல எண்ணவில்லை
உலகம் நினைத்ததையே அவனும் நினைக்கவில்லை
ஓடிப்போன குதிரை திரும்பி வந்தது.
இன்னொரு குதிரையையும் கூட்டிவந்தது
அறிவிலி என்றோர் அப்பொழுது ஆய்ந்தோனென்றார்
புதிதாய் வந்த குதிரையை அடக்க முயன்ற
புதல்வன் தவறி விழுந்து நொண்டியானான்
ஆன்றவன் என்றோர் அப்பொழுது அறிவிலியென்றார்
நாட்டியக் குதிரையால் நாட்டில் வித்தைகாட்டி
நற்பொருள் ஈட்டி நாளும் உயர்ந்தபோது
அறிவிலி மீண்டும் அதிபுத்திசாலியானான்
உழைத்துக் களைத்த குதிரை உடன் இறந்தது
உலகம் அவனை அதிருஷ்டமில்லாதவன் என்றது
ஊரார் அவனைப் போல எண்ணவில்லை
உலகம் நினைத்ததையே அவனும் நினைக்கவில்லை
அண்டை நாட்டான் போர் தொடுத்தான்
அகநகர் காக்க வீட்டுக்கு ஒருபிள்ளை கேட்டான்
முதியவர் நொண்டி குழந்தைகள் வேண்டாமென்ற
முடிவால் நொண்டி மகன் வீட்டில் இருந்தான்
பெற்ற பிள்ளைகளை மற்றவர் அனுப்பி வைத்து
பெயரன் திரும்பி வருவானா மாட்டானா
நாட்கணக்கில் மனம்மறுகித் தவித்தபோது
அதிருஷ்டமில்லாதவன் என்றவன் அதிருஷ்டசாலியானான்
ஊரார் அவனைப் போல எண்ணவில்லை
உலகம் நினைத்ததையே அவனும் நினைக்கவில்லை
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்
சொல்லுவார் சொன்னதால் வெல்லுவார் ஒருநாளும்
வெல்லாமற் போனதில்லை என்பதே இயற்கை
Friday, September 28, 2012
Cartoon
கார்ட்டூன்
மயன்மார் நாட்டின் புரட்சித் தலைவி சான் சூ (San Suu)அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உரை யாற்றிய போது,காந்தியடிகளின் போதனைகளை உலக மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .
தீவிரவாத அச்சுறுத்தல்கள் மிகுந்து வரும் இந்நாளில் காந்தியடிகளின் அகிம்சை வழிமுறை மட்டுமே உலகைக் காப்பாற்றும் சக்தி வாய்ந்தது என்பதை நாம் அறிந்திருக்கின்றோமோ இல்லையோ சான் சூ அதை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.அதனால் தான் உலக மேடையில் உரக்கக் கூவியதோடு மட்டுமின்றி அரசியல் தலைவர்களை விட்டுவிட்டு உலகை இனி ஆளப் போகும் மாணவர்களின் எண்ணத்தில் இந்த விதையைத் தூவியிருக்கிறார் நம் நாட்டின் அப்துல் கலாம் போல.
இந்தியாவில் இனி ஆளப் போகும் மாணவர்களையும் இந்திய அரசியல்வாதிகளே ஆண்டு கொண்டிருப்பதால்,காந்தியடிகளின் போதனைகளை இங்கே மாணவர்களை விட அரசியல் தலைவர்களே முதலில் படித்துப் பின்பற்ற வேண்டும்.
Thursday, September 27, 2012
Micro aspects of developing inherent potentials
Micro aspects of developing inherent potentials
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன் அதைப் பற்றி ஒருமுறையாவது முழுமையாகச் சிந்திக்க வேண்டும்.செல்லும் வழி தெரியாவிட்டால் இலக்கு இருந்தும் எவ்வளவு வேகமாக வண்டியைச் செலுத்தினாலும் செல்லுமிடத்தை ஒருபோதும் சென்றடைய முடியாது அந்தச் செயலை ஏன்,எதற்காகச் செய்கிறோம் என்பதைச் சரியாகத் தீர்மானம் செய்யுங்கள் இது பெரும்பாலும் அதனால் அவருக்கும் ,அவரைச் சார்ந்தவர்களுக்கும் ,பிறருக்கும் கிடைக்கும் பயன்களின் விகிதத்தையும் பயனைத் துய்க்கும் இடைக்காலத்தின் நெடுக்கையையையும் பொருத்திருக்கும்.பொதுவாக ஒருவர் நெடுங்காலத்திற்குப் பிறகு கிடைக்கும் பயனுக்காக ஒரு செயலில் இறங்குவதை அதிகம் விரும்புவதில்லை. செயலால் கிடைக்கக் கூடிய உடனடி மற்றும் பிற்பயன்கள் யாவை என்பதைத் தெரிந்து கொண்டால் செயலில் ஈடுபடக் கூடிய விருப்பம் தூண்டப்படும். நீங்கள் விரும்பிய செயலைச் செய்ய முயலும் போது அதை எந்தத் தடையுமின்றி செய்து முடித்துவிட முடியாது.ஒரு பொருளின் வேக மாற்றத்தால் ஏற்படும் நிலை மாற்றத்திற்கு அந்தப் பொருளின் நிறையே ஒரு தடையாக இருப்பது போல ஒவ்வொரு செயலுக்கும் தடைகள் இருக்கவே செய்கின்றன. சில புறத் தடைகள் -சில அகத் தடைகள். எல்லோரும் புறத் தடைகளைப் பற்றி தெரிந்து கொண்ட அளவிற்கு அகத் தடைகளைப் பற்றி புரிந்திருப்பதில்லை.உண்மையில் புறத்தடைகளை விட அகத்தடைகளே உள் எதிரியாக இருந்து கொண்டு அதிகப் பாதிப்பை ஏற்படுத்திகின்றன. தடைகளைக் கண்டு பயந்தால் செயலே செய்ய முடியாது செய்யப் போகும் செயலுக்கு எவை எல்லாம் தடைகளாக இருக்கின்றன எவை எல்லாம் அனுகூலங்களாக இருக்கின்றன என்பதை நாம் முதலில் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தடைகளைச் சந்தித்து வெற்றிகொள்ள வழிகள் இருக்கின்றனவா என்பது பற்றியும், அனுகூலங்களை வீணாகப் போய்விடாமல் பயன்படுத்திக் கொள்ளும் முறைகளைப் பற்றியும் அலசி அறிந்து கொள்ள வேண்டும்.தடைகளே இல்லாமல் எந்தச் செயலும் இல்லை என்பதால் தடைகளை ஒருவர் சந்தித்தே ஆகவேண்டும்.அகத் தடைகள் செயலைச் செய்ய விடாது கால தாமதத்தை ஏற்படுத்தும்.தடைகள் இருப்பதை போல அனுகூலங்களும் இருக்கும். அதைத் தெரிந்து கொண்டு சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் ஆற்றின் நீரோட்டத் திசையிலேயே நீச்சலிட்டது போல செயல் எளிதாக இருக்கும். பலவீனங்களை பலமாக மாற்றிக்கொள்ளும் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு எதையுமே சாதிக்க முடியும். ஒரு தாய் தன்னுடைய 2 வயதுக் குழந்தையை ஆற்றின் எதிர் கரையிலேயே விட்டுவிட்டு இக்கரைக்கு வந்து விட்டாள். திரும்பவும் அக்கரைக்குப் போக பரிசல் இல்லை. அப்பொழுது ஆற்றில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது மழை வேறு பெய்து கொண்டிருந்தது. குழந்தையைக் காப்பாற்ற உதவிக்கு அழைத்தாள். எல்லோரும் வெள்ளத்திற்கு பயந்து பின் வாங்கினார்கள். இருட்டி விட்டதால் அனைவரும் ஊருக்குள் சென்றுவிட்டனர். மறு நாள் காலையில் அந்தத் தாய் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு வீட்டில் இருப்பதைப் பார்த்ததும் எல்லோரும் அவள் அருகில் வந்து எப்படிக் குழந்தையைக் காப்பாற்றினாய் என்று கேட்டனர். அதற்கு அவள் சொன்னாள் , "அது என் குழந்தை " என்று.காப்பாற்றியே ஆகவேண்டும் என்று தீர்மானமாய் இருக்கும் போது தடைகள் எவ்வளவு வலிமையானவைகளாக இருப்பினும் அவற்றை எதிர்கொள்ளும் மனதையிரியத்தை அந்தத் தாய் பெற்றாள்.அது போல ஒரு செயலைச் செய்து முடித்தே ஆகவேண்டும் என்று தீர்மானமாய் இருந்தால் இடைத் தடைகள் ஒரு பொருட்டே அல்ல. அந்தத் தாய் அன்று இரவு ஆற்றின் கரையோரமாக நெடுந்தொலைவு சென்று ஆறு அகன்றிருக்கும் இடம் பார்த்து ஆற்றைக் கடந்து அக்கரை சென்று தன் குழந்தையை தானே மீட்டாள் . அந்தத் தாய் smart ஆகச் செயல் பட்டாள் ஆற்றில் நீரோட்டத்தின் வேகம் அகன்றிருக்கும் இடத்தில் குறைவாக இருக்கும் என்பதைத் தனக்கு அனுகூலமாக்கிக் கொண்டாள்.
Subscribe to:
Posts (Atom)