Friday, September 14, 2012

Micro aspects of developing inherent potential


ஒழுக்கம் விழுப்பம் தரும் ஒழுக்கத்தைப் போற்றுவதால் ஒருவர் தன்னோடு தன் இனத்தாரையும் சமுதாயத்தையும் வளப்படுத்த முடியும்.ஒழுக்கமில்லாத ஒருவருடைய முன்னேற்றம் அவருக்கு வேண்டுமானால் முன்னேற்றமாகத் தோன்றலாம்.ஆனால் உண்மையில் அது உறுதிச் சமநிலையில் இல்லாத(unstable equilibrium) ஒரு முன்னேற்றமாகவே இருக்கும்.ஒருவர் முன்னேறுவது மற்றவர்களை முன்னேற்றுவதற்குத்தான் என்பது இயற்கையின் விதி .இயற்கையிலிருந்தே நாம் இதைக் கற்றுத் தெளியமுடியும். அதிகாலையில் எழுந்து அன்றாடப் பணிகளைத் தொடங்குவது நல்லொழுக்கம்.ஒரு மனிதனுக்கு உறங்கி ஓய்வெடுக்க 6-7 மணிநேரம் போதுமானது.இதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கினால் அது சோம்பலை வளர்க்கும் .வாழ்கையின் பயனுறு திறனைப் பெரிதும் குறைப்பதில் இதற்குப் பெரும் பங்குண்டு. அதிகாலையில் 3 மணிக்கு எழுந்து வேலைகளைத் தொடங்குவவர் முனிவர் ,4 மணிக்கு எழுந்து இயங்குவவன் ஞானி,5 மணி எனில் அவன் அறிஞன் 6 மணி ஆனால் அவர்கள் மக்கள்,7 மணியும் அதற்கு அப்பாலும் என்றால் அவர்கள் எருமை என்று சிலர் கூறுவார்கள் இந்த அட்டவணையில் நாம் எந்த ரகம் என்றும் நாமே முடிவு செய்து கொள்ளலாம்.ஒரு சிலர் அதிகாலையில் எழுந்து பணிகளைத் தொடங்குவதற்குப் பதிலாக இரவில் அதிக நேரம் விழித்திருப்பர்.அதிகாலை என்பது உடல் உழைக்கத் தொடங்கும் நேரம் ,இரவு என்பது உடல் ஓய்வைத் தேடும் நேரம்.மூளை புத்துணர்வுடன் சிந்திக்கவும், உடல் சோர்வின்றி பயனுதிறனுடன் செயல்படவும் அதிகாலைப் பொழுதே அதிகம் அனுகூலமானது.மூளையும் உடலும் ஒருங்கிணைந்து சிந்தனையும் செயலும் ஒன்றுசேர்ந்து வெளிப்பட அதிகாலையில் முடிவதைப் போல இரவில் முடிவதில்லை. எழுந்திருப்பதும் விழித்திருப்பதும் மட்டுமே நற்பயன் தருவதில்லை. செய்து முடிக்க வேண்டிய பணிகள் ,இனிச் செய்ய வேண்டிய பணிகள் அவற்றைச் செம்மையாகச் செய்ய தேவையான வற்றைத் தேடுதல் போன்ற வற்றை த் தொய்வின்றி படிப்படியாச் செய்யவேண்டும் .ஒரு நாளில் கிடைக்கும் 24 மணி நேரத்தையும் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று முன் திட்டமிட்டுக் கொள்ளவேண்டும் .உறங்குவதற்காக நேரம் ஒதுக்கியது போக மீதி நேரத்தை முழுமையாக ஒவ்வொரு நாளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் இடையிடையே சிறிய அளவில் ஓய்வும் இருக்கலாம் ஆனால் ஓய்வு மட்டுமே இருக்கக் கூடாது. ஒவ்வொரு நாளும் பல் துலக்குவது,குளிப்பது தலை வாருவது,சாப்பிடுவது என அன்றாட வேலைகளைச் செய்வதைப் போல தினமும் செய்தித்தாள் படிப்பபடிப்பதையும், தொலைக் காட்சியில் அறிவுக்கு விருந்தாகும் செய்திகளைப் பார்ப்பதையும் வழக்கமாகக் கொள்ள வேண்டும். அன்றாடம் வரவு -செலவுகளை எழுதி வருதல்,பொது அறிவு நூல்களைப் படித்தல், உடைகளைத் துவைத்து மடித்து வைத்தல், வெளி வேலைகளை முடித்தல்,கடிதம் எழுதுதல்,எதிர்காலத் திட்டமிடல், சேமிப்பு எனப் பல்வேறு வேலைகளையும் திட்டமிட்டுச் செம்மையாகச் செய்ய நேரம் ஒதுக்கத் தவறாதீர்கள். பொழுது போக்குவதற்கு எனக் கொஞ்சம் நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கக் கூடாது ,ஓய்வும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொருநாளும் இரவு வருகிறது.சுவர் இருந்தால்தான் சித்திரமே எழுதமுடியும் என்று கூறுவார்கள்.அது போல உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் தொடர்ந்து உழைக்க முடியும். பொழுது போக்கு என்பது மனதை இறுக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்ளும் ஒரு எளிய வழி. இறுக்கமான மனதில் எண்ணங்கள் வன்மையாக இருக்கும் வாய்ப்பே அதிகம்.நம் எண்ணங்களால் நமக்கு நாமே எதிரியாக மாறும் நிலை உருவாகும். இளகிய மனதில் எண்ணங்கள் மென்மையாக இருக்கும் என்பதால் பாதிப்பு என்று இருந்தாலும் கடுமையாக இருப்பதில்லை.

No comments:

Post a Comment